உடல் மன ஆரோக்கியம்

எட்டு வடிவ நடைப்பயிற்சியின் அற்புத பலன்கள்

கொரோனா காலக்கட்டத்தில் மொட்டை மாடியைத் தன் வசமாக்கித் தினமொரு ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் ‘online class’ பிள்ளைகளுக்குப் போட்டியாக, ‘work from home’ பெற்றோர்களும் மொட்டை மாடியைப் புகலிடமாக்கிக் கொண்டு நடைப்பயிற்சி, யோகா போன்ற பயிற்சிகளில் காலை / மாலை வேளைகளில் ஈடுபடுகின்றனர்.  அதுவும் கடந்த இரண்டு மூன்று வாரங்களாக தமிழ்நாடு லாக்டவுனால் தெருக்களில் நடைப்பயிற்சி செய்ய முடியாதவர்கள், வீட்டு மொட்டைமாடியே கதியாகிப் போயிருக்கிறார்கள். ஆக, மீண்டும் மொட்டை மாடி ஒரு புது அவதாரம் எடுத்துள்ளது. நடைப்பயிற்சியினால் பல்வேறு நன்மைகள் உண்டு என்றாலும், எட்டு வடிவ நடைப்பயிற்சியைப் பயில்வதால் மேலும் கூடுதலான பலன்கள் கிடைக்கும்.

நடைப்பயிற்சி நன்மைகள் பற்றி அறிய, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

திறந்தவெளி நடைப்பயிற்சியை சுவாரசியமாக்கவும், அதிஉபயோகமாக்கவும் சில வழிகள் பற்றிப் படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

எட்டு வடிவ நடைப்பயிற்சி என்றால் என்ன?

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் சித்தர்கள் அருளிச் சென்ற பல்லாயிரக்கணக்கான மருத்துவ முறைகளில் எட்டு வடிவ நடைப்பயிற்சியும் ஒன்று. இதையே ஆங்கிலத்தில் Infinity Walking என்று அழைக்கிறார்கள்.

Thank you Devi Hamsika

சுருக்கமாகச் சொல்வதென்றால் எட்டு வடிவத்தில் நடப்பதுதான் எட்டு வடிவ நடைப்பயிற்சி. ஆனால், இதற்கென விதிமுறைகள் உள்ளன:

 • எட்டு வடிவத்தை வடக்கு தெற்கு திசையாக வரைந்து கொள்ள வேண்டும். நீளம் 12 முதல் 16 அடி வரையிலும், அகலம் 6 அடி முதல் 8 அடி வரையிலும் இருக்க வேண்டும்.
 • தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நடக்கத் தொடங்க வேண்டும். படத்தில் உள்ள 1-ம் எண்ணில் தொடங்கி 2, 3, 4, 5, 6 வரை நடந்து மீண்டும் 1-ம் இடத்திற்கு வர வேண்டும். இவ்வாறு 15 நிமிடங்களுக்கு நடந்த பின்னர் 1-ல் தொடங்கி 6, 5, 4, 3, 2 வரை நடந்து மீண்டும் 1-ம் இடத்திற்கு வர வேண்டும். இவ்வாறு 15 நிமிடங்களுக்கு நடக்க வேண்டும்.
 • சீரான வேகத்தில் நடக்க வேண்டும்.
 • வெறும் கால்களின் நடப்பது மிகச் சிறந்த பலன்களைத் தரும்.
 • வெறும் வயிற்றில் நடக்கவும். காலை, மாலை என இரு வேளைகளிலும் நடக்கலாம்.

எட்டு வடிவ நடைப்பயிற்சியினால் ஏற்படும் பலன்கள்

எட்டு வடிவ நடைப்பயிற்சியால் ஏற்படும் நன்மைகளில் சில:

 • வெறும் கால்களின் நடப்பதால் பாதங்களில் உள்ள வர்மப் புள்ளிகள் தூண்டப் பெற்று உடல் உள்ளுறுப்புகளின் செயல்பாடு மேம்படுத்தப்படுகிறது.
 • சளியைப் போக்குகிறது.
 • ஆஸ்துமா உள்ளிட்ட மூச்சுக் கோளாறுகளை சரி செய்கிறது.
 • நுரையீரல் நலத்தைப் பாதுகாக்கிறது.
 • இருதய நலனைப் பாதுகாக்கிறது.
 • உடலின் ஆற்றலை அதிகரிக்கிறது.
 • செரிமான மண்டலத்தின் இயக்கத்தை சீர் செய்கிறது.
 • மலச்சிக்கலைப் போக்குகிறது.
 • இரத்த அழுத்தத்தைச் சீராக வைக்க உதவுகிறது.
 • இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது.
 • ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட தலைவலி பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
 • மூளைத் திறனை மேம்படுத்துகிறது.
 • கண் பார்வையைக் கூர்மையாக்குகிறது.
 • காது கேட்கும் திறனை அதிகப்படுத்துகிறது.
 • அதிக உடல் எடையைக் குறைக்கிறது.
 • தைராய்டு பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது.
 • தலைமுதல் குதிகால் வரை உடல் முழுவதிலும் வலியைப் போக்குகிறது.
 • மூட்டுகளைப் பலப்படுத்துகிறது; மூட்டுப் பிரச்சினைகளை குணப்படுத்துகிறது.
 • பாத வெடிப்பைப் போக்குகிறது.
 • பித்தப்பை மற்றும் சிறுநீரகத்திலுள்ள கற்களைக் கரைக்கிறது.
 • சிறுநீரகக் கோளாறுகளைக் குணமாக்குகிறது.
 • தூக்கமின்மையைப் போக்குகிறது.
 • இளமையான தோற்றத்தைத் தருகிறது.
 • மன அழுத்தத்தைப் போக்குகிறது; மனதில் அமைதியை ஏற்படுத்துகிறது.

குறிப்பு

கர்ப்பிணிப் பெண்கள், சமீபத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் எட்டு வடிவ நடைப்பயிற்சியைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

எட்டு வடிவ நடைப்பயிற்சியின் போது பேசுவதைத் தவிர்த்து நடையிலும் மூச்சிலும் மனதை செலுத்த வேண்டும்.

இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். பல்வேறு நோய்களுக்கான யோகப்பயிற்சிகள், இயற்கை முறையில் நோய் தீர்த்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் e-புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://hiiamchezhi.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

 • Subscribe

  * indicates required
 • தேடல்
 • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
 • தமிழ்