‘பத்ர’ என்ற வடமொழி சொல்லுக்கு ‘புனிதமான’ என்றும் ‘கருணையுள்ள’ என்றும் பொருள் உண்டு. பத்ராசனம் என்றால் புனிதமான ஆசனம், கருணையான ஆசனம்.
பத்ராசனம் மூலாதார சக்கரத்தை தூண்டி படைப்பாற்றல் திறனை வளர்க்கிறது. மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக் கொணர உதவுகிறது. குறிப்பாக, சிறுநீரகம், கர்ப்பப்பை ஆற்றல்களை வளப்படுத்தி மறுஉறுபத்தியை ஊக்குவிக்கிறது. பெண்களின் மாதவிடாய் பிரச்சினையை தீர்ப்பதுடன் ஆண்களின் விந்தணுக்கள் பெருக்கத்தை தூண்டுவதால் இது கருணையுள்ள ஆசனம் என்று கூறப்படுகிறது. மூலாதார சக்கரமே பிற சக்கரங்களின் நலத்துக்கு அடிப்படை.
பத்ராசனத்தின் மேலும் சில பலன்கள்
- மூச்சு கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.
- சுகப்பிரசவம் ஆக உதவுகிறது.
- சையாடிக் பிரச்சினைகளை போக்க உதவுகிறது.
- இடுப்பு பகுதியின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது.
- சிறுநீரகத்தின் நலத்தை பாதுகாக்கிறது.
- சிறுநீர் கடுப்பை போக்க உதவுகிறது.
செய்முறை
- விரிப்பில் அமரவும்.
- இரண்டு கால்களையும் மடித்து பாதங்களை ஒன்று சேர்த்து வைக்கவும்.
- கைகளால் கால் விரல்களை பற்றி மூச்சை வெளியேற்றிக் கொண்டே முன்னால் குனிந்து நெற்றியை தரையில் வைக்கவும்.
- கைகளை தலைக்கு முன்னால் நீட்டி உள்ளங்கைகளை ஒன்றாக வணக்கம் சொல்வது போல் தரையில் வைக்கவும்.
- 30 வினாடிகள் இந்த நிலையில் இருக்கவும்.
குறிப்பு
கர்ப்பிணி பெண்கள் நெற்றியை தரையில் வைக்கக் கூடாது. கைகளால் கால்களை பற்றி அமர்ந்தாலே போதுமானது.
தீவிர முட்டி வலி, முதுகுத்தண்டு கோளாறு உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.