பின் வளைந்து செய்யும் ஆசனங்களில் சவாலான ஆசனம் சக்ராசனம். இதன் பெயரிலேயே புரிந்திருக்கும், இவ்வாசனத்தில் உடல் சக்கரமாக வளைந்திருக்கும் என்று. இவ்வாசனம் ஆங்கிலத்தில் Wheel Pose என்று அழைக்கப்படுகிறது.
சக்ராசனம் உடலில் உள்ள முக்கியமான எட்டு சக்கரங்களையும் (ஏழு முக்கிய சக்கரங்கள்தானே என்று நினைக்கிறீர்களா, விரைவில் இது பற்றி எழுதுவோம்) தூண்டுவதால், இவ்வாசனம் மிகவும் வலிமையான ஆசனமாகவும் உடலுக்கு ஆற்றலைத் தரும் ஆசனமாகவும் ஆகிறது. சக்ராசனம் பழகுவதால் முழு உடலுக்குமே அற்புதமான அளவில் பயிற்சி கிடைக்கிறது.
சக்ராசனத்தின் மேலும் சில பலன்கள்
- உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது
- முதுகெலும்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதோடு முதுகெலும்பை பலப்படுத்தவும் செய்கிறது
- முதுகுத் தசைகளை உறுதியாக்குகிறது
- தோள்களை விரிக்கிறது
- நுரையீரலின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது
- இருதயத்தின் இயக்கத்தை செம்மையாக்குகிறது
- உடல் முழுமையையும் உறுதியாக்குகிறது
- வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது
- கால்களை நீட்சியடையச் செய்வதோடு கால் தசைகளை பலப்படுத்தவும் செய்கிறது
- இளமையான தோற்றத்தைப் பராமரிக்கிறது
செய்முறை
- தரையில் படுக்கவும்.
- கால்களை மடித்து பாதங்களை உங்கள் புட்டத்துக்கு அருகில் வைக்கவும். இரண்டு பாதங்களுக்கு இடையில் இடைவெளி விடவும்.
- கைகளை உயர்த்தி, தோள்களுக்கு பின் புறமாகத் தரையில் வைக்கவும். விரல்கள் உங்கள் தோள்களை நோக்கிய வண்ணம் இருக்க வேண்டும்.
- உள்ளங்கைகளையும் பாதங்களையும் தரையில் நன்றாக ஊன்றி, மூச்சை உள்ளிழுத்தவாறு உடலை முடிந்த வரை மேல் நோக்கி உயர்த்தவும்.
- 20 வினாடிகள் இந்த நிலையில் இருக்கவும்.
- மெதுவாக தரையில் படுத்து கால்களை நீட்டவும்.
குறிப்பு
தீவிரமான முதுகுத்தண்டு கோளாறு, இடுப்புப் பிரச்சினை, தோள் மற்றும் மூட்டுப் பிரச்சினை உள்ளவர்கள் சக்ராசனம் செய்வதைத் தவிர்க்கவும்.