நின்று முன் குனியும் ஆசன வரிசையில் சற்று வித்தியாசமான முறையில் செய்வது Wide-Legged Forward Bend என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த ப்ரசாரித பாதோத்தானாசனம். “ப்ரசாரித” என்றால் “வெளிப்புறம் விரித்தல்” ஆகும், “பாதா” என்றால் “பாதம்”, “உட்” என்றால் “ஆற்றல்”, “தான்” என்றால் “விரித்தல்”, “ஆசனம்” என்றால் “நிலை”.

ஆற்றல் வாய்ந்த கால் விரித்த நிலையில் பாதத்தை பிடித்து நீளும் நிலை.

Wide Legged Forward Fold

இதுவரை நாம் பார்த்தது கால்கள் சேர்ந்த அல்லது சிறிது இடைவெளி விட்டு நின்ற நிலையில் குனிவது. இந்த ஆசனத்தில் கால்களை நன்கு விரித்து முன் குனிந்து பாதங்களை பிடித்து தலையை தரையில் வைக்க வேண்டும். அல்லது கைகளை தரையில் வைத்து இரு கைகளுக்கு இடையில் தலையை வைக்க வேண்டும். முழுமையாக செய்ய முடியாதவர்கள் கைகளை தரையில் ஊன்றினால் போதுமானது. அதுவும் முடியாதவர்கள் முன் குனிந்து கால்களை பிடித்துக் கொண்டாலும் போதும்.

இந்த ஆசனம் பெயரிலேயே உள்ளது போல் மிகுந்த ஆற்றலை அளிக்கும் ஆசனம். இந்த நிலையில் கால்கள் விரிவடைவதால் கால் நரம்புகள் நன்கு இழுக்கப்பட்டு பலமடைகின்றன. கால்களுக்கு இடையில் உடலை எடுத்து செல்வதால் இடுப்பு அதிகமாக உந்தப்பட்டு அதன் இயக்கம் செழுமையடைகிறது. இடுப்பு பலமடைகிறது. அதனால், இடுப்பிலிருந்து முன் குனிவதால் முதுகுத்தண்டு இழுக்கப்படுகிறது. அதனால், இடுப்பிலிருந்து முதுகுத்தண்டிற்கு ஆற்றல் சீராகக் கடத்தப்படுகிறது. தரையோடு தலையை வைப்பதால் முதுகுத்தண்டிலிருந்து மூளைக்கு இரத்த ஓட்டம் சீராகப் பாய்ந்து மூளையின் செயல்திறனை அதிகரிக்கிறது.

ப்ரசாரித பாதோத்தானாசனத்தின் பலன்கள்
  • முதுகுத்தண்டு இழுக்கப்பட்டு (stretch) பலப்படுத்தப்படுகிறது.
  • மூளையின் செயல்திறனை அதிகரிக்கிறது.
  • இடுப்புப் பகுதி பலமடைகிறது; மேலும் இடுப்புப் பகுதியின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது.
  • கால் தசைகள் பலமடைகின்றன.
  • சீரண ஆற்றலை தூண்டுகிறது.
  • தலைவலியை போக்க உதவுகிறது.
  • தூக்கமின்மையை சரி செய்கிறது.
  • கீழ் முதுகுவலியை போக்குகிறது.
  • மன அழுத்தத்தை போக்குகிறது
செய்முறை

ப்ரசாரித பாதோத்தானாசனம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

  • கால்களை சுமார் 3 முதல் 4 அடி வரை தள்ளி வைத்து நிற்கவும். பாதம் இரண்டும் நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்.
  • கால்களை தரையில் அழுந்தி வைத்து, முன்புறம் குனியவும். கைகளை கீழ் நோக்கி நீட்டி இரண்டு பாதங்களுக்கு இடையில் தோள்களுக்கு நேராக தரையில் வைக்கவும். மாறாக, கைகளால் உங்கள் பாதங்களை பிடிக்கலாம்.
  • நன்றாகக் குனிந்து உங்கள் உச்சந்தலையை தரையில் உங்கள் கைகளுக்கு இடையில் வைக்கவும்.
  • 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின், மெதுவாக நிமிர்ந்து, பழைய நிலைக்கு வரவும்.
குறிப்பு

கீழ் முதுகில் தீவிர வலி உள்ளவர்களும், கால் முட்டியில் தீவிர பிரச்சினை உள்ளவர்களும் இந்த ஆசனத்தை தவிர்ப்பது நல்லது. சைனஸ் கோளாறு உள்ளவர்களும் இந்த ஆசனத்தை தவிர்க்க வேண்டும்.

மாற்று ஆசனம்: நின்ற தனுராசனம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

தமிழ்