உடல் மன ஆரோக்கியம்

இன்று ஒரு ஆசனம் (11) – வச்சிராசனம் / வஜ்ஜிராசனம் (Thunderbolt Pose)

நின்றது போதும். சற்று உட்காருவோம். அதாவது, உட்கார்ந்து செய்யும் ஆசனங்கள் சிலவற்றை இனி செய்வோம். ஏற்கனவே அமர்ந்து செய்யும் ஒரு ஆசனத்தை நாம் பார்த்துள்ளோம். ஆம், பத்மாசனம்தான். பத்மாசனத்தை போலவே ஒரு சிறப்பு வாய்ந்த ஆசனம்தான் வஜ்ஜிராசனம். வஜ்ஜிரம் என்றால் வைரம் ஆகும். இவ்வாசனத்தை செய்தால் வஜ்ஜிரம், அதாவது, வைரம் போல உறுதியான உடல் கிடைக்கும் என்றே பொதுவாக இதன் பலன்களை குறிப்பிடும்போது கூறுவார்கள். ஆனால், இப்பெயருக்கு இது மட்டுமே காரணமல்ல.

வஜ்ஜிரம் என்றால் மரத்தின் நடுப்பகுதி (core of the tree). மரத்தை வெட்டும்போது மரத்தின் நடுப்பகுதியை வெட்டுவதுதான் மிகவும் கடினம். ஒரு மரத்தின் முழு பரிமாணமும் அடங்கியிருப்பது அங்குதான். மனிதனும் ஒரு மரமே. அதனால்தான், “மரம் மாதிரி நிற்காதே” என்பார்கள். மரத்துக்கு நடுப்பகுதி போலவே மனித மரத்துக்கு வயிறும் அதையொட்டி இருக்கும் மண்ணீரலும், சிறுகுடலும், பெருங்குடலும் தான் நடுப்பகுதி. இந்த நடுப்பகுதியை எவர் ஆரோக்கியமாக வைத்திருக்கிறாரோ அவரது உடலும் மிக ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில், உடலின் விளைநிலம் இப்பகுதிதான். உணவு உண்டு செரித்து சத்து பிரித்து இரத்தத்துக்கு கொடுத்து கணையத்தை தூண்டி இன்சுலின் சுரக்க செய்து திடகழிவை தனியாக பிரித்து வெளியேற்றுவது வரை இந்த நடுப்பகுதியில் தான் நடக்கிறது. இதன் வெற்றிகரமான செயல்பாடுதான் மற்ற உறுப்புகளின் வெற்றிகரமான இயக்கமாக இருக்கிறது. அதனால்தான் இந்த நடுப்பகுதி உடலின் விளைநிலம் என்கிறோம்.

உடம்பின் இந்த விளைநிலத்தை உறுதியாக்குவதுதான் இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் வஜ்ஜிராசனம். அதனால்தான் உணவு உண்ட பின்னும்கூட இந்த ஆசனத்தை செய்யலாம். வஜ்ஜிராசனத்தையும் சவாசனத்தையும் தவிர மற்ற ஆசனங்களை உண்டபின் செய்யக் கூடாது என்கிறார்கள். உணவு உண்டபின் இந்த ஆசனத்தை செய்தால் வயிறு இளகி வாயுத் தொல்லை நீங்கி ஜீரணம் முழுமையாக நடைபெறும். உடலின் நடுப்பகுதி இயக்கத்தைப் பலப்படுத்தி அதன் மூலம் உடலை உறுதியாக்க சிறந்த ஆசனம் இந்த வஜ்ஜிராசனம்.

அதோ முக ஸ்வானாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி தெரிந்து கொள்ள இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

Detox yoga classes
வஜ்ஜிராசனத்தின் மேலும் சில பலன்கள்

மேலே குறிப்பிடப்பட்டுள்ளது போல் வயிற்று உள் உறுப்புகளின் இயக்கத்தை செம்மையாக்குகிறது; வயிற்றுப் பகுதிக்கு அதிக இரத்தம் செலுத்தப்படுவதால், வயிற்று உள் உறுப்புகளின் இயக்கம் சீராகிறது. மேலும்,

  • வயிற்றெரிச்சல் (acidity), வயிற்று புண் (ulcer) ஏற்படுவதைத் தவிர்க்கிறது.
  • மலச்சிக்கலை போக்குகிறது.
  • தொடை தொடங்கி பாதம் வரை நீட்சியடைய வைப்பதால் (stretch) கால்கள் பலம் பெறுவதோடு நெகிழ்வுத்தன்மையோடு விளங்குகிறது.
  • சையாடிக் பிரச்சினையை போக்க உதவுகிறது.
  • உட்காரும், நிற்கும் நிலையை (posture) சீராக்குகிறது.
  • மனதை ஒருமுகப்படுத்த உதவுவதால் தியானம் செய்வதற்கும் மூச்சு பயிற்சி செய்வதற்கும் ஏற்ற ஆசனமாகிறது.
செய்முறை

வஜ்ஜிராசனம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

  • விரிப்பில் முட்டி போட்டு அமரவும்.
  • தொடைகள் இரண்டையும் அருகருகே இடைவெளி இல்லாமல் வைக்கவும்; கால் கட்டை விரல்களை ஒன்றுடன் ஒன்று படுமாறு வைத்து குதிகால்களை பிரிக்கவும். இப்போது, உங்கள் பாதங்களை பார்க்க ஆங்கில எழுத்து ‘v’ போல இருக்கும்.
  • குதிகால்களுக்கு இடையில் உள்ள இடைவெளியில் அமரவும்.
  • உங்கள் உள்ளங்கைகளை கால் முட்டியில் வைக்கவும் அல்லது கைகளை சின்முத்திரையில் வைத்து கால் முட்டியில் வைக்கவும்.
  • ஆரம்ப நாட்களில் 20 முதல் 30 வினாடிகள் இந்த நிலையில் இருக்கவும்.  கொஞ்சம் கொஞ்சமாக நேரத்தை அதிகப்படுத்தி மூச்சுப் பயிற்சி அல்லது தியானம் செய்து முடிக்கும் வரை இந்த நிலையில் இருக்கலாம்.
குறிப்பு

குதிகால்களுக்கு நடுவில் அமர முடியாதவர்கள், எதாவது விரிப்பை சுருட்டி பாதங்களுக்கு அடியில் வைத்து அமர்ந்து பழகவும்.

கால் மற்றும் கால் மூட்டுகளில் தீவிர பிரச்சினை உள்ளவர்கள் மற்றும் குடலிறக்கம் உள்ளவர்கள் வஜ்ஜிராசனம் செய்வதைத் தவிர்க்கவும். இந்த ஆசனம் அல்சர் ஏற்படுவதைத் தவிர்க்கும் என்றாலும், அல்சர் பிரச்சினை உள்ளவர்கள் யோகா நிபுணரின் நேரடி பார்வையில் இந்த ஆசனத்தை பழகுவது நல்லது.

மாற்று ஆசனம்: அதோ முக ஸ்வானாசனம்

இன்று ஒரு ஆசனம் (13) – புஜங்காசனம் (Cobra Pose)

முகம் கீழ் நோக்கிய நாய் நிலைக்கு, அதாவது அதோ முக ஸ்வானாசனத்துக்கு, புஜங்காசனம் மாற்று ஆசனமாகும். ‘புஜங்க’ என்றால் வடமொழியில் ‘பாம்பு’ என்று பொருள். ‘ஆசனம்’ என்பது ‘நிலை’, அதாவது பாம்பு நிலை, அதாவது,

Read More »

இன்று ஒரு ஆசனம் (12) – அதோ முக ஸ்வானாசனம் (Downward Facing Dog)

வஜ்ஜிராசனத்துக்கு மாற்றாக அதோ முக ஸ்வானாசனம் செய்யப்படுகிறது. இதற்கு ஆங்கிலத்தில் Downward Facing Dog என்று பெயர். சரியாக சொன்னால், அதோ என்றால் downward – கீழ் நோக்கி முக என்றால் face –

Read More »

இன்று ஒரு ஆசனம் (10) – நின்ற தனுராசனம் (Standing Bow Pose)

இன்று நாம் பார்க்கவிருப்பது நின்ற தனுராசனம். இதை ப்ரசாரித பாதோத்தானாசனத்திற்கு மாற்று ஆசனமாகச் செய்யலாம். தனுராசனம் என்றால் வில் நிலை ஆகும். இதை குப்புறப்படுத்தும் செய்யலாம். நின்ற நிலையிலும் செய்யலாம். இவ்வாசனத்தின் பலன்கள் நம்மை

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்