உடல் மன ஆரோக்கியம்

பூமியிலிருந்து மெல்ல மறையும் யானையின் தடங்கள்

Endangered elephants

யானைகள் இந்த பூமியில் வெறுமனே வாழ்வது இல்லை. அவை பூமியை நினைவில் வைத்துக் கொள்கின்றன.

தாங்கள் நடந்து செல்லும் ஒவ்வொரு பாதைக்கும் தாங்கள் கடந்து செல்லும் ஒவ்வொரு ஆற்றிற்கும் பல வருடங்களுக்குப் பின்னும் அவை திரும்புகின்றன. தங்கள் கூட்டத்தைச் சேர்ந்த உறுப்பினரின் இறப்புக்கு அமைதியாக அஞ்சலி செலுத்துகின்றன; பல வருடங்கள் ஆனாலும் அந்த உறுப்பினர் இறந்த அதே இடத்திற்கு வந்து அமைதியாய் அஞ்சலி செலுத்துகின்றன. இவை எல்லாமே நமக்கு உணர்த்துவது, யானைகள் நிலத்தின் வரைப்படத்தை தங்கள் நினைவில் ஏந்துகின்றன என்பதுதான்.

சுற்றுச்சூழலில் யானையின் பங்கு

சுற்றுச்சூழலுக்கு யானையின் பங்கு மகத்தானது. 

அடர்ந்த வனப்பகுதிகளில் உணவுக்காக மரக்கிளைகளை யானைகள் முறித்து விடுவதால், காட்டின் தரை வரையில் சூரிய வெளிச்சம் பாய்ந்து பல செடிகளும் வளர உதவியாய் இருக்கிறது.

வறண்ட நீர்நிலைகளைத் தோண்டி அவை உருவாக்கும் கிணறுகள் பல்வேறு உயிரினங்களுக்கும் உயிர் தருகிறது.

நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் நடக்கும் யானைகள் விதைகளை பரவச் செய்கிறது. சில வகையான மர வகைகள் யானைகளின் இந்தப் பங்களிப்பானாலே தான் பிழைத்திருக்கின்றன. 

யானைகள் இல்லாது போனால், ஒட்டுமொத்த சுற்றுச்சூழலும் கடுமையாகப் பாதிக்கப்படும். பாதிப்பு, உடனடியாக நேராதென்றாலும் பாதிப்பைத் தவிர்க்க முடியாது என்பதுதான் உண்மை.

யானைகள் மறைந்து போனால், காடு சுவாசிப்பதை மறக்கத் தொடங்கும்.

யானையின் அபாரமான நினைவாற்றல்

நிலத்தில் வாழும் விலங்குகளில் மிகவும் பெரிய மூளை கொண்டது யானை. அந்த மூளை மிகவும் நுணுக்கமானதும் கூட.

யானையின் மூளையை மிகவும் அசாதாரணமாக்குவது அவற்றின் உணர்வுரீதியிலான பண்புகளாகும்.

யானைகள், தங்கள் நண்பர்களையும் எதிரிகளையும் பற்பல ஆண்டுகளுக்கு நினைவில் வைத்துக் கொள்ளும்.

இறந்த உறவினர்களின் எலும்புகள் இருக்கும் இடத்திற்குப் பல வருடங்களுக்குத் திரும்ப வந்து அந்த எலும்புகளைத் தங்களின் தும்பிக்கையால் மென்மையாகத் தொடும்.

வறட்சி, இடம் பெயர்தல் மற்றும் பாதுகாப்பான பாதைகள் குறித்த தலைமுறை தலைமுறையாக வந்த அறிவுக் கடத்தலை நினைவில் வைத்துக் கொண்டு குழுவின் தலைவியான பெண் யானை குழுவை வழிநடத்தும். 

ஒரு யானைக் கூட்டம் என்பது வெறும் ஒரு குடும்பம் அல்ல. அது வாழ்ந்த அனுபவங்களுக்கான ஒரு நூலகம்.

ஒரு குழுவின் தலைவி கொல்லப்படும் போது, அந்தக் குழுவின் ஒட்டுமொத்த கலாச்சாரமே மறைந்து போகக் கூடும்.

நிலத்தின் நீண்ட கால குழந்தைப்பருவம்

ஒரு யானைக் குட்டி, சுதந்திரமான ஒரு யானையாய் ஆவதற்கு சுமார்  15 ஆண்டுகள் வரை ஆகி விடும். இந்தக் காலக்கட்டத்தில், அவை கற்றுக் கொள்ளக் கூடியவை:

  • குணமளிக்கும் செடிகளையும் பாதிக்கும் செடிகளையும் கண்டுகொள்ளுதல்
  • நிலத்தில் ஏற்படும் அதிர்வுகளைக் கொண்டு ஆபத்தை உணருதல்.
  • எப்போது இடத்தை விட்டுச் செல்ல வேண்டும், எப்போது காத்திருக்க வேண்டும், எப்போது தங்கள் இடத்தில் உறுதியாக நிற்க வேண்டும் என்பதை அறிதல்

என இவை அனைத்தையும் தன் தாய் யானையிடமிருந்து குட்டி யானை கற்றுக் கொள்கிறது.

நீண்ட குழந்தைப்பருவம் யானைகளை ஆழமான குடும்பப் பிணைப்போடு வாழ வைக்கிறது. அதே நேரத்தில் இதில் ஒரு வேதனையான செய்தியும் இருக்கிறது. அதாவது, தாய் யானை வேட்டையாடப்பட்டாலோ ஏதோ ஒரு வகையில் கொல்லப்பட்டாலோ, குட்டிகள் தாயிடமிருந்து முழுமையான அறிவைப் பெற முடியாமல் போய் விடும். இது ஒட்டு மொத்த தலைமுறைகளையுமே பாதித்து விடும்.

ஓசையில்லா போரும் யானையின் அழிவும்

யானைகள் அழிவதற்குக் காரணம் சுருங்கி வரும் அவைகளின் உலகம்தான்.

சாலைகளாலும் குடியேறுபவர்களாலும் காடுகள் துண்டாடப்படுகின்றன.

காலம் காலமாக அவை இடம்பெயர பயன்படுத்திய பாதைகள் அடைக்கப்படுகின்றன.

மனித – யானை மோதல்கள் இதன் காரணமாக அதிகரித்து அதன் விளைவாக யானைகள் பெரும் இழப்பைச் சந்திக்கின்றன.

பல இடங்களிலும், யானைகளுக்கு இரண்டே வாய்ப்புகள்தான் இருக்கின்றன. ஒன்று, அமைதியாய் பட்டினி கிடந்து இறந்து போதல் அல்லது மனிதர்கள் வாழும் பகுதிக்குள் உணவுக்காக நுழைந்து தண்டிக்கப்படுதல்.

இந்தப் போரைத் தொடங்கியது யானைகள் அல்ல. ஆனால், அதற்கான விலையை அவை தான் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

யானைகளைக் காத்தலும் மனித குலத்தைக் காத்தலும்

யானைகள் காடுகளை சீரமைக்கின்றன. காடுகள் காலநிலையை சீராக வைக்கின்றன. காலநிலை உலகின் உயிர்களை சீரமைக்கின்றன.

இது ஒரு சிக்கலற்ற சங்கிலி. யானைகளைப் பாதுகாத்தல் என்பது உணர்வுபூர்வமானது மட்டுமல்ல; சுற்றுச்சூழல் நலனுக்கே அத்தியாவசியமானது.

யானைகள் வாழ்ந்தால், ஆறுகள் நீண்ட தூரம் ஓடும், காடுகள் வளமாக விளங்கும், நிலப்பரப்புகள் உறுதியாக இருக்கும்.

யானைகள் வீழந்தால், நாம் எண்ணிப் பார்க்க முடியாத பாதிப்புகள் காலப்போக்கில் ஏற்படும்.

யானைகளைக் காப்போம். இயற்கையை மீட்போம்.

Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்.
எங்களுடைய பிற வலைப்பக்கம் மற்றும் YouTube channel-கள்:
https://voiceofapet.blogspot.com/
https://www.youtube.com/@PetsDiaryPages
http://www.youtube.com/@letnaturelive_YT

சோர்வாக இருக்கும் போது பயில 5 அற்புத பலன்கள் தரும் ஆசனங்கள்

சோர்வாக உணரும் போதெல்லாம் நம் உடலுக்கும் மனதுக்கும் ஓய்வுதான் தேவை என்பதல்ல. சில சமயங்களில், போதுமான இரத்த ஓட்டம் மற்றும் பிராண ஓட்டம் இல்லாததாலோ, மன அழுத்தத்தாலோ நீண்ட நேரத்திற்கு அமர்ந்து பணி செய்வதாலோ

Read More »
Endangered elephants

பூமியிலிருந்து மெல்ல மறையும் யானையின் தடங்கள்

நிலத்தில் வாழும் விலங்குகளில் மிகப் பெரிய விலங்கான யானை அழியும் நிலையில் இருப்பதாக IUCN-ஆல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. யானைக்கு ஏன் இந்த நிலை? யானைகளைக் காப்பாற்ற முடியுமா?

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்