வடமொழியில் ‘பார்சுவ’ என்றால் ‘பக்கம்’, ‘உபவிஸ்த’ என்றால் ‘அமர்ந்த’ மற்றும் ‘கோணா’ என்றால் ‘கோணம்’ என்று பொருள். பக்கவாட்டில் கால்களை நீட்டி அமர்ந்திருக்கும் கோணத்தால் இந்த ஆசனம் இப்பெயரைப் பெற்றது.
பார்சுவ உபவிஸ்த கோணாசனம் வயிற்று தசைகளை வலுபடுத்துவதோடு வயிற்று உள் உறுப்புகளின் சீரான இயக்கத்துக்கு உதவுகிறது. தொடர்ந்து இந்த ஆசனத்தை பயின்று வந்தால் உடலின் நெகிழ்வுத்தன்மை கூடும்.
பார்சுவ உபவிஸ்த கோணாசனத்தின் மேலும் சில பலன்கள்
- இடுப்புப் பகுதியை நீட்சியடைய வைக்கிறது.
- முதுகுத் தசைகளை பலப்படுத்துகிறது
- கால்களை நீட்சியடைய வைக்கிறது.
- கழுத்து தசைகளை உறுதியாக்குகிறது.
செய்முறை
- தண்டாசனத்தில் அமரவும்.
- கால்களை முடிந்த வரையில் பக்கவாட்டில் விரிக்கவும். குதிகால்கள் தரையில் இருக்க வேண்டும். கால் விரல்கள் மேல் நோக்கி இருக்க வேண்டும்.
- மூச்சை வெளியேற்றிக் கொண்டே வலது காலை நோக்கிக் குனியவும்.
- கைகளை நீட்டி வலது கால் விரல்களை அல்லது வலது பாதத்தைப் பற்றவும்.
- 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்தபின், நிமிர்ந்து, இடது காலை நோக்கிக் குனிந்து பயிலவும்.
குறிப்பு
குனிந்து செய்வதில் சிரமம் இருந்தால் காலுக்கடியில் விரிப்பு அல்லது yoga block போட்டு பயிலவும்.
கைகளை எட்டிய இடத்திலேயே பற்றிக் கொள்ளவும்.
முதுகு, இடுப்பு மற்றும் காலில் தீவிரப் பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும். கழுத்து வலி உள்ளவர்கள் முடிந்த அளவு குனிந்தாலே போதுமானது.