முன் குனிந்து செய்யும் ஆசனங்களில் சற்று கூடுதல் கடினமானது பாதஹஸ்தாசனம். “பாதம்” என்றால் “கால்”; “அஸ்தா” என்றால் “கை”. பாதமும் கைகளும் இணைவது என்று பொருள். இது ஆங்கிலத்தில் Hand Under Foot Pose என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முன் நாம் பார்த்த முன் குனிந்து செய்யும் ஆசனங்களின் பொதுவான பலன் இதற்கும் உண்டு எனினும் குறிப்பாக சில சிறப்புகளை இவ்வாசனம் பெற்றுள்ளது. முதலில் செய்முறையை பார்ப்போம். அப்போதுதான் இதன் முழு விளக்கத்தை புரிந்து கொள்ள முடியும்.

Hand Under Foot Pose செய்முறை

பாதஹஸ்தாசனம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

  • விரிப்பின் மீது நேராக நிற்கவும். இரண்டு கால்களுக்கிடையே சற்று இடைவெளி விட்டு நிற்கவும்.
  • மெதுவாக மூச்சை விட்டுக் கொண்டே முன்னால் குனியவும்.
  • உங்கள் கைகளை தரையை நோக்கி கொண்டு வரவும்.
  • உள்ளங்கைகளை மேல் நோக்கி திருப்பி, பாதங்களின் அடியில் வைக்கவும். அவ்வாறு வைக்கும்போது உங்கள் கால் விரல்கள் உங்கள் மணிக்கட்டை தொடுமாறு இருக்க வேண்டும்.
  • உங்கள் கை முட்டியை பக்கவாட்டிலோ முன் நோக்கியோ வைக்கலாம்.
  • தலை கீழ் நோக்கி இருக்க வேண்டும்.
  • 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின் பழைய நிலைக்கு திரும்பவும்.

இவ்வாசனத்தின் செய்முறையை பார்த்தோம். உத்தானாசனத்தில், கணுக்காலை முன் குனிந்து பிடித்தோம். பாதாங்குஸ்தாசனத்தில் கால் கட்டை விரலை பிடித்தோம். பாதஹஸ்தாசனத்தில் முன் குனிந்து இரு பாதங்களின் கீழ் கைகளை வைக்கிறோம். அதாவது, உள்ளங்கால்களும் உள்ளங்கைகளும் ஒன்றாக சேர்கின்றன. இதன் மூலம், கால்களினால் உள்ளங்கைகள் நன்றாக அழுத்தப்படும். Reflexology முறையில் சொல்லப்படுவது போல் உடலின் உள் உறுப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய  (represent) பகுதிகள் உள்ளங்கால்களிலும் உள்ளங்கைகளிலும் உள்ளன. இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். ஆம், கால்களால் கைகளை அழுத்தும்போது, உறுப்புகளின் அடையாளப்பகுதிகள் அழுத்தப்பட்டு அந்த உறுப்புகளுக்கு சக்தி ஓட்டம் அதிகரிக்கிறது. அதன் மூலம், உடலின் உள் இருக்கும் ராஜ உறுப்புகளின் இயக்கம் செழுமையடைகிறது.

மேலும், கால்கள், கைகளை அழுத்தும்போது, தவிர்க்க முடியாமல் கைகள் மூலம் கால்களும் அழுத்தப்படுகின்றன. குறிப்பாக, சிறுநீரக சக்தி ஓட்டப் பாதையின் துவக்கப் புள்ளி கால் பாதங்களில் உள்ளது. அப்புள்ளி கைகளால் அழுத்தப்படுவதால் சிறுநீரகத்தின் இயக்கம் பலமடைகிறது. அதன் தொடர்பான பிரச்சினைகள் சீரடைகின்றன. மேலும் காதுகளும், கண்களும் கூர்மையடைகின்றன. ஏனெனில், அதற்கான பகுதிகள் அழுத்தப்படுகின்றன. அதுமட்டுமல்ல, சிறுநீரகத்தின் துவக்கப் புள்ளியை அழுத்தும் போது அது காதுகளுக்கும் கண்களூக்கும் ஆற்றலை தந்து அவற்றை கூர்மையாக்குகிறது.

முன் குனிந்து செய்யும் ஆசனங்களாக இருந்தாலும் கைகள் பிடிக்கும் இடம் பொருட்டு பலன்கள் சிறப்பாகின்றன. முழுமையாக பாதஹஸ்தாசனத்தை செய்ய இயலாதவர்கள் உத்தானாசனத்தையே செய்து பழகி பின் பாதஹஸ்தாசனத்தை செய்யலாம். ஆனால், முழுமையாக உள்ளங்கால்களையும் உள்ளங்கைகளையும் இணைக்கும்போதுதான் இந்த ஆசனத்தின் பலன்கள் முழுமையாகக் கிடைக்கும்.

பாதஹஸ்தாசனத்தின் பலன்கள்
  • உடல் முழுவதற்கும் நல்ல நீட்சியை (stretch) கொடுக்கிறது; குறிப்பாக, hamstrings-ற்கு நல்ல நீட்சியை அளிக்கிறது.
  • பீனியல் மற்றும் அட்ரீனல் சுரப்புகளின் பணிகளை செழுமைப்படுத்துகிறது.
  • உடலின் மேல் பகுதிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
  • முதுகுத்தண்டை நலமாக வைக்க உதவுகிறது.
  • வயிற்று உப்புசம், வாய்வு போன்ற வயிற்று கோளாறுகளை போக்க உதவுகிறது.
  • சிறுநீரகத்தை பலப்படுத்துகிறது.
  • கண் பார்வையை தெளிவாக்குகிறது.
  • காது கேட்கும் திறனை அதிகரிக்கிறது.
  • மன அழுத்தத்தைப் போக்க உதவுகிறது.
குறிப்பு

உயர் இரத்த அழுத்தம், இதயக் கோளாறு போன்ற பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.

மாற்று ஆசனம்: பிறையாசனம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

தமிழ்