வீட்டு மொட்டை மாடி, பூங்கா, சாலை என நடைப்பயிற்சி செய்வது பல வகையான இடங்களில் என்றாலும் இவை அனைத்திற்கும் பொதுவான சில பலன்கள் இருப்பதை நாம் அறிவோம். அது போலவே, இவை ஒவ்வொன்றுக்குமே பிரத்தியேகமான பலன்களும் உண்டு. இந்த வரிசையில் மலையேற்றப் பயிற்சிக்கு முக்கிய இடம் உண்டு. நம் வசிப்பிடத்திற்கு அருகில், வாரம் ஒரு முறை அல்லது இரு முறை செல்லக் கூடிய தொலைவில் மலைகளோ சிறு குன்றுகளோ இருந்தால், அச்சிறந்த வாய்ப்பைத் தவற விடாது பயன்படுத்துவது உடல், மன நலத்திற்கு மிகவும் நல்லது. இன்று மலையேற்றப் பயிற்சியினால் ஏற்படும் நன்மைகள் பற்றிப் பார்க்கலாம்.
மலையேற்றப் பயிற்சியினால் ஏற்படும் நன்மைகள்
மலையேற்றப் பயிற்சியால், குறிப்பாக இயற்கை சூழலில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபடுவதால் நமக்கு பல்வேறு உடல், மன நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றுள் சில:
- உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
- இருதய செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
- நுரையீரல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது.
- கால் தசைகளைப் பலப்படுத்துகிறது.
- தசை மற்றும் எலும்புகளை வலுவாக்குகிறது; எலும்புகளின் அடர்த்தியை அதிகப்படுத்துவதால், மூட்டு சார்ந்த பிரச்சினை உள்ளவர்களுக்கும் மலையேற்றம் சிறந்த பலனைத் தருகிறது.
- உடலின் சமநிலையை ஊக்குவிக்கிறது.
- மூளையின் திறனை மேம்படுத்துகிறது.
- நோய் எதிர்க்கும் திறனை வளர்க்கிறது.
- உடலின் தாங்கும் திறனை அதிகரிக்கிறது.
- நடையின் வேகத்தை அதிகப்படுத்துகிறது.
- இரவில் ஆழ்ந்த உறக்கம் பெற உதவுகிறது.
- மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
- மனதில் அமைதியையும் மகிழ்ச்சியையும் உண்டாக்குகிறது.
மலையேற்றப் பயிற்சியில் என்னென்ன செய்யலாம்?
மலையில் நடைப்பயிற்சி செய்யும் பொழுது சாதாரண முறையில் நடைப்பயிற்சி செய்வதைத் தவிர இன்னும் சில சுவாரசியமான முறைகளில் பயிற்சி செய்யலாம்.
மலையில் ஓட்டப் பயிற்சி
சமதரையில் ஓடுவதை விட ஏற்றம் மற்றும் இறக்கங்களில் ஓடுவது மேலும் சிறந்த பலன்களைத் தரும்.
ஸ்வீடனில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் வாரம் இரு முறை என பன்னிரண்டு வாரங்களுக்கு தொலைதூர ஓட்ட வீரர்கள் மலையில் ஓட்டப்பயிற்சி செய்ததன் மூலம் ஒரு மராத்தன் ஓட்டத்தை வழக்கத்தை விட மூன்று நிமிடங்கள் குறைவாக முடிக்கும் திறன் பெற்றது நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு ஆய்வின் மூலம் மலையில் ஓட்டப்பயிற்சி செய்வதால் பிராணவாயு அதிகரிப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
பின்னோக்கி மலையேறுதல் மற்றும் இறங்குதல்
பின்னோக்கி நடைப்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இதற்கு முன்னரே நாம் பார்த்திருக்கிறோம். மலையேற்றத்திலும் இறக்கத்திலும் பின்னோக்கி நடப்பதால் கூடுதல் நன்மைகள் கிடைப்பதாக பல்வேறு ஆய்வுகள் அறிவிக்கின்றன.
இது குறித்து செய்யப்பட்ட ஆய்வு ஒன்றில், ஏற்றத்திலும் இறக்கத்திலும் பின்னோக்கி நடப்பதால் கால் தசைகள் பலப்படுவதாகவும், முட்டி சார்ந்த பிரச்சினைகள் தீருவதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் சம தரையில் பின்னோக்கி நடப்பதை விடவும் ஏற்றத்திலும் இறக்கத்திலும் பின்னோக்கி நடப்பது தசையியக்கத்தை மேலும் கூட்டி கால் தசைகளை வலுவாக்குவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
படிக்கட்டுகளைப் பயன்படுத்துதல்
நீங்கள் செல்லும் மலையில் சாலைகள் தவிர மலையுச்சியை அடைய படிக்கட்டுகளும் இருந்தால் அவற்றையும் நீங்கள் பயன்படுத்தலாம்.
சிறிய மலையாயிருந்தால் மலைப்பாதையில் ஏறி உச்சியை அடைந்த பின் படிக்கட்டுகள் வழியாகக் கீழிறங்கி மேலே வந்து மீண்டும் மலைப்பாதை வழியாகக் கீழே இறங்கலாம். இது பயிற்சியின் தீவிரத்தைக் கூட்ட உதவும்.
மேடாக உள்ள பகுதிகளில் ஓடுதல், பின்னோக்கி நடத்தல் என மலையேறும் பயிற்சியை மேலும் சுவாரசியமாக்குவதும் பலன்களைக் கூட்டுவதும் நம்மிடம் தான் உள்ளது. மலையில் பல வழிப்பாதைகள் இருந்தால் ஒரு புறமாக ஏறி இன்னொரு புறமாக இறங்குவதும் பயிற்சியின் தீவிரத்தை அதிகப்படுத்தும்.
இந்த மலையில் நாங்கள் வேக நடையில் ஏற சுமார் 8 நிமிடங்கள்தான் ஆகிறது. ஆனாலும் இதில் ஒரு மணி நேரம் வரையில் மேற்கூறிய முறைகளில் நாங்கள் நடைப்பயிற்சி செய்கிறோம்.
சிறிய மலையோ பெரிய மலையோ, உச்சியை அடைந்ததும் காணக் கிடைக்கும் காட்சி நம் அன்றைய நாளின் பயிற்சிக்குக் கிடைத்த வெற்றியே.
பசுமைக்கிடையில் நகர்ப்புறவளர்ச்சிக்கான அடையாளமும் தெரிகிறது. நகரமயமாக்குதல் இயற்கையை உள்ளடக்கியதாக இருப்பது நம் ஆன்மாவுக்கு மட்டுமல்ல, பூமியின் ஆன்மாவிற்கே வேர் போன்றது.
இரமா தமிழரசு
வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் http://www.youtube.com/@PetsDiaryandMomsToo என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.
ஒரு வாரம் பின்னோக்கி நடைப்பயிற்சி செய்ததில் எனக்கு கிடைத்த நன்மைகள் என்ன?
பின்னோக்கி நடப்பதா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால், பின்னோக்கி நடத்தல் அற்புதமான பலன்களைத் தரும் ஒரு பயிற்சி. 100 அடிகள் பின்னோக்கி நடப்பது 1000 அடிகள் முன்னோக்கி நடப்பதற்கு சமம் என்று கூறப்படுகிறது. பல
எட்டு வடிவ நடைப்பயிற்சியின் அற்புத பலன்கள்
கொரோனா காலக்கட்டத்தில் மொட்டை மாடியைத் தன் வசமாக்கித் தினமொரு ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் ‘online class’ பிள்ளைகளுக்குப் போட்டியாக, ‘work from home’ பெற்றோர்களும் மொட்டை மாடியைப் புகலிடமாக்கிக் கொண்டு நடைப்பயிற்சி, யோகா போன்ற
திறந்தவெளி நடைப்பயிற்சியை சுவாரசியமாக்குவது எப்படி?
நடைப்பயிற்சி செய்பவர்களில்தான் எத்தனை விதமானவர்கள்? நடைப்பயிற்சி செய்யும் முறைகளில்தான் எத்தனை வித்தியாசங்கள்? உண்மையில் நடைப்பயிற்சி நமது உடலுக்கு நலம் தருவதோடு அப்பொழுது நாம் காணும் காட்சிகளும் மனிதர்களும் முறையே நம் கண்ணையும் கருத்தையும் கவர்வது
2 Responses
தற்பொழுதுள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு இந்த பதிவை நீங்கள் போட்டுள்ளீர்கள்
நகர்புறங்களில் வாழ்பவர்கள் முக்காவாசிப்பேர்கள் நடைப்பயிற்சி செய்கிறார்கள்.அவர்களுக்கு பயன்னுள்ளவகையில் இருக்கிறது இந்த பதிவு.
முக்கியமாக மலையில் நடைபயிற்சி அருமையான தகவல்.
நன்றி
உங்கள் கருத்தைப் பகிர்ந்து ஊக்குவிப்பதற்கு எங்கள் மனமார்ந்த நன்றி. தொடர்ந்து எங்கள் தளத்திற்கு வருகைத் தந்து கருத்துப் பகிருமாறு கேட்டுக் கொள்கிறோம்.