உடல் மன ஆரோக்கியம்

விடியல்

சிறு வயதில் மழை நாட்களில் பள்ளிக்கூடத்துக்குக் ‘குடைவெளியில்’ நனைந்து சென்ற போதும், சென்ற பின் விடுமுறை அளிக்கப்பட்டு நனைந்தே வீட்டுக்கு வந்த போதும் மனதில் மழை தந்த உற்சாகம்தான் நிரம்பியிருந்தது. இதில் பல நாட்கள் விடுமுறை அறிவித்த பின் மழை நின்று வெயில் அடித்ததும் உண்டு.

மழை பற்றிய வானொலி அறிவிப்புகளும், புயல் அபாய எச்சரிக்கைகளும், அம்மா கொடுத்த சூடான பஜ்ஜிகளும் மழை நாட்களில் அதிக மழையையும் மேலும் பலத்த காற்றையும் எதிர்பார்க்கவே வைத்தன. 

ஆனால், இந்த உற்சாகமெல்லாம் இப்பொழுது மழைநீர் வடியாத தெருக்களைப் பார்க்கும் போதும், பலர் வீடுகளுக்குள் தண்ணீர் நுழைவதையும் பொருட்கள் நாசமாகிப் போவதையும் பார்க்கும் போதும் தன்னால் வடிந்து போகிறது; .

சென்னைக்கு ஏன் இந்த கதி?

உலகத்தின் ஈரப்பதமிக்க பெரும் நகரங்களில் ஒன்றாகக் கருதப்படும் சென்னையில் ஏன் மழைநாட்களில் மோசமான சேதாரமும் கோடைக் காலங்களில் கடும் தண்ணீர் பஞ்சமும் ஏற்படுகின்றன?

1893-ல், சென்னையில், கிட்டத்தட்ட 12.6 சதுர கிலோமீட்டர் அளவாக இருந்த நீர்நிலைகளின் பரப்பளவு, 2017-ல் 3.2 சதுர கிலோமீட்டராகச் சுருங்கியிருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. அதாவது சுமார் 3113 ஏக்கர் (சுமார் 13 கோடியே 56 இலட்சத்து இரண்டாயிரத்து இருநூற்றி எண்பது சதுர அடி) பரப்பளவாக இருந்த நீர்நிலைகள் சுமார் 791 ஏக்கர் பரப்பளவாக (சுமார் 3 கோடியே நாற்பத்தி நான்கு இலட்சத்து ஐம்பத்து ஐயாயிரத்து தொள்ளாயிரத்து அறுபது சதுர அடி) குறைந்திருக்கிறது. முறையான திட்டமிடல் இல்லாத நகரமயமாக்கல் மற்றும் மோசமான நீர் மேலாண்மையால் காணாமல் போன நீர்நிலைகளின் விளைவாலே ஒவ்வொரு மழைக்காலத்திலும் மழை நீர் வீடுகளுக்குள்ளும் வீணாகக் கடலில் கலப்பதுமான நிகழ்வையே நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

மரங்களும் நீர் மேலாண்மையும்

நீர் மேலாண்மையில் மரங்களின் பங்கு இன்றியமையாதது. மரங்கள் மழைப் பொழிவின் போது மழைத் துளிகள் வேகமாக மண்ணில் விழுவதைத் த்டுத்து தன் கிளைகள் மற்றும் இலைகளில் ஓரளவு தாங்குகிறது. தேவையான அளவு நீர் மண்ணிற்கு படிப்படியாக அனுப்பப்பட்டு உபரி நீர் நீராவியாகி மீண்டும் மழை பொழிய உதவுகிறது.

ஒரு இலையால் இவ்வளவு மழைத் துளிகளை இடைமறிக்க முடியுமென்றால்…

Video courtesy: C.R. Ravichandran

மேலும், மண்ணில் விழும் மழை நீர், வேர்களால் கிரகிக்கப்பட்டு இலைகளுக்கு அனுப்பப்படுகிறது. அவை நீராவியாகி மீண்டும் மழை பொழிவுக்கு உதவுகிறது. அவ்வாறு வேர்களால் மழை நீர் கிரகிக்கப்படுவதால் மண்ணிற்கு அதிக நீரை தன்னுள் கிரகிக்க முடிகிறது. அதிக மழைப் பொழிவில் மழை நீர் மண்ணில் மேலும் ஆழமாகச் சென்று அங்கிருந்து தாழ்வான பகுதியை நோக்கி போகிறது. அவ்வாறே நீர் நிலைகளில் தண்ணீரின் அளவு அதிகமாகிறது; நகரத்தின் தாகத்தையும் தணிக்கிறது.

நன்கு வளர்ந்த மரம்  ஒன்று வருடத்திற்கு 15,000 லிட்டருக்கும் அதிகமான மழை நீரை இவ்வாறு இடைமறித்து உதவுகிறது. இவ்வாறான செயல்பாடுகளின் மூலம் வெள்ளப் பெருக்கைத் தவிர்க்கவும் உதவுகிறது. ஒரு மரத்தின் செயல்பாடே இவ்வளவு மழை நீரை சேமிக்க உதவுகிறது என்றால் நகரம் தோறும் சாலைகளின் இரு புறமும் இருந்த மரங்கள் பாதுகாக்கப்படிருந்தால் சென்னை சிங்காரமாகவே இருந்திருக்கும். 

மீண்டும் சிங்காரமாகுமா சென்னை?

பழங்காலத்துத் தமிழ்த் திரைப்படங்களைத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும் போது சென்னையின் பசுமைக்காகவே பார்க்கத் தோன்றும்.

கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் போன்ற பகுதிகளெல்லாம் கிராமம் என்று அழைக்கப்பட்டன. சென்னையின் பெரும்பாலான பகுதிகள் பச்சைப் பசேலென்று கண்களுக்கும் மனதிற்கும் விருந்தாகக் காட்சியளித்தன.

பெருகி வந்த மக்கள் தொகை, நகரமயமாக்கல், நவீனமயமாக்கல்,  வேலை வாய்ப்பை முன்னிட்டு நகர்ப்புறத்துக்கு மக்களின் இடப்பெயர்வு போன்ற காரணங்களால் தவிர்க்க முடியாமல் பல மாற்றங்களைச் சென்னை சந்திக்க வேண்டி வந்தாலும், மரங்களையும், நீர் நிலைகளையும் பாதிக்காத வகையில் நகரமயமாக்கல் நடந்திருந்தால் இன்றைய சென்னையும் சிங்காரமாகவே இருந்திருக்கும். 

சிங்காரச் சென்னைக்கான நம்பிக்கையுடன்…

சென்னையின் மிச்சமுள்ள வளங்களைத் தக்க வைக்கவும், மறைந்த வளங்களை மீட்கவும் பல நல்ல முயற்சிகள் நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றன என்பது நம்பிக்கையூட்டக் கூடியதாக இருக்கிறது.

சூரிய அத்தமனத்தோடு அன்றைய நாள் முடிகிறது.

ஆனால், அடுத்த நாளுக்கான நம்பிக்கையையும் அது விதைக்கிறது. 

விடியல் எப்பொழுதும் போல நடக்கிறது.  

பொழுதும் புலர்ந்து கொண்டு தான் இருக்கிறது. 

தெளிவான வானத்தைக் காணும் வரை இந்த மழையை சென்னையும் சென்னை மக்களும் தாங்குவோம் என்கிற நம்பிக்கையுடனும்,

சென்னையின் விடியல் இனி பிரகாசமானதாக இருக்கும் என்கிற எதிர்ப்பார்ப்போடும்…

பறவைகள் சுதந்திரமாகப் பறப்பது போல் நம் மனமும் குதூகலிக்கும் வண்ணம் சென்னை தன் முந்தைய வனப்பை மீட்டெடுக்கும் நாளிற்காக நாமும் நம் பங்காற்றலாம்.

Video courtesy: C.R. Ravichandran

காணொளியை முழுவதுமாகப் பார்க்கவும்.

இனி, எந்த கட்டுமானப் பணிக்கும் மரங்களை வெட்டாமல், நீர்வளங்களை பாதிக்காமல் இருப்பதோடு மரங்களையும் நீர்வளங்களையும் அதிகப்படுத்துதல் இன்றைய அத்தியாவசியத் தேவையாகும்; இதுவே சென்னையை மீட்டெடுக்கும்.

மரங்கள் வெட்டப்படுவதைப் பற்றிப் படிக்கும் போதெல்லாம் மிகுந்த வேதனையோடு என் நினைவுக்கு வருவது என் கணவர் எழுதிய இக்கவிதை தான்.

முட்டி முளைத்துப் பார்

மரம் – 

உனக்கு முன்பே பரிணமித்து விட்ட முன்னோடி

உனக்கு முப்பாட்டன்

உன் பரிணாமத்துக்கு உரமூட்டியவன்

உன் உயிருக்கு இன்றியமையாதவன்

அதனாலேயே உன்னை விட

பூமிக்கு உரிமையுள்ளவன்.

 

இலாபத்துக்காக மரத்தை

வெட்டும் மிருகமே

முளைப்பதின் போராட்டமும் வலியும்

தெரியுமா உனக்கு?

 

உன்னை சுமக்கக் 

கருப்பை இருக்கிறது

நீ பிறக்கத் தாய் உடல் உதவுகிறது

நீ வளர பெற்றோரும் சமூகமும்.

 

பலரால் உயிர் வாழும் மனிதனே

தனித்துப் போராடிக் கொண்டிருக்கும்

மரத்தை அழிக்க நீ யார்?

 

மரம் திருப்பித் தாக்காது என்ற துணிவா?

மரமாக அல்ல, நீராக, 

காற்றாக, அலையாக

திருப்பிக் கொண்டுதான் இருக்கிறது.

 

அதை உணரும் அறிவில்லை உனக்கு

நீ அழிப்பது மரத்தை அல்ல

உன் உயிரை.

 

சுண்டு விரல் பட்டாலே

ஒடிந்து போகும் பிஞ்சுச் செடி,

கடப்பாரையால் குத்த வேண்டிய பூமியை

முட்டிக் கிழித்து முளைக்கிறதே;

உன் வாழ்க்கையில் 

உணர்ந்திருப்பாயா அந்த வலியை?

 

முட்டி முளைத்துப் பார் புரியும்

போராட்டத்தின் வலியும் வேதனையும்;

தெரியும் ஆக்கத்தின் இன்பம்.

                                    – ச. இரா. தமிழரசு

Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் http://www.youtube.com/@PetsDiaryandMomsToo என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்