புராணத்தில் வரும் கதாபாத்திரத்தின் பெயரை ஒட்டி அழைக்கப்படும் ஆஞ்சநேயாசனம், ஆங்கிலத்தில் Low Lunge Pose மற்றும் Crescent Moon Pose என்று அழைக்கப்படுகிறது.
ஆஞ்சநேயாசனத்தில் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம் மற்றும் அனாகதம் ஆகிய சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. இவ்வாசனத்தைத் தொடர்ந்து பயின்று வர இருதய நலன் பாதுகாக்கப்படுவதோடு பிராண ஆற்றலையும் உடல் முழுதும் செலுத்த உதவுகிறது.
சக்கரங்கள் மற்றும் அவற்றின் இயக்கம் பற்றி படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
ஆஞ்சநேயாசனத்தின் மேலும் சில பலன்கள்
- முதுகுத்தண்டு மற்றும் முதுகுத் தசைகளை பலப்படுத்துகிறது.
- தோள்களை விரிக்கிறது
- நுரையீரலைப் பலப்படுத்துகிறது
- வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது
- உடலின் ஆற்றலை வளர்க்கிறது
- இடுப்புப் பகுதியின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது
- இடுப்புப் பகுதியில் உள்ள அதிக சதையைக் கரைக்க உதவுகிறது
- சையாடிக் வலியைப் போக்க உதவுகிறது
- உடலின் சமநிலையைப் பராமரிக்கிறது
- மனதை அமைதிப்படுத்துகிறது
செய்முறை
- விரிப்பில் நேராக நிற்கவும். இரண்டு கால்களுக்கு இடையில் சற்று இடைவெளி விட்டு நிற்கவும்.
- வலது காலை பின்னால் நீட்டி முட்டியிலிருந்து பாதம் வரையில் தரையில் படுமாறு வைக்கவும்.
- கைகளை மேல் நோக்கி உயர்த்தவும். இரண்டு உள்ளங்கைகளும் ஒன்றை ஒன்று பார்த்தவாறு இருக்க வேண்டும்.
- நேராகப் பார்க்கவும்.
- வயிற்றுப் பகுதியை முன்தள்ளி முதுகை வளைத்து தலையையும் கைகளையும் பின்னால் சாய்த்தவாறும் இவ்வாசனத்தைப் பழகலாம்.
- 20 வினாடிகள் இந்நிலையில் இருக்கவும். பின் ஆரம்ப நிலைக்கு இடது காலைப் பின்னால் வைத்துப் பயிலவும்.
குறிப்பு
தீவிர இடுப்புப் பிரச்சினை உள்ளவர்கள் மற்றும் தொடைப்பகுதியில் உள்ள தசையில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் இவ்வாசனத்தைத் தவிர்க்கவும். கால் முட்டியில் வலி ஏற்பட்டால் விரிப்பை மடித்து காலுக்கடியில் வைத்துப் பழகலாம்.