தந்தையர் தின நல்வாழ்த்துகள்

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல்.

                                         – திருவள்ளுவர்

தன் கருவைச் சுமந்த வாழ்க்கைத் துணையை

தன் நெஞ்சில் சுமந்த மாதங்களின் ஒவ்வொரு நொடியிலும்,

பிரசவ வலியை மனைவி எதிர்கொள்ள

வலியையே பிரசவித்தாற் போல் வெளியில் அல்லாடிய தவிப்பிலும்

தந்தையானவன் தாயும் ஆகிறான்.

 

தன் கடின மடியைத் தன் சிசுவுக்கு மெத்தையாக்கிய பேரன்பில்

மழலையின் தூக்கத்திற்குத் தன் தூக்கம் தொலைத்து

தோளில் சாய்த்து உலாத்திய இரவுப் பொழுதுகளில்

தந்தையானவன் தாயும் ஆகிறான்;

 

உலகின் முன் தந்தையான அந்த நொடி தொடங்கி

அவனின் உலகமாக அவன் குழந்தை ஆனது.

 

குழந்தையின் முதல் அழுகுரலில் கிளர்ந்த மனது,

பிறந்த குழந்தையைத் தரிசித்த முதல் நொடி உணர்ச்சிப் பெருக்கு,

பிரசவித்த மனைவியை அணைத்து அடைந்த நெகிழ்ச்சி,

தன் மழலைச் செல்வத்தை முதல் முறையாகக் கைகளில் ஏந்திய சிலிர்ப்பு,

என தந்தையான உணர்வு அவனை ஆட்கொண்ட அந்நேரமே

தன் தந்தை அன்பை அவன் முற்றுமாய் உணர்ந்த நொடி.

 

அன்பை வெளிக்காட்டத் தெரியாதவரா அப்பா? இல்லை என்றுதான் சொல்வேன்;

வீட்டினுள் கால் பதிக்கும் முன்பே தன் பிள்ளையின் காலணியைக் கண்கள் நாடுவதும்

வெளியே சென்ற பிள்ளை வீடு திரும்புவதற்குள் ஓராயிரம் முறை கடிகாரத்தை நோக்குவதும்

தன் தேவைகளைப் பின் தள்ளி, தன் குழந்தையின் அவசியமற்ற விருப்பத்தையும் நிறைவேற்றுதலும்

இவை யாவும்

தந்தை அன்பின் ஒரு வெளிப்பாடு, ஒரு பரிமாணம்.

 

பிள்ளைகள் தோல்வியில் துவள விடாமல்

நானிருக்கிறேன் என்று கைப்பற்றுவதும்

பிள்ளைகள் வெற்றி  பெறும்போது விலகி நின்று பரவசப்படுவதும்

தந்தை அன்பின் வெளிப்பாடுதான்.

 

ஊருக்கு அரசனானாலும் அம்மாவுக்கு பிள்ளைதான் என்ற பழமொழி போல்,

ஊருக்கு அரசனானாலும் தன் மனைவி, பிள்ளை முன் அன்பால் விரும்பித்

தோற்கும் எல்லா பொழுதுகளிலும்

தந்தை அன்பின் ஆழம் பிரமிப்பூட்டுகிறது.

 

தன் காலத்திற்குள் தன் குழந்தைகள் நலம் பெற்று சிறக்க விரும்புவது மட்டுமில்லாமல்

தன் காலம் முடியும் போது தன் வளர்ந்த குழந்தைகளுக்குத்

தோள் கொடுக்கத் தோழமை வேண்டும் என நினைக்கும் பொழுதில்

தந்தை அன்பு வெல்கிறது.

 

எப்படி வாழ வேண்டும் என்று கற்றுத் தராமல்

எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டும்

தந்தை, திருவள்ளுவரின் உதாரணத் தந்தை.

 

வெட்டவெளியில் கடும் வெயிலிலும், மழையிலும்,

புயலிலும் வீழாமல் நின்று காக்கும் மரம் போல்,

வாழ்க்கையின் சவால்களை சமரசமில்லாமல் எதிர்கொண்டு காக்கவும்,

காக்கக் கற்றுக் கொள்ளவும் செய்யும் தந்தை,

பிள்ளையின் வரம்.

 

உள்ளத்துக்கு உறுதியூட்டும் கம்பீரமான மலை,

ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது என்ற வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுத் தரும்

அமைதியான, ஆழமான நீரோட்டம்,

உற்சாகம், ஊக்கம், நேர்மறை எண்ணங்கள் தரும் பசுமை

என இயற்கைக் கொடைகளின் கலவை அப்பா.

மனம் சோர்வுறும் தருணங்களில்

மரமாய் இளைப்பாறல் தருவதும்

இலக்கைத் தவற விட்ட தருணத்தில்

காலை சூரியனாய் நம்பிக்கையூட்டுவதும்

எட்டிப் போகும் வெற்றியால் மனம் சுருங்கும் போது

வானம் வசப்படும் என்று ஊக்கமூட்டுவதும்

தாய்மை உணர்வு கொண்ட தந்தயால் மட்டுமே சாத்தியம்.

தன் பிள்ளைகளுடன் அன்பால் இணைந்து, உணர்வால் பிணைந்து,

வலிமையால் வழிநடத்தும் ஒவ்வொரு தந்தைக்கும்,

தன் வாழ்க்கைத் துணையின் மனதில் அவள் தந்தையின் இடத்தைப்

பிடித்திருக்கும் ஒவ்வொரு கணவனுக்கும்,

தனக்கான இலக்குகளை நிர்ணயிக்காமல், தன் குடும்பத்துக்கான இலக்குகளை நிர்ணயிக்கும்

உலகின் ஒவ்வொரு குடும்பத் தலைவனுக்கும்

தன் பிள்ளைகளுக்குத் தகப்பனாகவும் வாழும் தந்தையான தாய்க்கும்

நெஞ்சம் நிறைந்த உளப்பூர்வமான தந்தையர் தின நல்வாழ்த்துகள்.

சமர்ப்பணம்

கொரோனாவிற்கு பலியான எத்தனையோ தந்தைகள்

இறுதி நேரத்தில்  தன் பிள்ளைகளை நினைத்து ஏங்கி

இயலாமையால் இறப்பிற்கு முன்னையே இறந்திருப்பார்களே!

அந்த தந்தையரின் நினைவுகளுக்கு சமர்ப்பணம்.

தந்தை தாயை இழந்த அந்தக் குழந்தைகளைத்

தந்தை தாயாக அரவணைப்போம்.

Picture of இரமா தமிழரசு
Rama Thamizharasu

Welcome to yogaaatral. I am a yoga therapist, SEO consultant, writer and translator. If you love pets, we invite you to visit our pet blog @ https://voiceofapet.blogspot.com/ and our YouTube Channel http://www.youtube.com/@PetsDiaryandMomsToo

10 Responses

  1. மனதை நெகிழவைத்து,உண்மையை சூளுரைத்த ஆழ்ந்த வரிகள்

    1. மிக்க நன்றி. ‘அப்பா’ என்ற வார்த்தையே நெகிழ வைத்து விடுகிறது.

  2. மிகவும் அருமையாக இருக்கிறது..
    ஒரு மனிதன் எப்படி சிறந்த அப்பாவாக இருக்க முடியும் என்பதை அழகுற எழுதி இருக்கிறாய்.

    1. மிக்க நன்றி. ஆம், சிறந்த அப்பாதான் சிறந்த மனிதராகவும் இருக்க முடியும்.

  3. தாயுமானவராகிய தந்தையை தங்கள் வாழ்த்துகளால் அரவணைத்த தங்களின் அப் பா மிக சிறப்பு!
    எல்லாமே தந்தாய் நீயும் எந்தாய் எந்தையே என மீண்டும் புரிய வைத்தது தங்களின் தந்தையர் தின வாழ்த்துகள்!

    1. மிக்க நன்றி! மிகவும் அருமையான ‘பா’ராட்டு. தந்தை அன்பின் ஆற்றல் அபாரமானதுதான்.

  4. அழகான , ஆத்மார்த்தமான உணர்வுகள் வெளிப்படும் வரிகள்! தந்தையர் யாவரும் படித்து பரவசப்பட வேண்டிய பதிவு! அருமை

    1. மிக்க நன்றி! அப்பா என்று சொல்லும் போதே மனம் பரவசப்பட்டுத்தான் போகிறது.

Comment

Your email address will not be published. Required fields are marked *

  • Subscribe

    * indicates required
  • Search
  • Similar to Keezhadi excavations which bring to light the rich past of the Thamizh civilization, Thirumoolar's Thirumanthiram draws our attention to the unbelievably rich knowledge possessed by ancient Thamizh civilization in the field of medicine. It will be only right to say that Thirumoolar would have been the world's first anatomical scientist. 
  • English (UK)