உடல் மன ஆரோக்கியம்

சளியைப் போக்க இயற்கை மருத்துவக் குறிப்புகள்

‘சும்மா விட்டால் ஒரு வாரத்தில் போகும்; மருந்து சாப்பிட்டால் ஏழு நாளில் போகும்’ என்று சாதாரணமாக ஒதுக்கித் தள்ளிய சளிப் பிரச்சினை இன்று கொரோனாவுக்கான அறிகுறிகளில் ஒன்றாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. சாதாரண சளியைப் போக்க மிகவும் பிரபலமான வீட்டு மருத்துவ முறைகளை இன்று பார்க்கலாம்.

சளியைப் போக்கும் இயற்கை மருத்துவம்

அஞ்சறைப் பெட்டியிலும், தோட்டத்து மூலிகைகளிலும் சாதாரண சளிக்கு எளிதாக நிவாரணம் பெறலாம். இதோ, சளியைப் போக்க சில வீட்டு மருத்துவ குறிப்புகள்:

1) மஞ்சள்

சமையலறையின் முடிசூடா அரசியான மஞ்சள் அற்புதமான மருத்துவ பலன்களைக் கொண்டது. மஞ்சளில் இருக்கும் curcumin-இன், மூச்சுக் கோளாறுகள் உட்பட பல்வேறு மருத்துவ குணங்கள் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கபட்டுள்ளன.

ஒரு கோப்பை பாலில் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து பின் பருகவும். சாதாரண பாலிற்கு பதிலாக தேங்காய் பால் அல்லது பாதாம் பாலைப் பயன்படுத்தலாம்.

2) இஞ்சி

இஞ்சியில் இருக்கும் gingerol, தொண்டையை இதமாக்குவதோடு, சளியை நீக்கவும் உதவுகிறது.

ஒரு அங்குல அளவு இஞ்சியை நன்றாகக் கழுவி, தோல் சீவி, நசுக்கிக் கொள்ளவும். அதனுடன் ஒரு கோப்பைத் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும், தீயை சிறிதாக்கி மேலும் ஓரிரண்டு நிமிடங்களுக்குக் கொதிக்க வைக்கவும். வடிகட்டி தேன் சேர்த்து பருகவும். 

3) பூண்டு

பூண்டில் உள்ள vitamin C, சளியைப் போக்கவும், அதிக சளி சேர்வதைத் தடுக்கவும் வல்லது.

பூண்டை தோல் நீக்கி, நசுக்கி, பச்சையாக உண்ணலாம். அல்லது சில பூண்டு பற்களை நசுக்கி பாலில் வேக வைத்தும் உண்ணலாம். பூண்டு ரசம் பருகலாம்.

4) சின்ன வெங்காயம்

வெங்காயத்தில் இருக்கும் sulfur மற்றும் quercetin, சளியைக் கரைக்க உதவுகின்றன.

மூன்று சின்ன வெங்காயத்தை எடுத்து, அத்துடன் சுமார் 10 மிளகு மற்றும் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து, ஒரு தட்டு தட்டவும். இவற்றை ஒரு கோப்பைத் தண்ணீரில் சேர்த்து தண்ணீர் பாதி அளவாக சுண்டும் வரைக் கொதிக்க வைக்கவும். வடிகட்டி பருகவும்.

5) வெந்தயம்

வெந்தயத்தின் antispasmodic தன்மை சளியைக் கரைக்க உதவும். வெந்தயத்தில் உள்ள saponins மூச்சுக் குழாயைச் சுத்தம் செய்து, நிவாரணத்தைத் துரிதப்படுத்தும்.

ஒரு கோப்பைத் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி பொடித்த வெந்தயத்தை சேர்த்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும், தீயை சிறிதாக்கி மேலும் 2-3 நிமிடங்களுக்குக் கொதிக்க விடவும். வடிகட்டி சிறிது தேன் சேர்த்து பருகவும்.

6) துளசி

சளியைப் போக்கும் வீட்டு மருத்துவத்தில் முக்கிய இடம் பிடிக்கும் மூலிகைகளில் துளசியும் ஒன்று. துளசி antiviral தன்மை கொண்டது. நோய் தொற்றுகள் உட்பட பல்வேறு நோய்களிலிருந்து துளசி நிவாரணம் அளிக்கிறது.

சுமார் 10 துளசி இலைகளை எடுத்து நன்றாகக் கழுவி ஒரு கோப்பைத் தேநீர் சேர்த்து பாதி அளவாக ஆகும்வரை சுண்ட வைக்கவும். வடிகட்டி பருகவும்.

7) கற்பூரவல்லி

வீட்டுத் தோட்டத்தில் வேகமாக வளரக் கூடிய மூலிகைகளில் கற்பூரவல்லியும் ஒன்று. சளி, இருமல், மூச்சுக் கோளாறுகள் ஆகியவற்றைப் போக்கும் ஆற்றல் மிகுந்த கற்பூரவல்லி சுரத்தையும் தணிக்கக் கூடியது.

சுமார் அய்ந்து கற்பூரவல்லி இலைகளை எடுத்து நன்றாகக் கழுவி, சற்று நொறுக்கி, ஒரு கோப்பைத் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும் தீயைச் சிறிதாக்கி, மேலும் சில நிமிடங்களுக்குக் கொதிக்க வைக்கவும். பின் தேநீரை வடிகட்டி சற்று தேன் சேர்த்து பருகவும்.

கற்பூரவல்லியுடன் ஒன்று அல்லது இரண்டு பல் பூண்டு சேர்த்தும் கொதிக்க வைக்கலாம்.

8) வெற்றிலை

வெற்றிலை சளியைப் போக்குவதோடு ஆஸ்துமா உள்ளிட்ட மூச்சுக் கோளாறுகளை நீக்கவும் உதவுகிறது.

ஒரு கைப்பிடி அளவு வெற்றிலையை எடுத்து சுமார் 7 அல்லது 8 கோப்பைத் தண்ணீரில் சேர்த்து கொதிக்க விடவும். அடுப்பிலிருந்து தண்ணீரை இறக்கி, ஆவி பிடிக்கவும்.

3 அல்லது 4 வெற்றிலையை நன்றாக அரைத்து அதனுடன் சிறிது கடுகு எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையை மார்பில் பூச சளியிலிருந்திலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

9) புதினா

புதினாவில் இருக்கும் menthol சளியைக் கரைக்க உதவுகிறது.

10 முதல் 12 புதினா இலைகளை நன்றாகக் கழுவி ஒரு கோப்பைத் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்கவும். கொதிக்கத் தொடங்கியதும் தீயை சிறிதாக்கி, மேலும் ஒன்றிரண்டு நிமிடங்களுக்கு கொதிக்க வைத்துப் பின் இறக்கி, வடிகட்டவும். தேவையெனில் சிறிது தேன் சேர்த்து பருகவும்.

சளியைப் போக்கும் எசன்சியல் எண்ணெய்கள்

எசன்சியல் எண்ணெய்கள் உடல், மன நலத்துக்கு அற்புதமான பலன்களைத் தரக் கூடியவை. சளியைப் போக்கும் எசன்சியல் எண்ணெய்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.

1) Eucalyptus Essential Oil

Antibacterial மற்றும் anti-inflammatory தன்மைகள் கொண்ட eucalyptus எசன்சியல் எண்ணெயில் இருக்கும் cineole சளியைக் கரைக்கும் ஆற்றல் கொண்டது.

ஒரு வாளி கொதிக்கும் தண்ணீரில் 4 அல்லது 5 சொட்டு eucalyptus எசன்சியல் எண்ணெய் ஊற்றி ஆவி பிடிக்கவும்.

2) Peppermint Essential Oil

புதினாவின் மருத்துவ குணம் பற்றி மேலே பார்த்தோம். 2 அல்லது 3 சொட்டு peppermint எசன்சியல் எண்ணெயை மார்பில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும்.

ஒரு வாளி கொதிக்கும் தண்ணீரில் 4 முதல் 5 சொட்டு peppermint எசன்சியல் எண்ணெயை சேர்த்து ஆவி பிடிக்கவும்.

3) Lavender Essential Oil

Lavender எசன்சியல் எண்ணெயின் decongestant மற்றும் antiviral தன்மைகள், சளியைக் கரைக்க உதவுகின்றன. Lavender எசன்சியல் எண்ணெயில் இருக்கும் cineole, சளியை வெளியேற்றும் தன்மை கொண்டது.

ஒரு வாளி கொதி நீரில், 4 முதல் 5 துளி lavender எசன்சியல் எண்ணெய் சேர்த்து ஆவி பிடிக்கவும்.

இவை அனைத்தும் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் வீட்டு மருத்துவ முறைகள் என்றாலும், தகுந்த மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே பயன்படுத்தவும்.

சளி மற்றும் இருமலைப் போக்கும் முத்திரைகள் பற்றிப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். பல்வேறு நோய்களுக்கான யோகப்பயிற்சிகள், இயற்கை முறையில் நோய் தீர்த்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் e-புத்தகங்கள் எழுதியிருக்கிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்