நாம் முன்னரே ஜானு சிரசாசனம் பற்றியும் அதன் பலன்கள், செய்முறை பற்றியும் பார்த்தோம். பரிவ்ருத்த ஜானு சிரசாசனத்தில் ஒரு கை உடலை சுற்றி வந்து காலை பிடிப்பதாக இருக்கும். ‘பரிவ்ருத்த’ என்ற சொல்லுக்கு ‘சுற்றி’ என்று பொருள். நாம் முன்னரே பார்த்தது போல் ‘ஜானு’ என்றால் ‘முட்டி’, ‘சிரசா’ என்றால் ‘தலை’ என்று பொருள். ஆக, இது வளைந்து திரும்பி காலை பிடிக்கும் ஆசனமாகும்.
பரிவ்ருத்த ஜானு சிரசாசனத்தில் சீரண மண்டலம் செம்மையாக இயங்குகிறது. முதுகுத்தண்டை மட்டுமல்லாமல் மொத்த உடம்பையும் நீட்சியடைய (stretch) வைக்கிறது. இந்த ஆசனம் மணிப்பூரகத்தையும் சுவாதிட்டானத்தையும் தூண்டி அவற்றின் செயல்பாடுகளை மேம்ப்படுத்துகிறது.
ஜானு சிரசாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி பார்க்க இங்கே click செய்யவும்.
பரிவ்ருத்த ஜானு சிரசாசனத்தின் மேலும் சில பலன்கள்
- நுரையீரல் இயக்கத்தை மேம்படுத்துகிறது.
- கல்லீரலை பலப்படுத்துகிறது.
- சிறுநீரகத்தின் செயல்பாடுகளை செம்மையாக்குகிறது.
- இடுப்பை பலப்படுத்துகிறது.
- அடி முதுகு வலியை போக்குகிறது.
- தூக்கமின்மையை போக்குகிறது.
- மன அமைதியை ஏற்படுத்துகிறது.
செய்முறை
- விரிப்பில் அமரவும். இரண்டு கால்களையும் நன்றாக விரிக்கவும்.
- வலது காலை மடித்து வலது குதிகாலை இடது தொடையின் உள்பகுதியை ஒட்டி தரையில் வைக்கவும்.
- மூச்சை உள்ளிழுத்து இரண்டு கைகளையும் மேல் நோக்கி உயர்த்தவும்.
- மூச்சை வெளியேற்றியவாறே இடது புறமாக உடலை சாய்க்கவும்.
- இடது கையால் இடது பாதத்தை பற்றவும்.
- வலது கையை தலைக்கு மேலாக கொண்டு வந்து இடது பாதத்தை பற்றவும்.
- நேராக பார்க்கவும்.
- 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின், கால்களை மாற்றி செய்யவும்.
குறிப்பு
காலை நேராக நீட்ட முடியவில்லையென்றால் முட்டியை சற்று மடக்கிக் கொள்ளவும்.
வளைவது கடினமாக இருந்தால் மடித்து வைத்த விரிப்பின் மீது அமர்ந்து செய்யலாம்.
பாதத்தை yoga strap-இனால் சுற்றி அதை பற்றிக் கொள்ளலாம்.
தீவிர முதுகுத்தண்டு கோளாறு, தீவிர தோள் அல்லது கழுத்து வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தை பயிலக் கூடாது.
அடி முதுகில் தீவிர வலி இருந்தாலும் இந்த ஆசனத்தை தவிர்ப்பது நலம்.