வடமொழியில் ‘விருஷ’ என்றால் மரம். உடலை ஒற்றைக் காலில் தாங்கி நிற்கும் இவ்வாசனத்தைப் பயில்வதால் நம் மனமும் உடலும் சமநிலையை அடைவதால் இது விருஷாசனம் என்ற பெயர் பெற்றது. இவ்வாசனம் ஆங்கிலத்தில் Tree Pose என அழைக்கப்படுகிறது.

விருஷாசனம், மூலாதாரம், சுவாதிட்டானம், ஆக்ஞா மற்றும் குரு சக்கரங்களைத் தூண்டி அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. மூலாதாரம் நிலையான தன்மையை அளிக்கிறது, சுவாதிட்டானம் படைப்புத் திறனை அதிகரிக்கிறது; ஆக்ஞா சக்கரம் தெளிவான மன நிலையையும் தீர்க்கமான முடிவெடுக்கும் திறனையும் வளர்க்கிறது.

விருஷாசனத்தின் மேலும் சில பலன்கள்
  • முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்கிறது
  • முதுகுத்தசைகளைப் பலப்படுத்துகிறது
  • கால்களை வலுவாக்குகிறது
  • கைகளையும் கால்களையும் நீட்டிக்கிறது
  • இடுப்புப் பகுதியைப் பலப்படுத்துகிறது
  • சையாடிக் பிரச்சினையைத் தீர்க்க உதவுகிறது
  • இளமையான தோற்றத்தைத் தருகிறது
  • உடல் மற்றும் மனதின் சமநிலையை மேம்படுத்துகிறது
  • மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளைப் போக்க உதவுகிறது
  • கவனத்தைக் கூர்மையாக்குகிறது
  • தன்னம்பிக்கையை வளர்க்கிறது
  • மன அழுத்தத்தைப் போக்குகிறது
செய்முறை
  • தாடாசனத்தில் நிற்கவும்.
  • வலது காலை மடித்து வலது பாதத்தை இடது தொடையின் உள்பக்கம் வைக்கவும். வலது கால் விரல்கள் கீழ் நோக்கி இருக்க வேண்டும். முடிந்த அளவு குதிகாலை உயர்த்தி வைக்கவும்.
  • மூச்சை உள்ளிழுத்தவாறே கைகளைப் பக்கவாட்டில் உயர்த்தவும்.
  • மூச்சை வெளியேற்றியவாறே கைகளை தலைக்கு மேல் உயர்த்தி இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றாக வைக்கவும். கை முட்டி நேராக இருக்க வேண்டும்.
  • நேராக பார்க்கவும்.
  • 30 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின் வலது காலைக் கீழே இறக்கி, இடது காலை உயர்த்திச் செய்யவும்.
குறிப்பு

தூக்கமின்மை, குறைவான இரத்த அழுத்தம் மற்றும் தீவிர இடுப்புப் பிரச்சினை உள்ளவர்கள் விருஷாசனம் பயில்வதைத் தவிர்க்கவும்.

அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கைகளைக் கீழே தொங்க விட்டு இவ்வாசனத்தைப் பழகவும்.

ஒற்றைக் காலில் நிற்பது கடினமாக இருந்தால், சுவரை ஒட்டி நின்றவாறு இந்த ஆசனத்தைப் பழகவும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

தமிழ்