உடல் மன ஆரோக்கியம்

கழுத்து வலியைப் போக்கும் முத்திரைகள்

முந்தைய பதிவு ஒன்றில் கழுத்து வலியைப் போக்கும் ஆசனங்கள் பற்றிப் பார்த்தோம். கழுத்து வலியைப் போக்கும் முத்திரைகளில் சிலவற்றைப் பற்றி இன்று பார்க்கலாம்.

முத்திரைகள் எவ்வாறு கழுத்து வலியைப் போக்குகின்றன?

குறிப்பிட்ட முத்திரைகள் கழுத்து இறுக்கத்தைப் போக்குவதன் மூலமும், கழுத்து, தோள் மற்றும் மேல் முதுகுத் தசைகளைப் பலப்படுதுவதன் மூலமும் கழுத்து வலியைப் போக்க உதவுகின்றன. மேலும் மேல் முதுகுத்தண்டைப்  பலப்படுத்துவதன் மூலமும் கழுத்து வலியைப் போக்க உதவுகின்றது. 

கழுத்து வலியைப் போக்கும் முத்திரைகள்

கழுத்து வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும் முத்திரைகள் சில:

1) பிரம்ம முத்திரை

செய்முறை

  • பதுமாசனம், சுகாசனம் அல்லது வஜ்ஜிராசனத்தில் அமரவும்.
  • இரண்டு உள்ளங்கைகளையும் தொடையின் மீது வைக்கவும்.
  • இரண்டு கைகளின் பெரு விரல்களையும் மடித்து, பெருவிரலின் நுனி சிறுவிரலின் அடியில் இருக்குமாறு வைக்கவும். 
  • மீதமுள்ள நான்கு விரல்களையும் பெருவிரலின் மேல் வைத்து மூடவும். 
  • இப்பொழுது இரண்டு கைகளின் மடிக்கப்பட்ட விரல்களும் ஒன்றோடு ஒன்று சேருமாறு வைக்கவும். சற்றே அழுத்தம் கொடுக்கவும்.
  • 15 முதல் 20 நிமிடங்கள் வரை பிரம்ம முத்திரையில் இருக்கவும்.
2) பிருத்வி முத்திரை

  • பதுமாசனம், வஜ்ஜிராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும்.
  • மோதிர விரல் மற்றும் பெருவிரலின் நுனிகளை ஒன்றாக சேர்த்து வைக்கவும்.
  • மீதமுள்ள மூன்று விரல்களையும் நீட்டியவாறு வைக்கவும்.
  • இரண்டு கைகளாலும் ஒரே நேரத்தில் பயிலவும்.
  • 30 முதல் 45 நிமிடங்கள் வரை இம்முத்திரையில் இருக்கவும்.
3) பிராண முத்திரை

செய்முறை

  • முதுகும் கழுத்தும் நேராக இருக்குமாறு அமரவும். பத்மாசனம், வஜ்ஜிராசனம் போன்ற தியான ஆசனங்களில் தொடர்ந்து அமர முடிந்தால் அவ்வாறே அமர்ந்து பழகலாம். அல்லது சுகாசனத்தில் அமரலாம்.
  • கைவிரல்களை நீட்டவும்.
  • மோதிர விரல் மற்றும் சிறுவிரலின் நுனிகளை பெருவிரலின் நுனியால் தொடவும்.
  • மற்ற இரண்டு விரல்களையும் நேராக நீட்டியவாறு வைக்கவும்.
  • கண்களை மூடிக் கொண்டு முத்திரையில் மனதை வைக்கவும்.
  • சீரான சுவாசத்தில் இருக்கவும்.
  • பிராண முத்திரையை 45 நிமிடங்கள் வரை செய்யலாம். வேளைக்கு 15 நிமிடங்கள் வீதம் மூன்று வேளைகளாகப் பிரித்தும் செய்யலாம்.
4) வாயு முத்திரை

செய்முறை

  • பதுமாசனம், வஜ்ஜிராசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொள்ளவும். 
  • சுட்டும் விரலை மடக்கி பெருவிரலின் கீழுள்ள பகுதியில் வைக்கவும். 
  • பெருவிரலை மடித்து சுட்டும் விரலின் மேல் வைக்கவும்.
  • மீதமுள்ள மூன்று விரல்களையும் நீட்டிக் கொள்ளவும்.
  • 30 முதல் 45 நிமிடங்கள் வரை இம்முத்திரையை பயிலவும். 

5) அஞ்சலி முத்திரை

செய்முறை

  • பதுமாசனம், வஜ்ஜிராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும்.
  • இரண்டு உள்ளங்கைகளையும் அனாகத சக்கரத்தின் இருப்பிடமான மார்புக்கு அருகே கொண்டு வரவும். 
  • இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றாக சேர்த்து வணக்கம் கூறுவது போல் வைக்கவும். இரண்டு கைகளின் முட்டிகளும் நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்.
  • சிறிது நேரம் இந்த நிலையில் இருக்கவும்.
6) சூன்ய வாயு முத்திரை

செய்முறை

  • பதுமாசனம், சுகாசனம் அல்லது வஜ்ஜிராசனத்தில் அமரவும்.
  • சுட்டும் விரல் மற்றும் நடு விரலை மடித்து உள்ளங்கையில், பெருவிரலின் கீழ் வைக்கவும். 
  • பெருவிரலை மடித்த விரல்கள் மீது மடித்து வைக்கவும். 
  • மோதிர விரல் மற்றும் சிறுவிரலை நீட்டியவாறு வைக்கவும். 
  • பொதுவாக சூன்ய வாயு முத்திரையில் 15 நிமிடங்கள் இருந்தால் போதுமானது. உடல் நல உபாதைகளுக்காக செய்வதாக இருந்தால் 45 நிமிடங்கள் வரை சூன்ய வாயு முத்திரையைப் பழகவும். 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள கழுத்து வலியைப் போக்கும் முத்திரைகளைத் தொடர்ந்து பழகி வர கழுத்து வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.

Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் http://www.youtube.com/@PetsDiaryandMomsToo என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்