விலங்கினங்கள் அழிந்து வருவதைப் பற்றித் தொடர்ந்தும் நாம் கேட்டுத்தான் வருகிறோம். கடந்த நூறு ஆண்டுகளில் மட்டுமே பல அரிய வகை விலங்குகள், அதுவும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த பூமியில் வாழ்ந்து வந்த விலங்குகள் முற்றிலுமாய் அழிந்து போயிருக்கின்றன. இத்தகைய பேரழிவிற்குக் காரணம் மனிதர்களின் செயல்பாடுகளே.
மனிதர்கள் உருவாகும் முன்னரே இந்த விலங்குகள் பூமியில் வாழ்ந்தன. ஆனால் மனிதர்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய சில ஆயிரம் ஆண்டுகளில், இவை பூமியில் இருந்து முழுமையாக மறைந்தன. இது இயற்கையின் தவறால் அல்ல; மனித குலத்தின் தவறான நடவடிக்கையால் தான். இது ஒரு உயிரினத்தின் அழிவு மட்டுமல்ல. கோடிக்கணக்கான ஆண்டுகள் பூமி வளர்த்த பழமையான உயிரின் அழிவாகும்.இது போன்ற துயரக் கதைகள் இனியும் தொடர நாம் அனுமதிக்கக் கூடாது.
1. பைஜி டால்பின் (Baiji Dolphin)
“யாங்சியின் தேவதை” என்றுஅழைக்கப்பட்ட இந்த பைஜி டால்பின், அணைகள் கட்டுமானம், தேங்கிக் கிடக்கும் கழிவுகள் மற்றும் படகுப் போக்குவரத்து வளர்ச்சி போன்ற காரணங்களால் அழிந்து போனது.
2. மேற்கத்திய கருப்பு காண்டாமிருகம் (Western Black Rhinoceros)
கொம்புகளுக்காக அதிகப்படியாக வேட்டையாடப்பட்ட இந்த மேற்கத்திய கருப்பு காண்டாமிருகத்தைப் பாதுகாக்க எடுத்த முயற்சிகள் தோற்று 2011-ல் முற்றிலுமாய் அழிந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட வேட்டையால் 2011ல் அழிந்துபோனது.
3. பிண்டா தீவுக் கடலாமை (Pinta Island Tortoise)
கலபகோஸ் தீவுகளைச் சேர்ந்த பின்டா தீவின் இராட்சத ஆமை உணவுக்காக வேட்டையாடப்பட்டு பெருமளவு அழிக்கப்பட்டது. அதோடு, இந்தத் தீவில் இறக்குமதி செய்யப்பட்ட ஆடுகளின் மேய்ச்சலால் இராட்சத ஆமைக்கான உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. எஞ்சி நின்ற ஒரே ஆமை ‘லோன்சம் ஜார்ஜ்’, என்று பெயரிடப்பட்டு பாதுகாக்கப்பட்டது. 2012ல் லோன்சம் ஜார்ஜ் வயது மூப்பு காரணமாக அழிய, இந்த இனம் இன்று வரலாறாகிப் போனது.
4. தைலசீன் (Thylacine)
“டாஸ்மேனியப் புலி” என்றும் “டாஸ்மேனிய ஓநாய்” என்றும் அழைக்கப்பட்ட தைலசீன், வேட்டையாடப்பட்டதால் பெருமளவு அழிந்து போனது. சரணாலயத்தில் பராமரிக்கப்பட்ட ஒரே ஒரு தைலசீனும் 1936-ல் இறந்து போனது.
5. தங்கத் தேரை (Golden Toad)
கொஸ்டா ரிகாவின் மேகக் காடுகளில் வாழ்ந்த இந்த பிரகாசமான நிறத்திலான தங்கத் தேரை, காலநிலை மாற்றம், வாழ்விடம் அழிந்து போதல் மற்றும் நோய்த் தாக்கம் ஆகிய காரணங்களால் 1989க்குப் பின் இந்த பூமியில் காணப்படவில்லை. எனவே, இது அழிந்து போன இனமாக IUCn-ஆல் அறிவிக்கப்பட்டது.
6) கரீபியன் கடல் நாய் (Caribbean Monk Seal)
எண்ணெய்க் கண்டெடுக்கும் முயற்சிகளாலும் அதீத மீன் பிடித்தலாலும் கரீபியன் கடல் நாய் இந்த பூமியிலிருந்து முற்றிலுமாய் அழிந்து போனதாக 2008-ல் அறிவிக்கப்பட்டது.
7. பைரினியன் ஐபெக்ஸ் (Pyrenean Ibex)
பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளின் எல்லையில் உள்ள பைரினீஸ் மலைப்பகுதியை வாழ்விடமாகக் கொண்டிருந்த ஐபெக்ஸ் ஒரு மலை ஆடு வகையாகும். வேட்டையாடப்பட்டும் வாழ்விடம் அழிக்கப்பட்டும் இந்த விலங்குகள் இந்த பூமியில் இருந்தே அழிக்கப்பட்டன. 2003ல் கிளோனிங் முயற்சியில் உருவாக்கப்பட்டு சில நிமிடங்களுக்குள் இறந்து போனது ஐபெக்ஸ்.
8. ஸ்பிக்ஸ் மகாவ் (Spix’s Macaw)
பிரேசில் நாட்டின் அழகான நீல நிறப் பறவை இனமான ஸ்பிக்ஸ் மகாவ், சட்ட விரோத விலங்கு வணிகம் காரணமாகவும் காடுகள் அழிக்கப்பட்டதாலும் தங்கள் வசிப்பிடமான காடுகளிலிருந்து மறைந்து போயிற்று. சரணாலயத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் மீதமுள்ள மகாவ்கள் மீண்டும் காட்டிற்குள் வாழச் செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
9. ஜாவென் புலி (Javan Tiger)
இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த இந்த அழகிய புலி, காடுகள் அழிக்கப்பட்டதாலும், வேட்டையாடப்பட்டதாலும் 1970-களில் முற்றிலுமாய் அழிந்து போயிற்று.
10. டெகோபா பப்ஃபிஷ் (Tecopa Pupfish)
கலிபோர்னிய பாலைவனத்து நீருற்றுகளில் வாழ்ந்து வந்த டெகோபா பப்ஃபிஷ், சுற்றுலா விடுதிகளின் எண்ணிக்கை அதிகமானதாலும் நீரின் தட்பவெப்பம் மாறுபட்டதாலும் அழிந்து போனது. 1981-ல் இது முற்றிலும் அழிந்து போன இனமாக அறிவிக்கப்பட்டது.
நம் பூமியிலிருந்து மனிதத் தவறுகளால் முற்றிலுமாய் துடைத்தெறியப்பட்ட விலங்குகள் நம் மனதை கனமாக்குகின்றன. நம் கண் முன்னே இருக்கும் கடமையையும் இவை நமக்கு நினைவூட்டுகின்றன. ஆம், இனியும் விலங்குகளின் அழிவிற்கு மனிதத் தவறுகள் காரணமாகி விடக் கூடாது. நாம் நேர்மறையாய் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் அழிந்து கொண்டிருக்கும் இனங்களைப் பாதுகாக்க பேருதவி செய்யும்.
நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களிலிருந்தே தொடங்கலாம்:
மக்கும் குப்பைப் பைகளைப் பயன்படுத்துதல்: இதன் மூலம் விலங்குகளின் வாழ்விடங்களை நாசமாக்கும் கழிவுகளைத் தவிர்க்க முடியும்.
மூங்கில் பற்குச்சிகளைப் பயன்படுத்துதல்: ப்ளாஸ்டிக் பற்குச்சிகளைத் தவிர்ப்பதன் மூலம் கடலில் சேரும் கழிவுகளைப் பெருமளவில் குறைக்க உதவலாம்.
இயற்கையான சுத்தப்படுத்தும் பொருட்களைப் பயன்படுத்துதல்: இரசாயனங்கள் உள்ள பொருட்களைத் தவிர்க்கும் போது, நீர்நிலைகளில் இரசாயனம் கலப்பதால் நீரில் வாழும் உயிர்களுக்கு ஏற்படும் தீங்கைத் தவிர்க்க முடியும்.
மேலே இருக்கும் இணைப்புகள் affiliate links ஆகும். இதன் மூலம் நீங்கள் வாங்கும் பொருட்களில், உங்களுக்கு எந்தவித கூடுதல் செலவும் இல்லாமல், எனக்கு சிறு தொகை கமிஷனாகக் கிடைக்கக் கூடும். இது, எங்கள் வலைதளம் தொடர்ந்து இயங்க நீங்கள் தரும் ஆதரவு ஆகும். நன்றி..

இரமா தமிழரசு
வணக்கம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். எங்களுடைய மற்ற வலைப்பக்கத்தையும் YouTube channel-களையும் பார்க்குமாறு உங்களை வரவேற்கிறோம்.
https://voiceofapet.blogspot.com/
https://www.youtube.com/@PetsDiaryPages
https://www.youtube.com/@letnaturelive1 .