உடல் மன ஆரோக்கியம்

பத்து இலட்சம் முயல்களை பாலைவனத்தில் விட்டதா சீனா? – The Rabbit Story and Great Green Wall of China

கடந்த ஒரு வருடமாக, சீனா, பத்து இலட்சம் முயல்களைக் பாலைவனத்தில் விட்டதாக ஒரு செய்தி பல ஊடகங்கள் மூலமாகப் பரவியது. உண்மையில் நடந்தது என்ன என்பது பற்றியும் சீனாவின் பசுமை பெருஞ்சுவர் சாதனைப் பற்றியும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

இதென்ன முயல் கதை?

சீனா, பத்து இலட்சம் முயல்களைப் பாலைவனத்தில் விட்டதாக ஏன் செய்தி பரவியது? முயல்களின் மலம் மண்ணை வளப்படுத்தும் ஆற்றல் கொண்டது. பாலைவனத்தில் முயல்கள் விடப்பட்டால், அங்குமிங்குமாய் ஓடி, கிடைக்கும் தாவரங்களை உண்டு சத்து நிறைந்த மலத்தை வெளியேற்றும். இதனால் மண் வளம்பெறும், மரங்கள் வளரும். எனவே, பாலைவனமாக்கலைத் தடுத்து, காடு வளர்க்கும் முயற்சியில், சீனா பத்து இலட்சம் முயல்களைப் பாலைவனத்தில் விட்டதாக செய்தி பரவியிருக்கிறது. இந்த செய்தி காட்டுத்தீ போல பரவியிருந்தாலும், இதுவரை சீன அரசாங்கம் இது குறித்து எந்தவித அதிகாரபூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.

சீனாவின் பசுமை பெருஞ்சுவர் திட்டம்

சீனாவின் வடக்குப் பகுதி பாலைவனமாக மாறுவதைத் தடுக்க உருவாக்கப்பட்டதுதான் Three-North Shelterbelt Program. இது பசுமை பெருஞ்சுவர் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த பசுமை பெருஞ்சுவர் திட்டம் 1978-ல் தொடங்கப்பட்டது. 

மரம் நடுதல், காற்று அரண் அமைத்தல், சூரிய ஆற்றல் சேமிப்பு மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவது ஆகியவற்றில்தான் பசுமை பெருஞ்சுவர் திட்டம் கவனம் செலுத்தி செயல்பட்டு வருகிறது. உயிருள்ள விலங்குகளைப் பரிசோதனைக்குள்ளாக்கி அல்ல.

சீனாவின் பசுமை பெருஞ்சுவர் திட்டத்தின் இன்றைய நிலை

பசுமை பெருஞ்சுவர் திட்டத்தின் முதல் கட்டம் வளமான பகுதிகள் பாலைவனமாவதைத் தவிர்ப்பதும் கட்டுப்படுத்துவதும் ஆகும். இரண்டாவது கட்டம், பாலைவன மணலை பாதுகாப்பதும் பயன்படுத்துவதும் ஆகும். இன்று சீனா இரண்டாவது கட்டத்தில் செயல்பட்டு வருகிறது.

ஆக, சீனாவின் பசுமை பெருஞ்சுவர் திட்டத்தின்படி, மரம் நடுதல், புல் விதைப்பு, மணல் அரண்களை உருவாக்குதல், சொட்டு நீர்ப்பாசனம், காற்று அரண் அமைத்தல் ஆகியவற்றின் மூலம் குறிப்பிட்ட பகுதிகள் பாலைவனமாக்கப்படுவதைத் தடுத்து காடுகளை உருவாக்குவதுதான்.

2020-ற்குள் 3 கோடி ஹெக்டேர் பாலைவனப்பகுதி காடுகளாக்கப்பட்டிருக்கின்றன. 2024 நவம்பருக்குள், தக்லமகான் பாலைவனத்தைச் சுற்றி 3046 கிலோமீட்டர் தூரத்திற்கு பசுமை வளையம் உருவாக்கப்பட்டு விட்டது. மனிதனால் உருவாக்கப்பட்ட பாலைவன அரண்களில் உலகிலேயே நீளமானது என்கிற பெருமையை பெற்றிருக்கிறது இந்த பசுமை பெருஞ்சுவர்.

இந்த 3046-கிலோமீட்டர் நீள பசுமை வளையம் மணலைத் தடுப்பதோடு நிற்காமல், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி அவர்களின் பொருளாதாரத்தையும் மேம்படுத்துகிறது.

2024-ல் சீனா வெளியிட்ட ஒரு அறிவிப்பின்படி, கடந்த 46 வருடங்களில், 5.05-ஆக இருந்த வனப்பகுதி, 2024-ல் 13.84 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. இந்த சதவிகிதம் குறிப்பது அடர்ந்த வனமாக மாறியுள்ள பகுதியை மட்டுமே. பசும்புல்வெளியாய் மாறியுள்ள பகுதியையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் இந்த சதவிகிதம் மேலும் பலமடங்கு அதிகமாகும். 

இந்தக் கட்டத்தை அடைய சீனா, முதலில் செய்தது பாலைவனத்தில் சாலை போடுவதுதான். அதைத் தொடர்ந்து நீர்ப்பாசன முறைகளை உருவாக்குவது, மின் தொகுப்புகளை நிறுவுவது, பாலைவனக் குன்றுகளுக்குக் குறுக்காக வைக்கோல் சதுரங்கப் பலகைகளை (straw checkerboard) நிறுவுவது, வறட்சியைத் தாக்குப்பிடித்து வளரும் செடிகளை நடுவது, அதனுடனேயே, ஆங்காங்கே, பாலைவனத்து ஜின்செங்க் என்று அழைக்கப்படும் மூலிகையை நடுவது மற்றும் சோலார் பேனல்களை நிறுவுவது ஆகியவையே. இந்த சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் பெறுவது மட்டுமல்லாமல், மண் அரிப்பும் தடுக்கப்படுகிறது. 

ஆக, பத்து இலட்சத்திற்கும் அதிகமான முயல்களை சீனா பாலைவனத்தில் விட்டதாக அதிகாரபூர்வ செய்திகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், சீனாவின் Great Green Wall திட்டம் அருமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு பாலைவனம் ஆக்கப்படுதல் கட்டுப்படுத்தப்பட்டு காடு வளர்ப்பு பெறும் வெற்றியைப் பெற்றிருக்கிறது என்பது முழுவதும் உண்மை.

இயற்கையைப் பாதுகாக்கும் அனைவருக்கும், அவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், இது ஒரு நம்பிக்கை தரும் செய்தி.

Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். எங்களுடைய மற்ற வலைப்பக்கத்தையும் YouTube channel-களையும் பார்க்குமாறு உங்களை வரவேற்கிறோம்.
https://voiceofapet.blogspot.com/
https://www.youtube.com/@PetsDiaryPages
https://www.youtube.com/@letnaturelive1 .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்