பார்ப்பதற்கு மிக எளிமையாகத் தோன்றும் தண்டாசனம் முதுகுத்தண்டை பலப்படுத்தும் அற்புதமான பயிற்சியாகும். ‘தண்டு’ என்றால் ‘கம்பு’ என்றும் ‘முதுகுத்தண்டு’ என்றும் பொருள். தண்டாசனம்  முதுகுத்தண்டை பலப்படுத்தும் ஆசனமாகும். இவ்வாசனம் முதுகுத்தண்டை நீட்சியடைய (stretches) வைக்கிறது. மேலும், இந்த ஆசனம் சரியான முறையில் சுவாசிக்க பழக்குகிறது. உடலின் சக்தியோட்டத்தில் மனதை செலுத்த இந்த ஆசனம் உதவுகிறது. அமர்ந்து செய்யக் கூடிய ஆசனங்களை துவக்குவது தண்டாசனத்தில் அமர்ந்துதான்.

Staff Pose

தண்டாசனத்தின் மேலும் சில பலன்கள்
  • முதுகுத் தசைகளை பலப்படுத்துகிறது.
  • மார்புப் பகுதியையும் தோள்களையும் விரிக்கிறது (expands)
  • சீரணத்தை மேம்படுத்துகிறது.
  • வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.
  • உட்காரும், அமரும் நிலையை (posture) சீர் செய்கிறது.
  • இடுப்புப் பகுதியை பலப்படுத்துகிறது.
  • கால் தசைகளின் சோர்வை போக்குகிறது.
செய்முறை
  • விரிப்பில் கால்களை நீட்டி அமரவும். இரண்டு கால்களும் அருகருகே இருக்க வேண்டும்.
  • கைகளை பக்கவாட்டில் தரையில் வைக்கவும்.
  • முதுகை நன்றாக நிமிர்த்தி அமரவும். மார்பை விரிக்கவும்.
  • கால்கள் இரண்டும் முட்டி மடங்காமல் நன்றாக நீட்டியபடி இருக்க வேண்டும்.
  • தலையை நேராக நிமிர்த்தி முன்னால் பார்க்கவும்.
  • துவக்கத்தில் 20 வினாடிகள் இந்த நிலையில் இருக்கலாம்.  நாளடைவில் ஒரு நிமிடம் வரை இந்த ஆசனத்தில் இருக்கலாம்.
குறிப்பு

கால்களை நன்றாக நீட்டி அமர முடியாதவர்கள், ஒரு விரிப்பை மடித்து அல்லது ஒரு yoga block-ஐ கால்களுக்கு அடியில் வைத்து இந்த ஆசனத்தை பழகலாம்.

முதுகில் தீவிர வலி உள்ளவர்கள், சுவற்றை ஒட்டி அமர்ந்து இந்த ஆசனத்தை பழகலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

தமிழ்