நேற்றைய பதிவில் ஏக பாத இராஜகபோடாசனம் பற்றி பார்த்தோம். இன்று நாம் பார்க்கவிருப்பது அதோ முக கபோடாசனம். ஏக பாத இராஜகபோடாசனம் செய்வதற்கு முன் இவ்வாசனத்தை செய்வது உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்க உதவும். வடமொழியில் ‘அதோ’ என்றால் ‘கீழ்நோக்கி’ ‘முக’ என்றால் ‘முகம்’ மற்றும் ‘கபோட’ என்றால் ‘புறா’ என்று பொருள். இவ்வாசனத்தில் உடல் கீழ்நோக்கி இருக்கும் பறவையை ஒத்து இருப்பதால் இப்பெயர் பெற்றுள்ளது.

அதோ முக கபோடாசனத்தில் மணிப்பூரகம், அனாகதம், ஆக்ஞா மற்றும் குரு சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. மணிப்பூரக சக்கரம் தன்மதிப்பை வளர்க்கிறது; உள்ளுக்குள் இருக்கும் ஆற்றலை வெளிக் கொணர்கிறது. மேலும் பிரபஞ்ச ஆற்றலைக் கவரும் திறனையும் வளர்க்கிறது. அனாகதம் ஆக்கபூர்வ மாற்றங்களை உருவாக்குகிறது; அமைதியான மனநிலையை அடைய உதவுகிறது. குரு சக்கரம் ஞானத்தின் ஊற்றாகும்; இச்சக்கரம் உங்கள் அறிவுத்திறனை மேம்படுத்துவதோடு எதிர்மறைகளையும் வெளியேற்றுகிறது.

அதோ முக கபோடாசனத்தின் மேலும் சில பலன்கள்
  • முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்கிறது
  • உடல் முழுவதிலும் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது
  • தோள்களையும் கைகளையும் நீட்சியடையச் செய்வதோடு தளர்த்தவும் செய்கிறது
  • இடுப்புப் பகுதியை விரிக்கிறது
  • கால்களை வலுப்படுத்துகிறது
  • கடினமான ஆசனங்களுக்கு உடலைத் தயார் செய்கிறது
  • மனதை அமைதிப்படுத்துகிறது
செய்முறை
  • அதோ முக ஸ்வானாசனம் நிலைக்கு வரவும்.
  • இடது காலை மடித்து முட்டியைக் கீழே இரண்டு கைகளுக்கு நடுவே வைக்கவும்.
  • வலது காலை நன்றாக பின்னால் நீட்டியவாறு இடுப்பைக் கீழிறக்கவும். வலது கால் தரையில் இருக்க வேண்டும்.
  • முதுகை நன்றாக நிமிர்த்தி மூச்சை வெளியேற்றியவாறு முன்னால் குனிந்து தரையில் தலையை வைக்கவும்.
  • 30 முதல் 60 வினாடிகளுக்கு இந்த நிலையில் இருக்கவும்.
  • மீண்டும் அதோ முக ஸ்வானாசன நிலைக்கு வரவும். மாற்றுப் பக்கம் மீண்டும் செய்யவும்.
குறிப்பு

முடிந்த அளவு மட்டுமே முன்னால் குனியவும். தரையில் தலையை வைக்க முடியவில்லை என்றால், மடித்த கம்பளம் அல்லது yoga block-ஐ முன்னால் வைத்து அதன் மேல் தலையை வைக்கவும்.

தீவிர முதுகுத்தண்டு கோளாறு, இடுப்புப் பிரச்சினை மற்றும் கால் முட்டியில் தீவிரப் பிரச்சினை உள்ளவர்கள் அதோ முக கபோடாசனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

தமிழ்