உடல் மன ஆரோக்கியம்

ஏலகிரியில் உள்ள சுற்றுலா தலங்கள்

வாரா வாரம் பயணம் செய்து பயணப் பதிவுகளைப் பதிவேற்றம் செய்வது போன்ற உத்வேகத்துடன் ஊர்சுற்றி பக்கங்கள் பகுதியைத் துவக்கி ஒரு வருடத்திற்கும் மேல் ஆகி விட்டது. சென்னையில் உள்ள சுற்றுலா தலங்கள் பதிவைப் போட்டும் நீண்ட காலம் ஆயிற்று. இடையில் பல ஊர்களுக்குச் சென்று வந்தும் பதிவேற்றம் செய்யும் சூழல் அமையவில்லை. பதினோரு வருடங்களுக்கு முன் சென்று வந்த ஏலகிரிக்கு எங்கள் செழியுடன் சமீபத்தில் சென்று வந்தோம். சென்னையிலிருந்து சுமார் அய்ந்தரை மணி நேரப் பயணத்தில் அடையக் கூடிய இந்த அருமையான, அழகான ஏலகிரி மலைப்பிரதேசத்தைப் பற்றி, ஏலகிரியில் உள்ள சுற்றுலா தலங்கள் பற்றி, இந்தக் கோடையில் எழுதாமல் எப்போதுதான் எழுதுவது? 

ஏலகிரி சென்று வந்ததைப் பற்றி செழியின் கருத்தைத் தெரிந்து கொள்ள இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

ஏலகிரியில் உள்ள சுற்றுலா தலங்கள்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 1100 மீட்டர் உயரத்திலிருக்கும் ஏலகிரி இயற்கை எழில் கொஞ்சும் மலை மட்டுமல்ல, மலையேற்ற விரும்பிகளின் மனதுக்கு அண்மையான இடமும் கூட. ஊட்டி, கோடைக்கானல் போன்று பெரிய அளவில் சுற்றுலாவாசிகளின் வருகை இங்கு இல்லை என்கிற நிலை மாறி இப்போது மக்கள் இங்கும் படையெடுத்து வருகிறார்கள். குறிப்பாக, இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் மலையேற்றத்தில் ஈடுபாடு கொண்டவர்களை பெருமளவில் ஈர்க்கும் இந்த மலையின் உச்சியை அடைய வண்டி சவாரியில் சுமார் அரை மணி நேரமே போதுமானது. 
 
ஆனால், ஓய்வுக்காக நீங்கள் ஏலகிரி செல்லும் பட்சத்தில் அற்புதமான இயற்கை சூழலில் அமைந்திருக்கும் விடுதிகள், வில்லாக்கள் ஆகியவற்றில் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு மிகவும் இரம்மியமாகப் பொழுதைக் கழிக்கலாம். செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு ஏற்ற வில்லாக்களும் விடுதிகளும் ஏலகிரியில் ஏராளமாய் இருக்கின்றன.
 
செல்லப்பிராணிகளுக்கான ஏலகிரி வில்லாக்கள் என்று கூகுளில் தேடினால் ஒரு பெரிய பட்டியலே கிடைக்கும். பிறகென்ன, சுற்றுலா பை, செல்லப்பிராணி உட்பட குடும்பமாய் கிளம்ப வேண்டியதுதான்.
 
இதோ, ஏலகிரியில் உள்ள சுற்றுலா தலங்கள்:
1) சுவாமிமலை 

ஏலகிரியின் உயரமான பகுதியான சுவாமிமலை மலையேற்ற விரும்பிகள் மட்டுமல்லாது இயற்கையை இரசிக்கும் அனைவரும் விரும்பக் கூடிய அற்புதமான மலையாகும். இது ஏறுவதற்கு சவாலானதல்ல என்பதால் பெரியவர்கள் மேற்பார்வையில் சிறு வயதினரும் ஏறிச் செல்லலாம். சமதளத்திலிருந்து, மண் பாதைகளில் நடந்தும் அவ்வப்போது காணப்படும் படிக்கட்டுகளில் ஏறியும் சுமார் ஒரு மணி நேரத்தில் உச்சியை அடையலாம்.

இதோ மலைப் பயணத்தின் பொழுதும் உச்சியிலும் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில:

உச்சியை நோக்கி படிக்கட்டுகள் வழியாகவும்….

Yelagiri Swamimalai  

மண்தரை வழியாகவும்…Yelagiri Swamimalai path

வழியெங்கும்  கண்ணிற்கும் மனதிற்கும் பசுமையான காட்சிகள் விரிகின்றன…

Yelagiri Swamimalai

Yelagiri Swamimalai

சுவையான பழ மரங்கள்…

Yelagiri Swamimalai

Yelagiri Swamimalai

இதோ மலையுச்சியை நெருங்கியாகி விட்டது…

Yelagiri Swamimalai

உச்சியை அடைந்த போது, அங்கே எங்களை வரவேற்றது அசர வைக்கும் இயற்கை மட்டுமல்ல..

Yelagiri Swamimalai

இதோடு முடியவில்லை. இதற்கும் மேல் ஒரு செங்குத்தான பாறையின் மீது ஏறினால்தான் நீங்கள் ஏலகிரியின் உச்ச பகுதியில் இருப்பதாய் அர்த்தம்.

அங்கிருக்கும் பாறையின் மீது யாரிது, சப்தமே போடாமல், வெகு இலகுவாய் ஏறுவது?

Yelagiri Swamimalai

நாம் அப்படி ஏற வேண்டியதில்லை என்பது ஒரு பெரும் நிம்மதி.

Yelagiri Swamimalai

அந்த ஏணியின் மேல் ஏறியதும் தடுப்புக் கம்பிகள் கொண்ட ஒரு சிறிய பகுதியாக மலையுச்சி புலப்பட்டது.

Yelagiri Swamimalai

அங்கிருந்து பார்த்தால் சுற்றிலும் அசர வைக்கும் இயற்கை அழகு.

Yelagiri Swamimalai

Yelagiri Swamimalai

Yelagiri Swamimalai

2) ஏலகிரி ஏரி / புங்கனூர் ஏரி

மனிதனால் உருவாக்கப்பட்ட அழகான, பிரபலமான ஏரிகளில் ஒன்று புங்கனூர் ஏரி என்றும் அழைக்கப்படும் ஏலகிரி ஏரி. விசைப் படகு சவாரி மட்டுமல்லாது மிதி படகு சவாரியும் செய்வதற்கான வசதி இங்குள்ளது என்பது கூடுதல் சிறப்பு.Yelagiri Lake / Punganur Lake

Yelagiri Lake / Punganur Lake

மலைகளும் பசுமை மரங்களும் சூழ்ந்துள்ள இந்த ஏரியில் படகு சவாரி  செய்வது ஒரு வகையான சுவாரசியம் என்றால் காலாற ஏரியைச் சுற்றியுள்ள நடைப்பாதையில் நடப்பது ஒரு இனிமையான அனுபவம். செழியின் புலன்களுக்கு இங்கு நல்ல தீனி கிடைத்தது என்றே சொல்ல வேண்டும்.

Yelagiri Lake Walker's Path

Yelagiri Lake - Walker's Path

Yelagiri Lake - Walker's Path

Yelagiri Lake - Walker's Path

Yelagiri Lake - Walker's Path

வற்புறுத்தலின் பேரில் மட்டுமே அவளை அங்கிருந்து கிளப்ப முடிந்தது. 

உங்கள் செல்லப்பிராணியுடன் ஏலகிரி செல்லும்பட்சத்தில், இதோ உங்களுக்காக, செல்லப்பிராணிகளை அனுமதிக்கும் ஏலகிரியின் விடுதிகள், வில்லாக்கள் குறித்து இரண்டு பதிவுகள்:

நாங்கள் செழியுடன் தங்கிய வில்லாவைப் பற்றிய தகவல் அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

அடுத்ததாக உள்ள பதிவில், செல்லப்பிராணிகளை அனுமதிக்கும் மேலும் சில அருமையான ஏலகிரி விடுதிகள் பற்றிய தகவல் கொண்டது. அந்தப் பதிவைப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

Work From Home
Find a sponsor for your web site. Get paid for your great content. shareasale.com.
3) க்ளவுட் ஃபாரெஸ்ட்

சில சுற்றுலா தலங்கள் பார்த்தவுடன் மனதைக் கவரும். சிலவற்றைப் பற்றிக் கேள்விப்படும்போதே மனம் இறக்கை கட்டிக் கொண்டு பறக்கத் தொடங்கி விடும். அப்படியானதொரு இடம்தான் ஏலகிரியின் க்ளவுட் ஃபாரெஸ்ட். ஏலகிரியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று இந்த இரம்மியமான க்ளவுட் ஃபாரெஸ்ட்.

இயந்திரத்தனமான வாழ்க்கையிலிருந்து சற்று விலகி விடுமுறையை  இயற்கையான சூழலில் கழிக்கச் செல்லும் மக்களுக்கு க்ளவுட் ஃபாரெஸ்டின்  எழில் நிறைந்த இயற்கை சூழல் மனதிற்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் தரும்.  க்ளவுட் ஃபாரெஸ்டின் அடிநாதமே அங்கு வரும் சுற்றுலாவாசிகளை இயற்கையோடு இணைந்து உறவாட வைப்பதுதான். 

Yelagiri Cloud Forest

3.7 ஏக்கர் பரப்பளவு  கொண்ட க்ளவுட் ஃபாரெஸ்ட், ஏலகிரியின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று. இந்த 3.7 ஏக்கரில், பல பொழுதுபோக்கு அம்சங்களுடன், இயற்கை காட்சிகளைக் கண்டு களிப்பதற்காகவும் 2.5 ஏக்கர் சுற்றுலாவாசிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

க்ளவுட் ஃபாரெஸ்டின்  பொழுது போக்கு அம்சங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம் என்று அதன் நிறுவனர் கூறுகிறார். அதாவது,

1) செல்லப்பிராணிகளை கொஞ்சுதல்: இங்கு வாழும் பறவைகள் மற்றும் முயல், ஆடு, நெருப்புக் கோழி, குதிரை உள்ளிட்ட 10 முதல் 15 வகையான விலங்குகள் அனைத்தையும் அவற்றின் வசிப்பிடத்திற்குள் சென்று கொஞ்சி மகிழலாம். மேலும் அங்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குதிரை சவாரியும் செய்யலாம்.Cloud Forest, Yelagiri2) இயற்கையோடு இணைந்திருத்தல்: ஏலகிரியின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றான  க்ளவுட் ஃபாரெஸ்டில் இயற்கையோடு மனிதன் ஒன்றி உறவாட உருவாக்கப்பட்டிருக்கும் பகுதியே இதன் பெயர் காரணத்தில் ஒரு அம்சம் என்று கூறலாம். ஆம்,  இந்தப் பகுதியில் இருக்கும் போது காட்டில் இருப்பது போன்றதொரு உணர்வை அளிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

முதலில் பச்சை பசும் புல்வெளி, பின்னர் சிறிய அளவிலான ரோஜா தோட்டம், அதனைத் தொடர்ந்து 35 வகை பழ மரங்கள். இந்த பழ மரங்கள் அனைத்துமே அந்தந்த பருவத்தில் விளையக் கூடிய பழங்களாகும். 

3) விளையாட்டு பயிற்சியில் ஈடுபடுதல்: கணினி மற்றும் அலைபேசியில் விளையாடுவதிலிருந்து விடுபட்டு வெட்ட வெளிகளில், இயற்கை சூழலில் பலவிதமான விளையாட்டுகளில் ஈடுபடும் வாய்ப்பை ஏலகிரியின் க்ளவுட் ஃபாரெஸ்ட் வழங்குகிறது. சிறுவயதினருக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும்தான்.

இங்குள்ள விளையாட்டுகளுக்கான உபகரணங்களை க்ளவுட் ஃபாரெஸ்ட் நிர்வாகம் அளித்து விடுகிறது. 

இங்குள்ள விளையாட்டுகளில் சில:

  • நெட்டிப் பந்து
  • கூடைப் பந்து
  • வில்வித்தை
  • பலூன் சுடுதல்
  • குறி பார்த்து சுடுதல்
  • துடுப்பாட்டம்
  • வீழ்தடுப்புறையில் (trampoline) குதித்தல் நூறு கிலோ எடை வரை உள்ளவர்களும் விளையாடலாம்

இந்த மூன்று வகைகள் மட்டுமல்லாமல் ஏலகிரியில் உள்ள க்ளவுட்ஃபாரெஸ்ட் பிரத்தியேகமான மூன்று வகை பொழுதுபோக்குகளையும் வழங்குகிறது. அவை:

1) மூங்கில் பாலத்தின் மேல் நடத்தல்: நூறடி தூரத்திற்கு பாறைகளின் மேல் மூங்கில் பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த பாலத்தின் மீது நடக்கும் போது அது ஆடும் ஆட்டம் சாகச உணர்வைத் தரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. 

2) மலை போன்ற சரிவில் நடத்தல்:  ஓய்வு நாளிலும் நல்ல உடற்பயிற்சி செய்ய நினைப்பீர்களானால் இங்குள்ள அரை ஏக்கரில் உள்ள சரிவான நிலப்பகுதியை நிச்சயம் விரும்புவீர்கள். இது மலை மீது ஏறி இறங்கும் உணர்வைக் கொடுக்கும். மேலும், மூங்கில் மரங்கள் உட்பட பல மரங்களும் கொண்ட அடர்ந்த காட்டுப் பகுதி போல் அமைக்கப்பட்டிருப்பதால் நிச்சயம் இயற்கை விரும்பிகளின் மனதைக் கவர்ந்து விடும்.

3) மர உச்சியிலிருந்து ஒரு கண்ணோட்டம்: மரவீடுகளைப் பார்த்திருப்பீர்கள். அதில் தங்கியும் இருப்பீர்கள். மர உச்சியிலிருந்து சுற்றிலும் இயற்கை அழகை கண்ணோட்டம் விடக் கூடிய வாய்ப்பைத் தருகிறது க்ளவுட் ஃபாரெஸ்ட். 

முப்பது அடி உயரத்தில் மூன்று மரங்களின் கிளைகளை இரும்பு பாலத்தினால் இணைத்து மூன்றாவது மரத்தில் மூங்கிலால் ஒரு முகப்பை அமைத்திருக்கிறார்கள். இந்த முகப்பிலிருந்து சுற்றிலும் உள்ள இயற்கை அழகை இரசிக்கலாம். இந்தப் பாலத்தின் மீது நடப்பதும் ஒரு சிறிய சாகச உணர்வைத் தரும்.

இயற்கை அழகும், விளையாட்டு கருவிகளும் உள்ள, ஏலகிரியின் சிறந்த சுற்றுலா தலங்கள் வரிசையில் இடம் பெற்ற க்ளவுட் ஃபாரெஸ்டின் நுழைவுக் கட்டண விவரம் இதோ:

3 முதல் 7 வயது வரை – ரூபாய் 100

7 வயதிற்கு மேல் – ரூபாய் 200

இப்போது க்ளவுட் ஃபாரெஸ்டின் கூடுதல் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள கட்டணத்தைக் கொடுத்து விட்டு உள்ளே நுழைந்தீர்களானால், அங்கிருக்கும் வேறு எந்த பொழுதுபோக்கில் ஈடுபடவும் கூடுதல் கட்டணம் ஏதும் இல்லை. அது போலவே, குறி பார்த்து சுடுதல் விளையாட்டைத் தவிர வேறு எந்த விளையாட்டிற்கும் விளையாடும் எண்ணிக்கை மற்றும் நேரத்தில் எந்த வித கட்டுப்பாடும் கிடையாது. நீங்கள் விரும்பும் வரை ஆடித் தீர்க்கலாம். அதே போல், நீங்களாகவே ஆட வந்திருக்கும் மற்ற பார்வையாளர்களுக்கு வாய்ப்பைத் தரலாம்.

இரண்டாவதாக, க்ளவுட் ஃபாரெஸ்டின் உள்ளே உங்களைக் கண்காணிப்பதற்கு யாரும் இருக்க மாட்டார்கள். அங்கு துப்புரவு பணியாளர்களை மட்டுமே நீங்கள் பார்க்க முடியும். இது முழுக்க முழுக்க சுற்றுலாவாசிகள் சுதந்திரமாக சுற்றிப் பார்ப்பதெற்கென்றே உருவாக்கப்பட்டிருக்கிறது. 

மூன்றாவதாக, வெளியிலிருந்து உணவு கொண்டு வந்து இங்கே உண்பதற்கு உங்களுக்கு முழு அனுமதி உண்டு. 

நான்காவதாக, வண்டிகள் நிறுத்துமிடத்தில் 30 முதல் 40 கார்களை நிறுத்த முடியும் என்பதால், நீங்கள் உங்கள் வாகனத்தை இங்கே நிறுத்தி விட்டு நிம்மதியாகச் சுற்றிப் பார்க்கலாம். 

அய்ந்தாவதாக, மிகவும் முக்கியமான, சிறப்பான அம்சம் என்னவென்றால் க்ளவுட் ஃபாரெஸ்டிற்கு நீங்கள் உங்கள் செல்லப்பிராணியைத் தாராளமாக அழைத்து வரலாம். ஆனால், உங்கள் செல்லப்பிராணியை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். மற்றும், இங்கு ஏதேனும் சேதாரத்திற்கு உங்கள் செல்லப்பிராணி காரணமாகி விட்டால், அதற்கான செலவுகளை நீங்கள் ஏற்க வேண்டும். 

வார நாட்களில் காலை 9.00 முதல் மாலை 6.00 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் மாலை 7.00 மணி வரையிலும் க்ளவுட் ஃபாரெஸ்ட் செயல்படுகிறது. 

க்ளவுட் ஃபாரெஸ்ட் பற்றி மேலும் விவரங்கள் அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

கடந்த முறை ஏலகிரிக்குச் சென்ற போது ஏன் க்ளவுட் ஃபாரெஸ்டைப் பார்க்காமல் விட்டோம் என்று சற்று வருத்தம் ஏற்படுகிறது. செழியோடு இங்கு சென்று வந்ததும் புகைப்படங்களை பதிவேற்றுகிறேன். Yelagiri Cloud Forest

தகவல் தந்து உதவிய க்ளவுட் ஃபாரெஸ்ட் நிறுவனருக்கு நன்றி. இணையதளத்தில் இந்த இடம், சுற்றுலாவாசிகளால் மிகவும் சிறப்பாகப் பாராட்டப்பட்டிருக்கிறது.

இதோ க்ளவுட் ஃபாரெஸ்டின் இன்ஸ்டாகிராம் பக்கம்.

4) ஏலகிரி இயற்கை பூங்கா

பயணிப்பவர்களின் மன நிலை பல்வேறு இரகம். ஒரு ஊருக்குச் சென்றால் அந்த ஊரின் முக்கிய சுற்றுலா தலங்கள் அனைத்தையும் பார்த்தேயாக வேண்டும் என்போரும், தங்களின் மனதிற்கு ஒத்த சுற்றுலா தலங்களை மட்டும் பார்ப்போரும், பெரும்பாலான நேரத்தை விடுதியில் ஓய்வில் கழித்து விட்டு மீதமுள்ள நேரத்தில் வெளியுலகைப் பார்க்க வருவோரும் இந்த இரகங்களில் சிலர்.

அனைத்துத் தரப்பினருக்கும் ஏலகிரி பூங்கா ஏற்றதாய் இருக்கும். பசுமையான மரங்கள், செயற்கை நீர்வீழ்ச்சி, குழந்தைகளுக்கான விளையாட்டுக் கருவிகள், மாலை நேர இசை நீருற்று நிகழ்ச்சிகள் என அனைத்து வயதினரும் உற்சாகமாக பொழுதைக் கழிக்க இது ஏற்ற இடம்.

Yelagiri Nature Park

Yelagiri Nature Park

Yelagiri Nature Park

Yelagiri Nature Park

Yelagiri Nature Park

5) ஃபன்டேரா பூங்கா

பறவை மற்றும் விலங்கினங்களை நேசிப்பவர்களுக்கு ஃபன்டேரா பூங்கா ஒரு சொர்க்க பூமி. வேற்று நாடுகளைச் சேர்ந்த 500-க்கும் அதிகமான உயிரினங்களின் வாழ்விடமாக இது விளங்குகிறது. 

இந்தப் பூங்காவின் சிறப்பு அம்சங்களில் ஒன்று, இந்த விலங்குகளை நீங்கள் மிக அருகில் சென்று பார்க்க முடிவதோடு, அவற்றைத் தடவிக் கொடுத்து கொஞ்சவும், அவற்றிற்கு உங்கள் கைகளால் உணவளிக்கவும் வசதி செய்யப்பட்டிருக்கிறது. பறவைகளின் கூண்டு அல்லது அவை தங்குமிடத்திற்குள்ளேயே நீங்கள் செல்ல முடியும்.

ஏலகிரியில் உள்ள ஃபன்டேரா பூங்காவைப் பற்றி மேலும் விவரங்கள் அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

6) மவுன்டன் வியூ அட்வென்சர் பார்க் (Mountain View Adventure Park)

சாகச விரும்பிகளுக்கு பெரும் தீனி அளிக்கிறது மவுன்டன் வியூ அட்வென்சர் பார்க். சென்னை மற்றும் சென்னைக்கு அருகில் உள்ள கிஷ்கிந்தா, எம்.ஜி.எம் போன்ற பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு சென்று தலைச்சுற்றும் சாகசங்கள் சிலவற்றில் ஈடுபட்டதோடு இவை அனைத்திற்கும் நான் முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது. ஆனாலும், அடுத்த ஏலகிரி பயணத்தின் போது மவுன்டன் வியூ அட்வென்சர் பார்க்கில் உள்ள சில விளையாட்டுகளையேனும் விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். இதோ, அங்கே உள்ள விளையாட்டுகளில் சில:

  • Zipline
  • Bungee Jump
  • ATV Ride
  • Giant Swing
  • Kids Boat Ride
  • Archery
  • Kids Adventure Activities
  • Waterfall and Jungle Trekking

மவுன்டன் வியூ அட்வென்சர் பார்க்கும் இணையதளத்தில் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்த பூங்காவைப் பற்றி மேலும் விவரங்கள் அறிய, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

ஏலகிரியில் உள்ள சுற்றுலா தலங்கள் வரிசையில் மேலும் முக்கியமான சில:

  • ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி
  • தி த்ரில் வேலி (The Thrill Valley)
  • ஏலகிரி அட்வென்சர் கேம்ப்
  • அரசு மூலிகை பண்ணை
Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் http://www.youtube.com/@PetsDiaryandMomsToo என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.

2 Responses

  1. ஏலகிரி பற்றிய பலப் பல அரிய செய்திகளை தொகுத்து எழுதியிருப்பது மிகவும் பாராட்டிற்கு உரியது. அற்புதமான தகவல்கள்..நன்றி
    மேலும் பல நல்ல பதிவுகள் வர வாழ்த்துகள்.

    1. மிக்க நன்றி. தங்களின் கருத்து மிகவும் ஊக்கப்படுத்துவதாக உள்ளது. தொடர்ந்து நம் தளத்தில் இணைந்திருந்து கருத்துகளைப் பகிருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்