நாம் முன்னர் குறிப்பிட்டிருந்தபடி முன் குனிந்து செய்த ஆசனங்களுக்கு மாற்று ஆசனங்களை பார்க்கவிருக்கிறோம். அதாவது, பின் நோக்கி வளையும் ஆசனங்கள் ஆகும். அதில் இப்போது உத்தானாசனத்துக்கு மாற்றாக நாம் செய்யவிருப்பது ஊர்த்துவ நமஸ்காராசனம். இது ஆங்கிலத்தில் Upward Salutation Pose என்று அழைக்கப்படுகிறது. ஊர்த்துவ என்றால் “மேல் நோக்கும்” என்று பொருள். கைகளை மேல் தூக்கி இடுப்பை பின் வளைத்து நிற்பது. முன் குனிந்து ஆசனம் செய்யும் போது, முன் இடுப்பு பூட்டப்பட்டு இரத்த ஓட்டம் பின் உடலில் நன்றாக பாயும். இதையே பின் நோக்கி செய்யும் போது பின் இடை பூட்டப்பட்டு இடையின் முன் பகுதி மற்றும் வயிறு, கால்கள், தலை என அனைத்திலும் இரத்த ஓட்டம் சீராகப் பாய்கிறது.

இந்த நிலையை தொடர்ந்து செய்வதால் கால்கள் பலவீனமாக இருந்தாலும் பலமாகி விடும். நிற்கக் கூடிய ஆற்றல் வளரும். வயிற்று பகுதி அழுந்துவதால் மண்ணீரல், கல்லீரல், சிறுநீரகம் போன்றவற்றின் இயக்கம் சீரடைகிறது. தடுமாற்றம் குறைந்து உடல் நிலைப்புத்தன்மை கூடும் (balance). சரி, இதன் மற்ற பலன்களையும் செய்முறையையும் பார்ப்போம்.

உத்தானாசனம் பலன்கள் மற்றும் செய்முறையை பற்றி தெரிந்து கொள்ள, இந்தப் பக்கத்திற்குச் செய்யவும்.

Upward Salutation Pose

ஊர்த்துவ நமஸ்காராசனத்தின் மேலும் சில பலன்கள்

மேலே குறிப்பிட்டுள்ளது போல் வயிற்று உறுப்புகளின் இயக்கத்தை செம்மையாக்குகிறது, தோள்களையும் கால்களையும் பலப்படுத்துகிறது. மேலும்,

  • மூச்சு கோளாறுகளைச் சரி செய்ய உதவுகிறது.
  • சீரண கோளாறுகளைச் சரி செய்கிறது.
  • முதுகு வலியைப் போக்க உதவுகிறது.
  • வயிற்று தசைகளை நீட்சியடைய (stretch) செய்கிறது.
  • சோர்வைப் போக்கி, உடலுக்கு ஆற்றலைத் தருகிறது.
  • பின் வளையும் கடினமான ஆசனங்களுக்கு உடலை தயார் செய்கிறது.
Power Vinyasa Flow Bootcamp
செய்முறை

ஊர்த்துவ நமஸ்காரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

  • தாடாசனத்தில் நிற்கவும்.
  • மூச்சை இழுத்துக் கொண்டே பின்னால் வளையவும்.
  • கைகளை உயர்த்தவும். கை முட்டியை வளைக்காமல், உள்ளங்கைகள் ஒன்றை ஒன்று பார்த்தவாறு இருக்க வேண்டும்.
  • கைகளை நீட்டிய நிலையிலேயே பின்னால் வளையவும். கைகளின் மேற்புறம் காதுகளுக்கு அருகில் இருக்க வேண்டும்.
  • 20 வினாடிகள் சாதாரண மூச்சில் இந்த நிலையில் இருந்த பின், மூச்சை வெளியேற்றியவாறு பழைய நிலைக்கு வரவும்.
குறிப்பு

முடிந்த அளவு பின்னால் வளைந்தால் போதுமானது. இந்த ஆசனத்தை தாடாசனத்தின் ஒரு வகையை போல் நேராக நின்று கைகளை தலைக்கு மேல் உயர்த்தி உள்ளங்கைகளை சேர்த்தும் செய்யலாம்.

தீவிர கழுத்து பிரச்சினை மற்றும் தோள் பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்க வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

தமிழ்