மரங்களின் பொதுவான நன்மைகள் பற்றி நாம் அறிவோம். சில மரங்களுக்கும் செடிகளுக்கும் கொசுக்களை விரட்டும் ஆற்றல் உண்டு என்பது சிலருக்குப் புதிய தகவலாய் இருக்கலாம். இன்றைய பதிவில் இயற்கையான முறையில் கொசுவை விரட்டும் மரங்கள் மற்றும் செடிகளைப் பற்றிப் பார்க்கலாம்.
கொசுத் தொல்லை என்று சாதாரணமாகப் புறந்தள்ளி விட முடியாமல் இருப்பதற்குக் காரணம் மலேரியா, டெங்கு போன்ற பல காய்ச்சல்களும் பரவ கொசுக்கள் காரணமாக இருப்பதே. ஒவ்வொரு வருடமும் உலகளவில இலட்சக்கணக்கான மக்கள் கொசுக்கடியால் உண்டாகும் நோய்களால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் அறிவிக்கின்றன. கொசுக்களை விரட்டப் பயன்படுத்தப்படும் இரசாயன கொசுவர்த்திகளால் காற்று மாசு அடைவதோடு தொடர் பயன்பாட்டின் விளைவாக உடல்நலத்திற்கும் கேடு உண்டாகிறது.
சில குறிப்பிட்ட மரங்களுக்கும் செடிகளுக்கும் இயற்கையாகவே கொசுக்களை விரட்டும் தன்மை உண்டு. அந்த மரங்கள் மற்றும் செடிகள் வெளியிடும் எண்ணெய் மற்றும் linalool போன்ற சில கூறுகள் கொசுக்களை அண்டவிடாமல் செய்யும் தன்மை கொண்டவை. பாரம்பரிய அறிவு மட்டுமல்லாமல் ஆய்வுகளும் கீழ்க்கண்ட மரங்கள் கொசுக்களை விரட்டும் தன்மை கொண்டவை என கண்டறிந்துள்ளன.
கொசுக்களை விரட்டும் மரங்களும் செடிகளும்
இயற்கையோடு ஒட்டி வாழ்ந்த முன்னோர்கள் எந்த ஒரு தேவைக்கும் பிரச்சினைக்கும் இயற்கையிலேயே தீர்வைத் தேடினார்கள். பாரம்பரிய பயன்பாட்டில் இருந்து வந்த பல மருத்துவ செடிகளும் மரங்களும் இப்போது நவீன மருத்துவத்தின் ஆய்வுகள் மூலம் நன்மை தருவனவாக உறுதி செய்யப்படுகின்றன.
அந்த வகையில் கொசுக்களை அண்ட விடாமல் தடுக்கும் மரங்கள் மற்றும் செடிகள் சிலவற்றைக் குறித்துப் பார்க்கலாம்.
1) வேப்ப மரம்

பாரம்பரிய மருத்துவத்தின் இன்றியமையாத அங்கங்களில் ஒன்றான வேப்ப மரம், கிராமத்து மருந்துக் கடை என்று குறிப்பிடப்படுகிறது.
பல்வேறு சிறப்புகளைக் கொண்ட வேப்ப மரத்தின் இலைகளுக்கு கொசுக்களை வர விடாமல் தடுப்பது மட்டுமல்லாமல், அவை இனப்பெருக்கம் செய்வதையும் தடுத்து விடும் ஆற்றல் உண்டு. வேப்ப மரத்தின் முக்கிய கூறான azadirachtin, கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வதையே தடுத்து விடுவதாக ஆய்வு முடிவு அறிவித்திருக்கிறது. வேப்பெண்ணெய் கொசுக்கடியிலிருந்து பல மணி நேரத்திற்கு நம்மைப் பாதுகாப்பதாய் ஆய்வுகள் அறிவிக்கின்றன.
வீட்டின் அருகில் வேப்ப மரம் நடுவதால் அது நிழல் தருவதோடு கொசுக்களையும் தவிர்த்து விடும்.
வேப்ப மரம் நட வாய்ப்பில்லையென்றால் வேப்ப இலை கிடைத்தாலும் போதுமானது. சிறிது வேப்ப இலைகளை எரித்து அந்தப் புகையை கொசுக்கள் அதிகமாக வரும் இடங்களில் பரவ விடலாம்.
வேப்ப எண்ணெய்யை தேங்காய் எண்ணெயோடு கலந்து உடலில் பூசிக் கொள்ளலாம்.
2) காமாட்சி புல் / மாந்தப் புல்
காமாட்சி புல் என்றும் மாந்தப் புல் என்றும் அழைக்கப்படும் இந்த புல், கொசுவை விரட்டுவதற்குப் பெரிதும் உதவுவதாக பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சருமத்தின் காயங்களை ஆற்றவும் சரும நலனைப் பாதுகாக்கவும் இந்த காமாட்சி புல் உதவுகிறது. தோட்டத்தில் இந்த செடியை சுலபமாக வளர்க்கலாம், வீட்டிற்குள்ளும் வளர்க்கலாம்.
3) துளசி
துளசி பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டது என்பதை நாம் அறிவோம். கொசுவை விரட்டும் ஆற்றல் துளசிக்கு உண்டு என்பது சிலருக்குப் புதிய செய்தியாக இருக்கலாம். துளசிக்கு கொசுவை விரட்டும் தன்மை உண்டு என்று ஆய்வு முடிவுகள் அறிவிக்கின்றன. உங்கள் ஜன்னலுக்கு அருகில் துளசிச் செடியை நடலாம். இது காற்றையும் சுத்தம் செய்யும் தன்மை கொண்டது.
துளசி சாறெடுத்து படுக்கும் போது கைகால்களில் பூசிக் கொள்ளலாம். அல்லது, துளசி இலைகள கொதிக்க வைத்து அந்த தண்ணீரை கொசு இருக்கும் இடங்களில் தெளித்து விடலாம்.
4) எலுமிச்சை புல்
எலுமிச்சை புல் தேநீர் பல உடல் பிரச்சினைகளுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. அதிக இரத்த அழுத்தம், மன அழுத்தம், பற்கள் பிரச்சினை போன்ற பல உபாதைகளுக்கும் எலுமிச்சை புல் நல்லது. அது மட்டுமல்லாமல் கொசுவை விரட்டும் ஆற்றலும் எலுமிச்சை புல்லுக்கு உண்டு.
(மன அழுத்தத்தைப் போக்கும் 15 சிறந்த ஆசனங்களைப் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.)
தரமான எலுமிச்சை புல் எண்ணெய்யோடு தேங்காய் எண்ணெய் சேர்த்து சருமத்தில் தேய்த்துக் கொள்ளலாம். இது கொசுவை அண்டவிடாமல் தடுக்கும். எலுமிச்சை புல் மெழுகுவர்த்தியை பயன்படுத்தி செய்யப்பட்ட ஆய்வில், கொசுவை விரட்டும் ஆற்றல் எலுமிச்சை புல் மெழுகுவர்த்திக்கு இருப்பது நிரூபணமாகியுள்ளது. எலுமிச்சை புல் ஊதுவத்தியும் சிறந்த பலனைத் தருகிறது.
5) நறுமணப்புதர்ச்செடி
நறுமணப்புதர்ச்செடி காயங்களை விரைவில் ஆற்றவும் மனதை அமைதிப்படுத்தவும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. நறுமணப்புதர்ச்செடியின் எண்ணெய்க்கு, கொசுவை விரட்டும் ஆற்றலும் உண்டு. நறுமணப்புதர்ச்செடியின் எண்ணெய்யை தேங்காய் எண்ணெயோடு கலந்து உடலில் தடவிக் கொள்ளலாம். அல்லது diffuser மூலம் lavender-ன் வாசனையை வீட்டில் பரவச் செய்யலாம்.
6) சாமந்தி
கண்ணையும் மனதையும் ஒரு சேரக் கவரும் சாமந்தி பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டது. சளி, காய்ச்சல், வீக்கம், மூட்டு வலி போன்றவற்றிற்கு மருந்தாக அமையும் சாமந்தி, கொசுக்களை விரட்டவும் உதவுவதாக ஆய்வுகள் அறிவித்துள்ளன.
7) குப்பைமேனி
சாலை ஓரங்களில் மானாவாரியாகக் காணக் கிடைக்கும் குப்பைமேனி, சருமப் பிரச்சினைகள் பலவற்றையும் போக்க வல்லது. வீக்கம், வலி, தோல் நோய் உள்ளிட்ட பலவற்றிற்கும் குப்பைமேனி பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
குப்பைமேனிக்கு கொசுவை விரட்டும் தன்மையும் உண்டு. குப்பைமேனி இலைகளை சுத்தம் செய்து தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பயன்படுத்தவும்.
சிறந்த பலன்களைப் பெற இந்த மரங்களையும் செடிகளையும் ஜன்னல் மற்றும் பால்கனிக்கு அருகில் நடலாம்.
காய்ந்த அல்லது காய வைத்த இலைகளைக் கொண்டு மாலை நேரத்தில் புகை எழுப்பி வீடு முழுவதும் பரவச் செய்யலாம்.
வாய்ப்பிருந்தால் மேற்கூறிய மரங்கள் மற்றும் செடிகளின் எசன்சியல் எண்ணெய்யைப் பயன்படுத்தலாம்.
இரசாயன கொசுவிரட்டிகளுக்கு சிறந்த மாற்று இயற்கை கொசுவிரட்டிகள்தான். இந்த இயற்கை கொசுவிரட்டிகள், கொசுவை விரட்டுவதோடு காற்றையும் மாசுப்படுத்தாமல் சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாய் இருக்கும்.
பாரம்பரிய அறிவையும் நவீன மருத்துவத்தின் சிறப்புகளையும் இணைத்து பயன்படுத்தினால் நம் சுற்றுச்சூழல் பாதுகாப்பானதாகவும் சிறப்பானதாகவும் விளங்கும்.
எந்த ஒரு எண்ணெயை பயன்படுத்தும் முன்னர் அது உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். செல்லப்பிராணி வளர்ப்பவர்கள், செல்லப்பிராணிக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்கள் பற்றி அறிந்து பயன்படுத்துவது நல்லது.
இரமா தமிழரசு
வணக்கம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்.
எங்களுடைய பிற வலைப்பக்கம் மற்றும் YouTube channel-கள்:
https://voiceofapet.blogspot.com/
https://www.youtube.com/@PetsDiaryPages
http://www.youtube.com/@letnaturelive_YT

பத்து இலட்சம் முயல்களை பாலைவனத்தில் விட்டதா சீனா? – The Rabbit Story and Great Green Wall of China
Fact Check: Did China release 1 million rabbits in the desert? Check the post to know the truth.

அழிவின் விளிம்பில் இருக்கும் 7 இந்திய மருத்துவ மரங்கள்
அழியும் அபாயத்தில் 7 இந்திய மருத்துவ மரங்கள் சித்த மருத்துவம், ஆயுர்வேதம் போன்ற சில பண்டைய காலத்து இந்திய மருத்துவ முறைகளில் மரங்களுக்கு மிக முக்கிய பங்கிருந்தது. அமைதியான, அற்புதமான இந்த மரங்கள் மருத்துவத்

சாவ்லா – ஒரு அழகிய வரலாறு ஆபத்தின் விளிம்பில்
இயற்கையின் படைப்பில் மனிதன் அறிந்திராத அற்புதங்கள் ஏராளம் என்பதற்கான சிறு உதாரணமாக இருப்பதுதான் சாவ்லா (Saola). 1992 வரை இப்படி ஒரு விலங்கு இருப்பதையே இந்த உலகம் அறிந்திருக்கவில்லை. லாவோஸ் மற்றும் வியட்நாம் எல்லைகளில்




