இப்பக்கத்தில் மூலிகை உணவுகள் பற்றிப் பார்க்கவிருக்கிறோம். மூலிகை உணவு நம் முன்னோர்களின் உணவுப் பழக்கங்களில் இயல்பான ஒன்றாக இருந்தது. இந்த அவசர உலகத்தில் நம் உணவுப் பழக்கம் வெகுவாக மாறி விட்டது. பழமையான வாழ்க்கை முறையில் இன்றும் நாம் அனுசரிக்கக் கூடியவைகளில் ஒன்று நம் உணவு முறை. நலமான உணவு முறையைக் கடைப்பிடிப்பதன் மூலம் நலமான வாழ்வு வாழலாம்.
இப்பகுதியில் மூலிகைத் தேநீர் செய்யும் முறையும் இணைக்கப்பட்டுள்ளது.
மூலிகைத் தேநீர் என்றாலே அலறி புடைத்து ஓடியவர்களைக் கூட இப்போது மூலிகைத் தேநீர் பக்கம் வர வைத்தது எது என்பது சொல்லாமலே தெரிந்திருக்கும். பொதுவாக மூலிகைத் தேநீர் என்றால் மூக்கைப் பிடித்து குடிக்க வேண்டியிருக்கும், அதில் ருசி இருக்காது என்கிற பரவலான கருத்து உண்டு. ஆனால், எல்லா வகையான மூலிகைத் தேநீரும் அப்படி இருக்காது என்பது ஒரு புறமிருக்க, மூலிகைத் தேநீர் தரும் நன்மைகள் பற்றி அறிய வரும் போது, ருசிக்காத மூலிகைத் தேநீரும் ருசிக்கத் தொடங்கி விடும். இப்படியெல்லாம் எழுதுகிறேனே, நான் மூலிகைத் தேநீர் குடிக்கிறேனா என்று நீங்கள் கேட்டால்…கேட்டால் பதில் சொல்கிறேன்.
மூலிகைத் தேநீரின் நன்மைகள்
மூலிகைத் தேநீரைத் தொடர்ந்து குடிப்பதால் ஏற்படும் பயன்களில் சில:
- சளி, இருமலைப் போக்குகிறது.
- நோய் எதிர்ப்பு திறனை வளர்க்கிறது.
- இருதயத்தின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.
- நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்கிறது.
- சீரண ஆற்றலை அதிகரிக்கிறது.
- மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.
- சரும நலனைப் பாதுகாக்கிறது.
- இரத்த அழுத்தத்தைச் சீராக வைக்க உதவுகிறது.
- இளமையான தோற்றத்தைத் தருகிறது.
- மன அழுத்தத்தைப் போக்குகிறது.
இப்பகுதியில், பல வகையான மூலிகைத் தேநீர் பற்றியும், அவற்றின் தயாரிப்பு முறைகள் பற்றியும் வரும் நாட்களில் பார்க்கலாம்.