வடமொழியில் உஸ்ட்ரா என்றால் ஒட்டகம். ஒட்டகங்கள் பாலைவனத்தில் பல மைல் தூரத்துக்கு ஓடுகின்றன என்றால் அதற்குக் காரணம் அதன் பலமான நுரையீரல்களே ஆகும். உஸ்ட்ராசனம் செய்யும் போது மார்பு பகுதி விரிந்து மூச்சு மண்டலம் நன்கு விரிவடைந்து நுரையீரலின் விரியும் தன்மையை ஒழுங்குப்படுத்துகிறது. அதன் மூலம், நுரையீரல்கள் பலமடைகின்றன. இதுதான் இந்த ஆசனத்தின் சிறப்பு.
உஸ்ட்ராசனத்தின் மேலும் சில பலன்கள்
- முதுகுத்தண்டின் நெகிழ்வுத்தன்மையை (flexibility) அதிகரிக்கிறது.
- வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.
- தோள்களை பலப்படுத்துகிறது.
- கழுத்து மற்றும் முதுகு வலியை போக்க உதவுகிறது.
- தூக்கமின்மையை போக்குகிறது.
- மன அழுத்தத்தை சரி செய்கிறது.
செய்முறை
- விரிப்பில் முட்டி போடவும். இரண்டு முட்டிகளுக்கு இடையே இடுப்பு அளவு இடைவெளி இருக்க வேண்டும். இரண்டு பாதங்களுக்கு இடையேயும் இடைவெளி இருக்க வேண்டும்.
- உங்கள் முட்டி இடுப்புக்கு நேர் கீழாக இருக்க வேண்டும்.
- மெதுவாக மூச்சை உள்ளிழுத்தவாறே பின்னால் சாயவும்.
- வலது கையால் வலது கணுக்காலையும் இடது கையால் இடது கணுக்காலையும் பிடிக்கவும். அல்லது, பாதங்களின் மீது உங்கள் உள்ளங்கைகளை வைக்கவும்.
- முடிந்த அளவு முதுகை வளைக்கவும். தொடை நேராக இருக்க வேண்டும்.
- தலையை பின்னால் சாய்க்கவும்.
- 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின், உடலை தளர்த்தி அமரவும்.
குறிப்பு
தீவிரமான முதுகுத்தண்டு பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை பயிலக் கூடாது.