உடல் மன ஆரோக்கியம்

இன்று ஒரு ஆசனம் (74) – மயூராசனம் (Peacock Pose)

இன்று நாம் பார்க்கவிருப்பது நேற்றைய அஷ்டவக்கிராசனம் போல் கையால் உடலைத் தாங்கும் ஆசனமாகும். வடமொழியில் ‘மயூர’ என்றால் ‘மயில்’ என்று பொருள். இவ்வாசனத்தின் நிலை மயிலை ஒத்து இருப்பதால் மட்டுமே மயூராசனம் என்று அழைக்கப்படுவதற்கான காரணமாக இருக்க முடியாது. நளினம், அழகு, தைரியம், பலம் ஆகியவையின் கலவையே மயில். இவ்வாசனம் பழகுவதால் இத்தன்மைகள் அனைத்தும் நம்முள் வளரும் என்பது இப்பெயருக்கான காரணமாக இருக்கலாம். இது ஆங்கிலத்தில் Peacock Pose என்று அழைக்கப்படுகிறது.

(அஷ்டவக்கிராசனம் பற்றி பார்க்க, இந்தப் பக்கத்துக்குச் செல்லவும்).

மயூராசனம் பயில்வதால் மணிப்பூரக சக்கரம் தூண்டப்படுகிறது. இவ்வாசனம் தன்னம்பிக்கை, தன்மதிப்பு ஆகியவை வளர்கிறது. பிராண ஆற்றலைக் கவரும் தன்மையும் மயூராசனத்திற்கு உண்டு.

மயூராசனத்தின் மேலும் சில பலன்கள்
 • நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது
 • கைகளையும் மணிக்கட்டையும் பலப்படுத்துகிறது
 • முதுகுத் தசைகளை உறுதியாக்குகிறது
 • கல்லீரல், மண்ணீரல் உட்பட வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது
 • வயிற்று தசைகளை உறுதியாக்குகிறது
 • சீரணக் கோளாறுகளை சரி செய்கிறது
 • உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது
 • இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது
 • உடலின் நிலையான தன்மையை மேம்படுத்துகிறது
 • கவனத்தைக் கூர்மையாக்குகிறது
செய்முறை
 • வஜ்ஜிராசன நிலையில் அமரவும்.
 • இரண்டு கால்களையும் விரிக்கவும்.
 • தோள்களைச் சற்று முன்னால் சாய்த்து கால் முட்டிகளுக்கு இடையில் உள்ளங்கைகளை வைக்கவும். கை விரல்கள் உங்களை நோக்கியவாறு இருக்க வேண்டும்.
 • கை முட்டிகளை மடக்கவும். இப்பொழுது உங்கள் மேற்கைகள் மேல் உங்கள் மேல் உடல் இருக்கும்.
 • மெதுவாக கால்களை நீட்டி கால் விரல்கள் தரையில் இருக்குமாறு வைக்கவும். இப்பொழுது உங்கள் உள்ளங்கைகளும் கால் விரல்களும் தரையில் உடல் எடையைத் தாங்கியவாறு இருக்கும்.
 • உடலின் மத்திய பகுதியை சற்றே முன்னால் செலுத்தி கால்களைத் தரையிலிருந்து உயர்த்தவும். இப்பொழுது உங்கள் உடலின் எடையை உங்கள் கைகள் தாங்கியிருக்கும்.
 • தலையைச் சற்றே உயர்த்தலாம் அல்லது தரையை நோக்கி இருக்குமாறு வைக்கலாம்.
 • 20 வினாடிகள் இந்நிலையில் இருந்த பின் கால்களைத் தாழ்த்தி கால் விரல்கள் தரையில் படுமாறு வைக்கவும்.
 • பின் கால் முட்டியை மடக்கி வஜ்ஜிராசனத்தில் அமரவும்.
 • பாலாசனத்தில் உடலைத் தளர்த்தவும்.

(பாலாசனம் செய்முறையைப் பார்க்க இந்தப் பக்கத்துக்குச் செல்லவும்).

குறிப்பு

மணிக்கட்டு, கை முட்டி மற்றும் தோள்களில் தீவிர பிரச்சினை உள்ளவர்கள் மயூராசனத்தைத் தவிர்க்கவும்.

மயூராசனம் ஒரு சவாலான ஆசனம் என்பதால் அதை பயிலும் போது செய்து விட வேண்டும் என்ற எண்ணம் சற்று தூக்கலாகவே இருக்கும். ஆனால், இவ்வாசனத்தைப் பயிலும் போது கூடுதல் கவனம் தேவை. மேல் உடலை அதிகமாக முன்னால் கொண்டு போனால், முகம் வேகமாகத் தரையை நோக்கி போகக் கூடும். உடல் எடை எதாவது ஒரு பகுதியில் அதிகமாக இருக்குமாறு பயின்றால், மணிக்கட்டில் தீவிர வலி ஏற்படலாம்.

எனவே, முதன் முறையாகப் பயில்பவர்கள், ஒவ்வொரு காலாக மேலே தூக்கி சற்று நேரம் அந்நிலையில் இருந்து பழகிய பின் இரண்டு கால்களையும் உயர்த்தலாம்.

அல்லது, பாதத்திற்குக் கீழ் yoga block-ஐ வைத்து அதன் மேல் கால்களை வைத்துப் பழகலாம்.

இன்று ஒரு ஆசனம் (75) – விபரீத வீரபத்ராசனம் (Reverse Warrior Pose)

இதற்கு முன்னர் நாம் வீரபத்ராசனம் 1 மற்றும் வீரபத்ராசனம் 2 ஆகிய ஆசனங்களைப் பார்த்தோம். இன்று நாம் பார்க்கவிருப்பது விபரீத வீரபத்ராசனம். வடமொழியில் ‘விபரீத’ என்பதற்கு ‘மாற்று’, ‘மறுபக்கம்’ என்று பொருள். இவ்வாசனம் வீரபத்ராசனம்

Read More »

இன்று ஒரு ஆசனம் (73) – அஷ்டவக்கிராசனம் (Eight Angle Pose)

வடமொழியில் ‘அஷ்ட’ என்றால் ‘எட்டு’ என்றும், ‘வக்கிரம்’ என்றால் ‘முறுக்குதல்’ என்றும் பொருள். இவ்வாசனம் அஷ்டவக்கிரர் என்ற முனிவரின் பெயரையொட்டி அஷ்டவக்கிராசனம் என்று அழைக்கப்படுகிறது. இது ஆங்கிலத்தில் Eight Angle Pose என்று அழைக்கப்படுகிறது.

Read More »

இன்று ஒரு ஆசனம் (72) –வீரபத்ராசனம் 2 (Warrior Pose 2)

நாம் நேற்றைய பதிவில் வீரபத்ராசனம் 1-ஐப் பற்றி பார்த்தோம். இன்று நாம் பார்க்கப் போவது வீரபத்ராசனம் 2, அதாவது Warrior Pose 2. நேற்று குறிப்பிட்டிருந்தது போல் வடமொழியில் ‘வீர’ என்பதற்கு ‘போர்வீரன்’ என்றும்

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

 • Subscribe

  * indicates required
 • தேடல்
 • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
 • தமிழ்