உடல் மன ஆரோக்கியம்

பிராணாயாமம்

Share on facebook
Share on twitter

இதுவரை துவக்க நிலை ஆசனங்களாக முன்னும் பின்னுமாக குனிந்தும் வளைந்தும் ஆசனங்களைச் செய்துள்ளோம். இந்த ஆசனங்களால் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக ஓடத் தொடங்கியிருக்கும். இரத்த ஓட்டத்தை சீர்படுத்தத் தொடங்கி விட்டோம்; இரத்தத்தை சீராக்க வேண்டாமா? உள்ளடக்கம் இல்லாமல் வடிவம் மட்டுமே முழுமை பெறுமா?

இரத்தத்தை எப்படி சீராக்குவது? மிகவும் எளிது. இரத்தத்தின் அடிப்படையே அதன் உள்ளடக்கமான, அதில் கலந்துள்ள ஆக்ஸிஜன் என்கிற பிராணவாயு, அதாவது மூச்சுக் காற்றுதான்.  நாம் சுவாசிக்கின்ற காற்றுதான் நுரையீரலில் இரத்தத்தோடு கலந்து அதை சுத்திகரித்து சுத்த இரத்தமாக அனைத்து உறுப்புகளுக்கும், உடலில் சந்து பொந்து பொடி இடத்திற்குக் கூட சென்று சக்தியளிக்கிறது. சரி, நாம்தான் சுவாசிக்கிறோமே! அப்போது நம் சுவாசம் இரத்தத்தில் கலந்து சுத்திகரிக்காதா? இதற்கு ஒரு தனிப் பயிற்சி தேவையா என்று நீங்கள் கேட்கலாம்.

கண்டிப்பாக தேவை. ஏன்? நுரையீரலை சற்று புரிந்து கொள்வோம். நம்மை பிரபஞ்சத்தோடு தொடர்புப்படுத்தக் கூடிய ஒரே உறுப்பு நுரையீரல் மட்டுமே. அதன் இயக்கமே மூச்சை இழுத்து வெளிவிட்டு நம்மை பிரபஞ்சத்தோடு தொடர்பில் வைத்துள்ளது. நுரையீரல் அந்த சக்தியை இழந்து விட்டால் மூச்சுக் காற்று உள்ளே நுழைய முடியாது. வெளியிலேயே நின்று விடும். உடலுழைப்பு நம்மிடம் இருந்த வரை நுரையீரலின் இயக்கம் நன்றாக இருந்தது. இன்றைய சூழலில் நமது உடலுழைப்பு எப்படி என்று விளக்க வேண்டியதில்லை. உடலுழைப்பின் மூலம் பெற வேண்டியதை எளிய பயிற்சியின் மூலம் நாம் பெற்றுக் கொள்கிறோம். அதுதான் மூச்சு பயிற்சி ஆகும். மூச்சு பயிற்சியை, பல வகைகளில் மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டு நுரையீரலின் இயக்கத்தை மேம்படுத்தலாம்.

நாடி சுத்தி, பிராணாயாமம் இரண்டும் மிக முக்கியமான மூச்சு பயிற்சிகள் ஆகும். நாடி சுத்தி என்பது பிராணாயாமத்திற்கு உடலை தயார் செய்யும் முறையாகும். பிராணாயாமம் என்பது உடலில் மூச்சை இழுத்து உள் நிறுத்தி பின் வெளிவிடுவது ஆகும். இது குறிப்பிட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் செய்யப்படுவது. இதற்கும் முன் நிபந்தனையாக இரத்தத்தை சுத்திகரிக்கக் கூடிய நாடி சுத்தியை பழக வேண்டும்.

நாடி என்றால் தாது; அதாவது, இரத்தம். இரத்தத்தை மூச்சின் மூலம் சுத்திகரிக்கும் முறை. ஒரு நாசியை அடைத்து மற்றொரு நாசி வழி மூச்சை விடும் பயிற்சியாகும்.

அதை செய்வதற்கும் முன் முதலில் இரண்டு நாசி வழி மூச்சை ஆழமாக இழுத்து பின் வெளிவிடும் பயிற்சியை சில நாள் பயில்வது நல்லது. மற்ற யோகாசன பயிற்சிகளை முடித்து பின் சாந்தி ஆசன நிலையில் சில நிமிடங்கள் இருந்த பின் எழுந்து பத்மாசனம் அல்லது அர்த்த பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து செய்யக்கூடியதாகும்.

மூச்சு பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்

மூச்சு பயிற்சிகளில் பல வகைகள் உண்டு. அவற்றின் பொதுவான பலன்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

 • நுரையீரலை பலப்படுத்தி, நுரையீரலின் செயல்பாடுகளை செம்மையாக்குகிறது.
 • மூச்சு கோளாறுகளை போக்க உதவுகிறது.
 • இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
 • இருதய நலனை பாதுகாக்கிறது.
 • இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது.
 • சீரண கோளாறுகளை போக்க உதவுகிறது.
 • நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.
 • நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்துகிறது.
 • மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.
 • சரும நலத்தை பாதுகாக்கிறது.
 • ஆழந்த உறக்கத்தை தருகிறது.
 • உடலில் இருக்கக் கூடிய நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.
 • கவனமின்மையை போக்க உதவுகிறது; மனதை ஒருநிலைப்படுத்துகிறது.
 • மன அழுத்தத்தை போக்குகிறது.
 • மன அமைதியை வளர்க்கிறது.

மூச்சு பயிற்சிக்கு தயார் செய்வது எப்படி?

 • பத்மாசனம், அர்த்த பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும்.
 • முதுகை நேராக வைக்கவும். பத்மாசனம் பயிலும் போது செய்வது போல் கைகளில் சின் முத்திரை வைத்து கால் முட்டியில் வைக்கவும்.
 • மனதை மூச்சில் செலுத்தி, இரண்டு நாசிகள் வழியாகவும் மெதுவாக, சீராக மூச்சை இழுக்கவும். பின், மெதுவாக, சீராக மூச்சை வெளியே விடவும்.
 • இவ்வாறு 10 முதல் 15 முறை பயிலவும்.

வரும் நாட்களில் பலவிதமான மூச்சு பயிற்சிகளின் செய்முறையையும் அவற்றின் பலன்களையும் பார்ப்போம்.

 

 • Subscribe

  * indicates required
 • தேடல்
 • Herbal Facial Glow

 • Deal of the Day

 • தமிழ்