உடல் மன ஆரோக்கியம்

யோகா – ஒரு அறிமுகம்

யோகா – இது வெறும் வார்த்தையல்ல. அல்லது, ஒரு பயிற்சிக்கான வார்த்தையாக சுருக்கி விடக் கூடியதுமல்ல. “அவனுக்கு வந்த யோகத்தை பாரு” என்று ஒருவரது வளர்ச்சியை அடையாளப்படுத்தி இயல்பாக சொல்வோம். யோகம் என்றால் உயர்ச்சி, உற்சாகம், கூடல், புணர்ச்சி, சூத்திரம், மருந்து, உணர்ச்சி, தகுதி, தவம், தியானம், பொருத்தம், போர்க்கவசம், சித்தத்தை பிரம்மத்தில் நிறுத்துதல் என்று பல பொருள்கள் உண்டு. இந்த ஒவ்வொரு பொருளும் யோகத்தோடு நேரடியாக தொடர்புடையவை. சரியாக சொன்னால், யோகப்பயிற்சியினால் நாம் அடையக் கூடியவை.

யோகம் வாழ்க்கையில் உயர்ச்சியைத் தரும்.

யோகம் அன்றாடம் நம்மை உற்சாகத்தோடு வைத்திருக்கும்.

யோகம் உடல்களின் கூடலை நடத்துகிறது. புணர்தல் என்றால் கலத்தல். அக உடலும், புற உடலும், காரண உடலும் ஒன்றாகக் கலந்து கூடி இயங்குகிறது.

யோகம் –தவம் அல்லது ஒழுக்கத்தை அளிக்கிறது.

யோகம் – நோய்களிலிருந்து எதிர்மறை அம்சங்களிடமிருந்து உடலையும் மனதையும் காக்கும் போர்க்கவசமாக இருக்கிறது.

யோகம் – எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி மூளையின் ஆற்றலை பலப்படுத்துகிறது; அதாவது சித்தத்தை பிரம்மத்தில் நிறுத்துகிறது.

இவ்வளவு பலன்களின் ஒரு பெயரே யோகா. இது நம் முன்னோர்களின் வாழ்வில் இயல்பான ஒரு அங்கமாக இருந்திருக்க வேண்டும். அதனால்தான் இயல்பான வார்த்தை பயன்பாடாக வழக்கத்தில் உள்ளது.

சரி, இவ்வளவு அரிய பலன்களை தரும் யோகக்கலையை நமது வாழ்க்கையின் அங்கமாக மாற்றிக் கொள்ள வேண்டாமா? நம் முன்னோர்கள் பெற்ற பலன்களை நாமும் பெற வேண்டும். இன்று பரவலாக யோகப் பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. ஆனால், அதற்கு மேலாக மற்ற உடற்பயிற்சிகள் பரவி இருக்கின்றன. அனைவராலும் யோக வகுப்புகளை தேடிச் சென்று கற்றுக் கொள்ள இயலவில்லை. வகுப்புகளும் அவ்வளவு பரந்து இல்லை. ஆனால், மக்களுக்கு ஆர்வம் இருக்கிறது. மக்களின் ஆர்வத்தையும் யோகக்கலையையும் இணைப்பதற்கான ஒரு முயற்சிதான் இந்த யோக ஆற்றல்.

இதில், ‘தினம் ஒரு ஆசனம்’ என்ற விதத்தில் துவங்கி படிப்படியாக பல ஆசனங்களையும் பயிற்சி செய்யலாம். அனைத்து வயதினரும் மற்றும் அனைத்து உடல்வாகு உள்ளவர்களும் செய்வதற்கு உரியதாக இப்பயிற்சிகள் இருக்கும்.

சரி, இனிதாய் துவங்குவோமா.

2 Responses

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்