இன்று முதல் தொடர்ந்து வரும் சில நாட்களுக்கு நாம் நின்று செய்யும் ஆசனங்களைப் பார்க்கலாம். இன்று நாம் பார்க்கவிருப்பது அர்த்த உத்கடாசனம். வடமொழியில் ‘அர்த்த’ என்றால் ‘பாதி’ என்றும் ‘உத்கடா’ என்றால் ‘தீவிரமான’ மற்றும் ‘பலம் பொருந்திய’ என்று பொருள். இந்த ஆசன நிலையே கடினமானதும் உடலுக்கு பலம் தரக்கூடியதும் ஆகும். அர்த்த உத்கடாசனம் முதுகெலும்பு வழியாக ஆற்றல் பரவுவதை சீர் செய்கிறது. இதனால் உடம்பிலும் மனதிலும் உறுதியும் ஆற்றலும் பெருகுகின்றன.
அர்த்த உத்கடாசனம் மூலாதார மற்றும் சுவாதிட்டான சக்கரத்தைத் தூண்டுகிறது. மூலாதரச் சக்கரம் தூண்டப்படுவதால் மற்ற சக்கரங்களின் செயல்பாடுகளும் வலுவடைகின்றன. படைப்புத்திறனும், சூழல்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும் வளர்கின்றன. மனம் ஒருநிலைப்படுகிறது.
அர்த்த உத்கடாசனத்தின் மேலும் சில பலன்கள்
- நோய் எதிர்ப்பு ஆற்றலை வளர்க்கிறது
- கால்களைப் பலப்படுத்துகிறது
- மூச்சுக் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது
- வயிற்றிலுள்ள அதிகக் கொழுப்பைக் கரைக்க உதவுகிறது
- மூட்டுகளின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது; மூட்டு வலியைப் போக்குகிறது
- மாதவிடாய் வலிகளைப் போக்குகிறது
- சையாடிக் பிரச்சினையை சரி செய்ய உதவுகிறது
செய்முறை
- விரிப்பில் நேராக நிற்கவும். பாதங்களை அருகருகே வைக்கவும். அல்லது அரை அடி இடைவெளி விட்டும் வைக்கலாம்.
- மூச்சை உள்ளிழுத்தவாறு கைகளைப் பக்கவாட்டில் உயர்த்தவும். மூச்சை வெளியேற்றவும்.
- மூச்சை உள்ளிழுத்தவாறு கைகளைத் தலைக்கு மேலே உயர்த்தி இரண்டு உள்ளங்கைகளையும் வணக்கம் சொல்லும் நிலையில் வைக்கவும். கைகளை தோள்களுக்கு நேராக முன்னால் நீட்டியும் பயிலலாம்.
- கைகளை உயர்த்தும் போது, இடுப்பை கீழ் நோக்கி இறக்கவும். கற்பனையான இருக்கையில் அமர்வது போல் உடலை இறக்கவும். பாதங்கள் அருகருகே இருந்தால் இரண்டு கால் முட்டிகளும் சேர்ந்தேதான் இருக்க வேண்டும்.
- 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின் கைகளைக் கீழே கொண்டு வந்து நேராக நிற்கவும். தொடர் பயிற்சியில் ஒரு நிமிடம் வரை இந்த ஆசனத்தில் இருக்கலாம்.
குறிப்பு
குறைவான இரத்த அழுத்தம், தூக்கமின்மை ஆகிய பிரச்சினைகள் உள்ளவர்கள் இந்த ஆசனம் பயில்வதைத் தவிர்க்கவும்.