வடமொழியில் ‘பார்சுவ’ என்றால் ‘பக்கவாட்டு’ அல்லது ‘பக்கம்’, ‘உத்’ என்றால் ‘சக்தி வாய்ந்த’ என்றும் ‘தான்’ என்றால் ‘நீட்டுதல்’ என்றும் பொருள். அதாவது, பக்கவாட்டில் நன்றாக உடலை நீட்டுதல் என்பதாகும். இது ஆங்கிலத்தில் Intense Side Stretch Pose என்றும் Pyramid Pose என்றும் அழைக்கப்படுகிறது.

பார்சுவோத்தானாசனம் மிகவும் ஆற்றல் வாய்ந்ததுதான். இது சகஸ்ராரம், விசுத்தி, மணிப்பூரகம், சுவாதிட்டானம் மற்றும் மூலாதாரம் ஆகிய அய்ந்து சக்கரங்களைத் தூண்டுகிறது. சகஸ்ராரச் சக்கரம் பிரபஞ்ச ஆற்றலோடு நம் ஆழ்மனதுக்கு தொடர்பை ஏற்படுத்துகிறது. தன்னை உணர்தல் மற்றும் ஞானம் பெறுதல் ஆகியவை இந்தச் சக்கரத்தின் சீரிய செயல்பாட்டால் மட்டுமே சாத்தியப்படும். சகஸ்ராரம் சீராக இயங்கும்போது மூளையின் ஆற்றல்கள் வளரும். மிக விரைவில் சக்கரங்கள் பற்றியும் அவற்றின் செயல்பாடுகள் பற்றியும் பார்ப்போம்.

Pyramid Pose benefits

பார்சுவோத்தானாசனத்தின் மேலும் சில பலன்கள்
  • மூளைக்குச் செல்லும் பிராணவாயுவை அதிகரிக்கிறது
  • அனைத்து மூட்டுகளையும் பலப்படுத்துகிறது
  • கால்களைப் பலப்படுத்துகிறது
  • வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது
  • சீரண கோளாறுகளைச் சரி செய்கிறது
  • கவனத்தைக் கூர்மையாக்குகிறது
  • மனதை அமைதிப்படுத்துகிறது
செய்முறை
  • தாடாசனத்தில் நிற்கவும்.
  • வலது காலை இடது காலிலிருந்து சுமார் ஒன்றரை அடி இடைவெளி விட்டு தரையில் வைக்கவும். வலது கால் 90 degree கோணத்தில் கால் விரல்கள் வலப்புறம் நோக்கி இருக்க வேண்டும்.
  • கைகள் இரண்டையும் முதுகுக்குப் பின்னால் கொண்டு சென்று உள்ளங்கைகளை ஒன்றாக வணக்கம் சொல்லும் பாணியில் வைக்கவும்.
  • மேல் உடலை வலப்புறமாகத் திருப்பவும்.
  • மூச்சை வெளியேற்றியவாறு வலதுபுறமாகக் குனிந்து நெற்றியை வலது முட்டி அல்லது அதற்குக் கீழே வைக்கவும்.
  • 30 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின், மூச்சை உள்ளிழுத்தவாறு நிமிரவும். பின் கால் மாற்றி இடது புறம் செய்யவும்.
  • 30 வினாடிகள் செய்த பின் தாடாசனத்தில் நிற்கவும்.
குறிப்பு

அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள், தீவிர மூட்டுப் பிரச்சினை, முதுகுத்தண்டு மற்றும் இடுப்பு பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.

முடிந்த வரை மட்டுமே குனியவும். கைகளைப் பின்னால் எடுத்துச் சென்று வணக்கம் நிலையில் வைக்க முடியாதவர்கள், வலது கை மணிக்கட்டை இடது கையால் பற்றி இந்த ஆசனத்தைப் பழகலாம். மாறாக முன்னால் உள்ள சுவற்றில் கைகளை வைத்துப் பழகலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

தமிழ்