கலப்படம் நம்மில் பெரும்பாலானவர்களின் சமையலறையில் எப்போதோ நுழைந்து விட்டது. காய்கள், கனிகள் மூலமாக மட்டுமல்ல மற்ற உணவுப் பொருட்கள் மற்றும் அற்புத மருத்துவ பலன்களைத் தரும் பொருட்கள் மூலமாகவும் கூட. இன்று நாம் பார்க்கப் போவது சீரகத்தில் கலப்படத்தைப் பற்றியும், கலப்பட சீரகத்தால் உடலுக்கு ஏற்படும் தீங்குகள் மற்றும் கலப்பட சீரகத்தை எப்படி வீட்டிலேயே கண்டறிவது போன்ற முக்கியத் தகவல்களைப் பார்க்கப் போகிறோம்.
சீரகம் ஏன் கலப்படம் செய்யப்படுகிறது?
உலகம் முழுவதிலுமே பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களில் சீரகத்துக்கு ஒரு முக்கிய இடம் இருக்கிறது.
சீரகத்தின் தேவை அதிகமாக இருப்பதால், அதிக இலாபம் ஈட்டுவதற்காகக் கலப்படம் செய்யப்படுகிறது.
மேலும், சீரகத்தின் எடையைக் கூட்டவும், புதிது போல் காட்டவும் கலப்படம் செய்யப்படுகின்றன.
கலப்படமான சீரகத்தை உண்பதால் என்ன ஆகும்?
கலப்படமான சீரகத்தை உண்பதால் ஏற்படும் தீங்குகள்:
- செரிமானக் கோளாறுகள்
- சிறுநீரகக் கோளாறு
- புற்று நோய் ஏற்படுவதற்கும் சாத்தியம் உண்டு என்று ஆய்வு கூறுகிறது.
சீரகத்தில் கலப்படம் செய்யப்படும் பொருட்கள் என்ன?
சீரகத்தில் கலப்படம் செய்யப்படும் பொருட்கள்:
- புல் விதைகள்
- சார்கோல் பொடி
- கல் மற்றும் தூசு
- எண்ணெய்
கலப்பட சீரகத்தை வீட்டிலேயே எப்படி சோதனை செய்வது?
சீரகத்தில் கலப்படம் இருக்கிறதா என்று வீட்டிலேயே சோதித்துப் பார்க்க எளிய வழிகள் இதோ:
தண்ணீர் மூலம் சோதனை
ஒரு கோப்பை தண்ணீரில் ஒரு தேக்கரண்டி சீரகத்தைப் போடவும்.
சுத்தமான சீரகம் நீரில் மூழ்கி விடும். கலப்படம் நீரில் மிதக்கும். அல்லது தண்ணீரின் நிறம் மாறி விடும்.
கவனிக்க: தண்ணீரில் சோதிக்கும் போது, சீரகம் மேலே மிதந்தால் பதறி விட வேண்டாம். சிறிது நேரம் பொறுத்துப் பார்த்தீர்களானால், பெருமளவு சீரகம் உள்ளே போயிருக்கக் கூடும். உடனடியாக நீரில் மூழ்காததற்குக் காரணம் சீரகத்தில் இயற்கையிலேயே உள்ள எண்ணெய்தான்.
இதே சோதனையை வெந்நீரில் செய்து பாருங்கள். பெரும்பாலான சீரகம் உள்ளே போய் விட்டால், அது கலப்படமாய் இருக்க வாய்ப்பு மிகவும் குறைவு. வெந்நீர், சீரகத்தின் எண்ணெய்யை விரியச் செய்கிறது. மேலும் வெந்நீரின் பரப்பு இழுவிசை (surface tension) குறைவாக இருப்பதால், சீரகம் சீக்கிரமாய் நீரில் மூழ்கி விடுகிறது. அதையும் தவிர மேலே சில சீரக விதைகள் மிதந்து கொண்டிருந்தால், அவை அடர்த்தி குறைவானதாகவோ, உடைந்ததாகவோ இருக்கலாம். தவிரவும், சீரகத்தில் உள்ள காற்றுப் பைகளில் காற்று அடைப்பட்டிருக்கலாம். அதனால், மிதக்கும் சீரகம் கலப்படமா என்பதை உறுதி செய்து கொள்ள, அவை சீராக இருக்கிறதா என்று பார்க்கவும். சீராக இல்லாமலும் பளபளப்பாக இருந்தால், அவை கலப்படமாக இருக்கலாம்.
விரலால் / உள்ளங்கையில் தேய்த்து பரிசோதனை
சிறிது சீரகத்தை எடுத்து விரல்களில் அல்லது உள்ளங்கையில் வைத்து நன்றாகத் தேய்க்கவும். சீரகத்தில் கலப்படம் இருந்தால், கையில் சீரகம் தேய்த்த இடத்தில் நிறம் மாறி, பழுப்பு நிறம் போல் ஆகி விடும்.
நன்றாக பார்த்து பரிசோதித்தல்
சீரகத்தை உன்னிப்பாகப் பார்த்தும் கலப்படம் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளலாம். சீரகத்தின் அளவும் நிறமும் சீரற்று இருந்தாலோ மிகவும் பளபளப்பாக இருந்தாலோ, அது கலப்பட சீரகமாய் இருக்க வாய்ப்பு மிக மிக அதிகம்.
தரமான சீரகத்தை எப்படி வாங்குவது?
தரமான நிறுவனங்கள் மற்றும் இரசாயனக் கலப்பில்லாத தயாரிப்புகளை வாங்கவும்.
FSSAI, பயன்பாட்டுக்கான தேதி ஆகியவற்றைப் பார்த்து வாங்கவும்.
மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் பரிசோதனைகளை இது வரை செய்து பார்த்ததில்லை என்றால் வீட்டில் செய்து பாருங்கள்.உங்கள் சமையலறையில் கலப்படத்திற்கு இடமில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
Amazon affiliate என்கிற முறையில், இந்தப் பக்கத்தில் உள்ள இணைப்பின் மூலமாக நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு, உங்களுக்கு எந்த வித கூடுதல் செலவும் இல்லாமல், எனக்கு சிறு தொகை கிடைக்கக் கூடும்.

இரமா தமிழரசு
வணக்கம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். எங்களுடைய மற்ற வலைப்பக்கத்தையும் YouTube channel-களையும் பார்க்குமாறு உங்களை வரவேற்கிறோம்.
https://voiceofapet.blogspot.com/
https://www.youtube.com/@PetsDiaryPages
https://www.youtube.com/@letnaturelive1 .