உடல் மன ஆரோக்கியம்

புரதச் சத்தின் நன்மைகளும் புரதக் குறைபாட்டின் அறிகுறிகளும்

முந்தைய பதிவில் கரிநீரகியின் நன்மைகள் மற்றும் கரிநீரகி குறைபாட்டின் அறிகுறிகள் குறித்து பார்த்தோம். இன்று, புரதத்தின் நன்மைகள், புரதக் குறைபாடால் உண்டாகும் பிரச்சினைகள் மற்றும் புரதச் சத்து நிறைந்த உணவுகள் குறித்து பார்க்கலாம்.

சமச்சீர் உணவின் நன்மைகள்; பழந்தமிழர் வாழ்வில் சமச்சீர் உணவு பற்றிய பதிவைப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

புரதத்தின் முக்கியத்துவம்

Source: Photo by Vanessa Loring: https://www.pexels.com/photo/healthy-food-ingredients-on-a-ceramic-plate-5966441/

உடல் நலத்திற்கு அத்தியாவசியமான மூன்று பேரூட்டச்சத்துகளில் ஒன்றான புரதம் நம் உடலின் ஒவ்வொரு அணுவிலும் இருக்கிறது.  ஒரு கிராம் புரதம் நான்கு கலோரிகளைத் தருகிறது. புரதம், நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்க உதவுகிறது. உடலிலுள்ள அணுக்களின் அமைப்பிலும் இயக்கத்திலும் புரதம் முக்கிய பங்காற்றுகிறது. திசுக்கள் மற்றும் தசைகளின் வளர்ச்சிக்கும் பராமரிப்புக்கும் இது உதவுகிறது. சிவப்பு இரத்த அணுக்கள் உருவாக்கத்திலும் புரதம் முக்கிய பங்காற்றுகிறது என்று ஆய்வு முடிவு ஒன்று அறிவிக்கிறது.

அமினோ அமிலங்கள்

புரதங்களின் கட்டுமானக் கூறுகள் (building blocks) என்று அழைக்கப்படும் 20 வகை அமினோ அமிலங்கள் நம் உடல் நலத்துக்கு இன்றியமையாதவையாகும்.  ஹார்மோன்களின் சுரப்புகள் மற்றும் இயக்கம், நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்தல், தசை வளர்ச்சிக்கு துணை செய்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகளை அமினோ அமிலங்கள் செய்கின்றன. இந்த அமினோ அமிலங்களில் 9 வகையான அமினோ அமிலங்கள் உடலால் உருவாக்கப்பட முடியாதவை என்பதால் இவை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த அத்தியாவசிய அமினோ அமிலங்களை நாம் உணவிலிருந்துதான் பெற முடியும். ஆக, சமச்சீரான உணவு எடுப்பது மிகவும் அவசியம்.

அத்தியாவசிய அமினோ அமிலங்கள்:

  • Histidine
  • Isoleucine
  • Leucine
  • Lysine
  • Methionine
  • Phenylalanine
  • Threonine
  • Tryptophan
  • Valine

அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் தரக் கூடிய உணவுகள் முழுமையான புரத உணவுகள் என்று அழைக்கப்படுகின்றன. இறைச்சி, மீன், முட்டை போன்ற அசைவ உணவுகளும் சீமைத் திணை, பப்பரை (மரகோதுமை) போன்ற சைவ உணவுகளும் முழுமையான புரதங்களாகும்.

புரதங்களின் வகைகள்

புரதங்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ப அவை வகை  பிரிக்கப்படுகின்றன. அவற்றுள் சில:

நொதிகள் (Enzymes): உடல் முழுவதும் ஏற்படக் கூடிய பல்வேறு ரசாயன மாற்றங்களில் பங்கு பெறுகின்றன.

பிறபொருளெதிரி (Antibodies): பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளிடமிருந்து உடலைப் பாதுகாக்கின்றன.

சுரப்பு புரதம்: இந்த வகை புரதம், மெசெஞ்சர் புரதம் என்றும் அழைக்கப்படுகிறது. இது, உடலியக்கத்துக்கு உதவும் வகையில் உடல் முழுவதற்குமான சமிக்ஞைகளை அனுப்புகிறது.

AminoAcids
தினசரி புரதம் எடுக்க வேண்டிய அளவு

பொதுவாக, நாம் உண்ணும் உணவில் 15% முதல் 20% வரை புரதம் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. 

நம் உடல் புரதச் சத்தை சேமித்து வைக்காது. நாம் உண்ணும் உணவில் தேவைக்கு அதிகமான புரதம் இருந்தால், உடல் அதனை ஆற்றலாக பயன்படுத்தும் அல்லது கொழுப்பாக சேமித்து வைக்கும். எனவே, நாம் ஒவ்வொரு வேளை உணவிலும் புரத உணவுகளை சேர்த்துக் கொள்வது அவசியம்.

ஆய்வு ஒன்றின்படி, தசை திரட்சி மற்றும் எலும்பு நலத்தைப் பராமரிக்கத் தேவையான இயக்கங்களுக்கு, பின்வரும் அளவில் புரதம் எடுக்க வேண்டும்:

குறைந்த அளவு உடற்பயிற்சி செய்வோர் – 1 கிலோ உடல் எடைக்கு 1 கிராம் புரதம் 

மிதமான அளவு உடற்பயிற்சி செய்வோர் – 1 கிலோ உடல் எடைக்கு 1.3 கிராம் புரதம்

தீவிர உடற்பயிற்சி செய்வோர் – 1 கிலோ உடல் எடைக்கு 1.6 கிராம் புரதம்

புரதத்தின் நன்மைகள்

புரதத்தின் முக்கிய பலன்களில் சில:

  • தசை திரட்சி மற்றும் தசை வலுவை அதிகரிக்க உதவுகிறது. தசை தளர்வைப் போக்குகிறது.
  • சீரான எடை பராமரிப்புக்கு உதவுகிறது.
  • எலும்பு நலத்தைப் பராமரிக்கிறது
  • நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்கிறது
  • புரதம் உட்கொள்ளுவதைப் பற்றிய ஆய்வு ஒன்றின்படி, புரதம் அதிக இரத்த அழுத்தத்தைக் குறைத்து இருதய நோய்களிலிருந்து  உடலைப் பாதுகாக்கிறது
  • வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது
  • நோய்த் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கிறது
  • இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது
  • அத்தியாவசிய அமினோ அமிலங்களை உருவாக்க உதவுகிறது. 
  • தேவையில்லாமல் உருவாகும் பசி உணர்வைப் போக்குகிறது
  • பரு உள்ளிட்ட சரும பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுக்க உதவுவதாகவும், வயது முதிர்ந்த தோற்றத்தை ஒத்திப் போட உதவுவதாகவும் ஆய்வு ஒன்று அறிவிக்கிறது.
  • கல்லீரல் கொழுப்பு நோய் ஏற்படும் சாத்தியத்தைக் குறைக்கிறது. குறைவான புரதம் எடுப்பதற்கும் கல்லீரல் கொழுப்பு நோய் உண்டாவதற்கும் தொடர்பு இருப்பதாகக் கேம்ப்ரிட் பல்கலைக்கழக அறிவுப்பு கூறுகிறது.
புரத குறைபாடின் அறிகுறிகள்

உடலில் புரதச் சத்து குறைவதால் ஏற்படும் அறிகுறிகளில் சில:

  • நகங்கள் மற்றும் தலைமுடி பலவீனமடைதல்
  • தசை வளர்ச்சி குறைதல்
  • உடல் பலவீனமாய் உணர்தல்
  • அடிக்கடி பசி உணர்வு ஏற்படுதல்
  • குழந்தைகளில் வளர்ச்சி குறைபாடு ஏற்படுதல்
  • இரத்த சோகை உண்டாதல்
  • குறைவான நோய் எதிர்ப்பு திறன் காரணமாய் சுரம், நோய்த் தொற்று போன்றவை உண்டாதல்
  • நீர்கட்டு
  • கல்லீரல் கொழுப்பு நோய் 
புரதம் அதிகமுள்ள உணவுகள்

புரதச் சத்து நிறைந்துள்ள உணவுகளில் முக்கியமான சில:

  • முட்டை
  • பால் பொருட்கள்
  • கடல் உணவுகள்
  • இறைச்சி
  • பருப்பு வகைகள்
  • பாதாம், வால்நட் போன்ற கொட்டை வகைகள்
  • கொய்யா, பீச் உள்ளிட்ட சில பழங்கள்
  • தண்ணீர் விட்டான் கிழங்கு, மஞ்சள் பூசணி உள்ளிட்ட சில காய்கள்
  • டோஃபு
  • பப்பரை
  • சீமை திணை
  • துளசி விதைகள்
  • சியா விதைகள்

பொதுவாக, முழுமையான புரதம் பெரும்பாலும் அசைவ உணவுகளில் கிடைக்கப் பெற்றாலும், அசைவம் உண்ணாதவர்களும் தங்களுக்குத் தேவையான அளவு புரதத்தை சைவ உணவுகளிலிருந்து பெற முடியும்.

சைவ உணவுகள் மூலம் எவ்வாறு தேவையான புரதத்தைப் பெற முடியும் என்பது குறித்து பல்வேறு சிறந்த நூல்கள் வெளிவந்திருக்கின்றன. இணையதளத்தில் புரதம் நிரம்பிய சைவ உணவுகள் குறித்து வல்லுநர்கள் எழுதியுள்ள புத்தகங்கள் பயனுள்ள தகவல்களைத் தருகின்றன.

உணவு சார்ந்த முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்னர் உங்களின் மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.

Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் http://www.youtube.com/@PetsDiaryandMomsToo என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.

அசீரணக் கோளாறுகளைப் போக்கும் எசன்சியல் எண்ணெய்கள்

பல வகையான நோய்களுக்கு செரிமானக் கோளாறு  மூல காரணமாக விளங்குகிறது.  இயற்கையான முறையில் அசீரணக் கோளாறுகளைப் போக்க எசன்சியல் எண்ணெய்கள் உதவுவதை பல்வேறு ஆய்வுகளும் நிரூபிக்கின்றன. முந்தைய

Read More »

கரிநீரகியின் நன்மைகள் மற்றும் கரிநீரகி குறைபாட்டின் அறிகுறிகள்

சமச்சீர் உணவின் நன்மைகள்; பழந்தமிழர் வாழ்வில் சமச்சீர் உணவு பற்றிய எங்களின் முந்தைய பதிவை படித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். சமச்சீர் உணவின் முக்கிய அங்கங்களில் ஒன்றான கரிநீரகியின்

Read More »

சமச்சீர் உணவின் நன்மைகள்; பழந்தமிழர் வாழ்வில் சமச்சீர் உணவு

சமச்சீர் உணவு என்கிற பதம் சமீப வருடங்களில் மிகவும் பிரபலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், காலம் காலமாக நம் முன்னோர்கள், சமச்சீரான உணவை இயல்பான உணவுப் பழக்கமாகவே வைத்து,

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்