வடமொழியில் ‘அர்த்த’ என்றால் ‘அரை’, ‘’மத்ஸ்ய’ என்றால் ‘மீன்’, ‘இந்திர’ என்றால் ‘அரசன்’. ஆக, இது மீன்களின் அரசனின் பாதி நிலை ஆசனம் என்பதாகும். மத்ஸ்யேந்திரர் என்ற யோகியின் பெயரை ஒட்டி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை Half Lord of the Fishes என்றும் குறிப்பிடுவர்.
அர்த்த மத்ஸ்யேந்திராசனத்தில் முதுகெலும்பு நன்றாகத் திருப்பப்பட்டு, அதன் நெகிழ்வுத்தன்மை (flexibility) அதிகரிக்கப்படுகிறது. முதுகுத்தண்டிற்கு புத்துணர்ச்சி அளித்து அதன் செயல்பாட்டை சிறந்த நிலையில் வைத்திருக்க உதவுகிறது.
அர்த்த மத்ஸ்யேந்திராசனத்தின் மேலும் சில பலன்கள்
- முதுகுத் தசைகளை பலப்படுத்துகிறது.
- முதுகு வலியை போக்க உதவுகிறது.
- நரம்புகளை பலப்படுத்துகிறது.
- வயிற்றிலுள்ள அதிகக் கொழுப்பை குறைக்க உதவுகிறது.
- இடுப்பு பகுதியின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது.
- பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை போக்க உதவுகிறது.
செய்முறை
- விரிப்பில் கால்களை நீட்டி அமரவும்.
- இடது காலை மடித்து வலது தொடையின் வெளிப்புறமாக தரையில் வைக்கவும்.
- வலது காலை மடித்து இடது புட்டத்தின் அருகே தரையில் வைக்கவும்.
- உடம்பின் மேல் பகுதியை இடது புறமாக திருப்பி, இடது கையை முதுகுக்கு பின்புறமாக வலது புறம் கொண்டு வந்து இடது கணுக்காலைப் பற்றவும். அல்லது இடது கையை இடது புட்டத்துக்கு சற்று பின்னால் தரையில் வைக்கவும்.
- வலது கையை உயர்த்தி இடது காலின் முட்டிக்கு மேல் கொண்டு வந்து, வலது கால் முட்டியின் மேல் வைக்கவும்.
- தலையை இடது தோளுக்கு நேர் மேலாகத் திருப்பவும்.
- 30 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின், கால்களை மாற்றி இதே முறையை செய்யவும்.
குறிப்பு
முதுகுத்தண்டு, முதுகு மற்றும் இடுப்பில் தீவிர பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்ப்பது நல்லது.