வடமொழியில் ‘பார்சுவ’ என்றால் ‘பக்கம்’, ‘பால’ என்றால் ‘குழந்தை’ என்று பொருள். இவ்வாசனத்தில் பாலாசன நிலை அல்லது பாலாசன நிலையிலிருந்து சற்றே மாறுபட்ட நிலையில் மேலுடலைப் பக்கவாட்டில் திருப்பி செய்வதால் இந்த ஆசனம் பார்சுவ பாலாசனம் என்று அழைக்கப்படுகிறது. இது ஆங்கிலத்தில் Thread the Needle Pose என்று அழைக்கப்படுகிறது.
பார்சுவ பாலாசனத்தில் மணிப்பூரக சக்கரம் தூண்டப்படுகிறது. மணிப்பூரகம் பிரபஞ்ச சக்தியை ஈர்க்கிறது, தன்மதிப்பை வளர்க்கிறது. மனதை சாந்தப்படுத்துகிறது.
பார்சுவ பாலாசனத்தின் மேலும் சில பலன்கள்
- முதுகுத்தண்டின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது
- மேல் முதுகுத் தசைகளை உறுதியாக்குகிறது
- இடுப்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதோடு இடுப்புத் தசைகளைப் பலப்படுத்துகிறது
- மேற்புற மார்புத் தசைகளை உறுதியாக்குகிறது
- தோள்களை விரிக்கிறது
- சீரணத்தை மேம்படுத்துகிறது
- உடல், மன சோர்வைப் போக்குகிறது
செய்முறை
- தவழும் நிலைக்கு வரவும்.
- மூச்சை வெளியேற்றியவாறு வலது கையை இடது கையின் அடி வழியாக இடதுபுறத்துக்கு வெளியில் நீட்டவும். உள்ளங்கை மேல் நோக்கி இருக்க வேண்டும்.
- வலது தோளை விரிப்பில் வைத்து வலது கையை மேலும் நன்றாக இடதுபுறம் நீட்டவும். உங்கள் வலது பக்க முகத்தைத் தரையில் வைத்து நேராகப் பார்க்கவும். மாறாக, தலையைத் திருப்பி மேல் நோக்கவும் செய்யலாம்.
- இடது கையை தலைக்கு மேல் நீட்டவும்.
- 30 வினாடிகள் முதல் ஒரு நிமிடம் வரை இவ்வாசனத்தில் இருக்கவும்.
- மெதுவாக ஆரம்ப நிலைக்கு வந்து மறுபுறம் திரும்பச் செய்யவும்.
குறிப்பு
பார்சுவ பாலாசனத்தை பாலாசன நிலையில் இருந்தபடியும் செய்யலாம். பாலாசனம் செய்முறை பற்றி பார்க்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
தோள் அல்லது முட்டியில் வலி ஏற்பட்டால், சிறு விரிப்பை மடித்து அதன் மேல் தோள் மற்றும் முட்டியை வைக்கவும்.
முதுகுத்தண்டு கோளாறுகள், சீரற்ற இரத்த அழுத்தம், கழுத்து மற்றும் தோள்களில் தீவிர வலி உள்ளவர்கள் இவ்வாசனத்தைத் தவிர்க்கவும்.