உடல் மன ஆரோக்கியம்

யோகா குறித்த கேள்வி பதில்

நாம் இரண்டு மாதங்களுக்கும் சற்று அதிகமாக யோகாசனங்கள், அவற்றின் செய்முறை மற்றும் பலன்கள் பற்றி பார்த்து வந்திருக்கிறோம். புதிதாக யோகப்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு யோகா குறித்த சில சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக இன்றைய தினம் கேள்வி பதில் பகுதி பதிவேற்றம் செய்யப்படுகிறது. இப்பகுதியில் பதிலளிக்கப்பட்டுள்ள கேள்விகளைத் தவிர்த்து வேறு கேள்விகள் உங்களுக்கு இருப்பின், கீழ் உள்ள மறுமொழிக்கான பகுதியில் உங்கள் கேள்விகளைக் கேட்கவும்.

1) யோகா என்பது ஒரு மதமா?

உடலை நலமாக வைத்திருக்க, உடல் எடை குறைய அல்லது அதிகரிக்க, வலியைப் போக்க, நோய்த் தீர்க்க அல்லது தவிர்க்க, மனம் அமைதி பெற என்பவை பொதுவாக யோகா பயில்வதற்கான காரணங்களில் சில. யோகப் பயிற்சி இவை அனைத்திற்கும் உதவும் என்றாலும் யோகா என்பது அதையும் கடந்தது.

யோகா என்பது உடல், மன, ஆன்மாவின் ஒருங்கிணைப்பு; இந்த ஒருங்கிணைப்பின் மூலம் ஆழ்மன ஆற்றலைப் பெருக்கி பிரபஞ்ச ஆற்றலோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது.

யோகா என்பது எதிர்மறை எண்ணங்களைப் போக்கி நேர்மறை எண்ணங்களை வளர்த்து சிந்தனையின், வாழ்க்கையின் தன்மையை, மேம்படுத்துவது.

யோகா என்பது ஒரு அறிவியல். உடல், மன நலத்தைப் பாதுகாத்து தன் மனதோடும் சுற்றியுள்ள உலகோடும் நல் உறவைப் பேண உதவுவது.

யோகா இனம், மதம், நாடு போன்ற வரையறைகளுக்கு அப்பாற்பட்டது. யோகா என்பது ஒரு கலை.

சுருக்கமாகச் சொன்னால் யோகா என்பது ஒரு வாழ்வியல் முறை.

2) வாரத்தில் எவ்வளவு நாட்கள் / எவ்வளவு மணி நேரம் ஆசனம் செய்ய வேண்டும்?

இதற்கென்று பொதுவான விதி எதுவும் இல்லை. ஆனால், யோகப் பயிற்சியின் பலனை நன்கு அனுபவிக்க, வாரத்தில் மூன்று நாட்களாவது ஆசனம் பயில்வது நல்லது.  ஒரு நாளில் ஒரு மணி நேரம் பயிற்சி செய்யலாம். நேரம் குறைவாக இருந்தால் 20 நிமிடப் பயிற்சி செய்தால் போதுமானது.

3) ஆசனம் பழகுபவர்கள் அசைவம் தவிர்க்க வேண்டுமா?

ஆசனம் பயில்வதற்காக எந்த வகை உணவையும் தவிர்க்க வேண்டிய தேவையில்லை. நீங்கள் உடலுக்கு நலம் தரும் அனைத்து வகை உணவுகளையும் உண்ணலாம்.

4) உடலின் நெகிழ்வுத்தன்மை குறைவாக இருப்பவர்கள் ஆசனம் செய்ய முடியுமா? ஆசனங்களை முழுமையான வடிவத்தில் செய்ய முடியவில்லை என்றால் பலன் கிடைக்குமா?

நெகிழ்வுத்தனமை குறைவாக இருந்தால் ஆசனம் பயில்வது மிகவும் அவசியம். தொடர் யோகா பயிற்சியில் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும். ஆசனங்களை முழுமையாகப் பயில முடியவில்லை என்றாலும் கவலை வேண்டாம். முயற்சி செய்வதிலேயே உங்கள் பலனும் தொடங்கும். ஒரு ஆசனத்தை முடிந்த அளவு செய்தாலும் அதன் பலன்கள் கிடைக்கும். உடலின் நெகிழ்வுத்தன்மை அல்லது வேறு எதாவது காரணங்களால் ஒரு ஆசனத்தை முழுமையாகச் செய்ய முடியவில்லை என்றால் yoga block போன்ற ஒன்றின் உதவியோடு பயிலலாம். அதனாலும் பலன் நிச்சயமாகக் கிடைக்கும்.

5) யோகாவை விரிப்பில் தான் பயில வேண்டுமா? எந்த மாதிரியான விரிப்பில் பயில்வது நல்லது?

யோகாவை வெறும் தரையில் பயிலக் கூடாது. விரிப்பு அல்லது yoga mat பயன்படுத்துவது சிறந்தது. விரிப்பாக இருந்தால் பருத்தியாக இருப்பது நலம். Yoga mat வாங்குவதில் கவனிக்க வேண்டிய அம்சங்களை வரும் நாளில் பார்க்கலாம்.

6) மாதவிடாய் காலத்தில் யோகப் பயிற்சி செய்யலாமா?

இதில் பல மாறுபட்ட கருத்துகள் உண்டு. சில யோகா ஆசான்கள் மாதவிடாய் காலத்தின் முதல் மூன்று நாட்கள் எப்பயிற்சியும் செய்வதைத் தவிர்க்குமாறு கூறுவர். சிலர் ஆசனங்கள் பயிலலாம் என்று கூறுவர். பொதுவாக, தலை கீழ் உடல் மேலாக இருக்கும் (அதோ முக ஸ்வானாசனம்) போன்ற ஆசனங்களை மாதவிடாய் காலத்தில் தவிர்ப்பது நல்லது. உடலை வளைத்து முறுக்கும் ஆசனங்களைப் பயிலாமல் மிதமான ஆசனங்களைப் பயிலலாம். ஓய்வு ஆசனத்தில் இருக்கலாம்.

7) கர்ப்பிணிப் பெண்கள் ஆசனம் செய்யலாமா?

கர்ப்பம் தரிப்பதற்கு முன் யோகா செய்திராத பெண்கள், கர்ப்பம் தரித்தப் பின் ஆசனம் பயில்வதாக இருந்தால் கர்ப்ப காலத்துக்கு ஏற்ற ஆசனங்கள் மட்டுமே செய்ய வேண்டும். அதிலும் முதல் மூன்று மாதங்களுக்குக் கட்டாயம் ஆசனம் பயிலக் கூடாது.

கர்ப்பம் தரிப்பதற்கு முன்பிருந்தே தொடர்ந்து தீவிர ஆசனப் பயிற்சியில் இருந்து வந்த பெண்கள், கர்ப்பகாலத்திலும் அவர்கள் முன்னரே செய்து வந்த ஆசனங்களை முடிந்த அளவு செய்யலாம். ஆனாலும், முதல் மூன்று மாதங்களுக்கு மிகவும் மிதமான ஆசனங்களை மட்டுமே பயில்வது நல்லது; நின்று  செய்யும் ஆசனங்களை மட்டுமே பயில்வது சிறந்தது. அடுத்த மூன்று மாதங்களுக்கு அவர்கள் கர்ப்பம் தரிப்பதற்கு முன் செய்து வந்த ஆசனங்களைப் பயிலலாம். கடைசி மூன்று மாதங்களுக்கு சுகப் பிரசவத்துக்கான ஆசனங்களை மட்டுமே செய்வது நல்லது.

8) பிரசவத்துக்குப் பின் எவ்வளவு நாட்கள் கழித்து ஆசனம் செய்யத் தொடங்கலாம்?

சுகப்பிரசவமாக இருந்தால் ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் யோகாசனப் பயிற்சியை மீண்டும் தொடங்கலாம். அறுவை சிகிச்சையில் குழந்தை பெற்றிருந்தால் அய்ந்து மாதங்கள் கழித்து ஆசனம் பயில்வது நல்லது.

9) பயிற்சியின் போது வாயு வெளியேறினால்?

வாயு வெளியேறுவதை அடக்கினால்தான் தவறு. அதனால், ஆசனம் பயிலும் போது வாயு வெளியேற்றும் உணர்வு தோன்றினால், உடலின் தேவையை மதிக்கவும். இதில் தர்மசங்கடமான உணர்வு ஏற்படும் என்றாலும் இது உடலின் தேவை என்ற கோணத்தில் பார்க்க வேண்டும். அதே நேரத்தில், வாயுவை அதிகரிக்கும் வகையான உணவுகளைப் பயிற்சிக்கு முதல் நாள் தவிர்ப்பது நல்லது.

10) உடல் நலக் குறைவின் போது ஆசனம் பயிலலாமா?

உடல் நலக் குறைவின் போது எந்த ஆசனமும் பயிலக் கூடாது. அம்மாதிரி நேரங்களில் உடல் தன்னை சரி செய்து கொள்ள உதவியாக நீங்கள் ஓய்வெடுப்பது நல்லது.

 

 

 

 

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்