முந்தைய பதிவுகளில் ஒன்றில் நாம் பாதாங்குஸ்தாசனம் பற்றிப் பார்த்திருக்கிறோம். நின்று செய்யும் அந்த ஆசனத்தில் நாம் முன்னால் குனிந்து கால் பெருவிரல்களைப் பிடிப்போம். இன்று நாம் பார்க்கவிருக்கும் உத்தித ஹஸ்த பாதாங்குஸ்தாசனத்தில் நாம் நின்றவாறு பெருவிரலைப் பற்றி ஒரு காலை மட்டும் உயரத் தூக்கவிருக்கிறோம். வடமொழியில் ‘உத்தித’ என்றால் ‘நீட்டுதல்’, ‘ஹஸ்த’ என்றால் ‘கை’, ‘பாத’ என்றால் ‘பாதம்’ மற்றும் ‘அங்குஸ்தா’ என்றால் ‘பெருவிரல்’ என்று பொருள். ஆக, இது கையால் கால் பெருவிரலைப் பற்றி காலை நீட்டுதல் என்று பொருள்படும். இது ஆங்கிலத்தில் Extended Hand to Big Toe Pose என்று அழைக்கப்படுகிறது.
உத்தித ஹஸ்த பாதாங்குஸ்தாசனத்தில் மூலாதாரம் மற்றும் சுவாதிட்டானம் ஆகிய இரு சக்கரங்கள் தூண்டப்பட்டு அவற்றின் செயல்பாடுகள் மேம்படுத்தப்படுகின்றன. மூலாதாரம் நிலையான தன்மையை அளிக்கிறது; சுவாதிட்டானம் படைப்புத் திறனை வளர்க்கிறது. நாம் முன்னர் பாதாங்குஸ்தாசனத்தில் கூறியுள்ளது போல் கட்டை விரல் அழுந்துவதால் கல்லீரல், மண்ணீரல் சக்தி ஓட்டப் பாதைகள் செழுமையாக இயங்கி இவ்விரண்டு உறுப்புகளின் நலனும் பாதுகாக்கப்படுகிறது.
பாதாங்குஸ்தாசனம் பலன்கள் மற்றும் செய்முறையைப் பார்க்க, இந்தப் பக்கத்துக்குச் செல்லவும்.
உத்தித ஹஸ்த பாதாங்குஸ்தாசனத்தின் மேலும் சில பலன்கள்
- நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது
- முதுகெலும்பை பலப்படுத்துகிறது
- முதுகுப் பகுதியை உறுதியாக்குகிறது
- கால்களை நீட்சியடையச் செய்வதுடன் கால் தசைகளைப் பலப்படுத்தவும் செய்கிறது
- இடுப்புப் பகுதியை நீட்சியடையச் செய்கிறது; இடுப்பைப் பலப்படுத்துகிறது
- சீரண கோளாறுகளை நேர் செய்கிறது
- உடல் முழுமைக்கும் ஆற்றலை அளிக்கிறது
- உடல், மனம் இரண்டின் சமநிலையைப் பாதுகாக்கிறது
- கவனத்தைக் கூர்மையாக்குகிறது
- மனதை அமைதிப்படுத்துகிறது
செய்முறை
- தாடாசனத்தில் நிற்கவும்.
- உடலின் எடையை இடது கால் தாங்குமாறு நின்று வலது காலை மடித்து நெஞ்சு வரை உயரத் தூக்கவும்.
- வலது கையை வலது காலின் உள்புறமாகக் கொண்டு வந்து வலது கால் பெருவிரலைப் வலது கை சுட்டு விரல், நடு விரல் மற்றும் கட்டை விரலால் வளைத்துப் பற்றவும்.
- நேராக நின்று காலை மெதுவாக முன்னால் அல்லது பக்கவாட்டில் நீட்டவும். முட்டி வளையாதிருக்க வேண்டும்.
- இடது கையை தொங்க விடவும்; அல்லது இடுப்பில் வைக்கவும்.
- 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின் வலது காலைத் தரையில் வைத்து கால் மாற்றி மீண்டும் செய்யவும்.
குறிப்பு
இடுப்பு அல்லது மூட்டுகளில் தீவிரப் பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.
ஒற்றைக் காலில் நிற்பது கடினமாக இருந்தால் சுவரோடு லேசாக ஒட்டியபடி நின்று இவ்வாசனத்தைப் பழகவும்.