உடல் மன ஆரோக்கியம்

சளி மற்றும் இருமலைப் போக்கும் முத்திரைகள்

முத்திரைகளின் பலன்கள் குறித்து நாம் இதற்கு முந்தைய பதிவு ஒன்றில் பார்த்திருக்கிறோம். முத்திரை குறித்த கேள்வி பதில் பகுதியையும் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். இன்று நாம் சளி மற்றும் இருமலைப் போக்கும் முத்திரைகள் பற்றி பார்க்கலாம்.

சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் கூட சளி, இருமலை யாரும் பெரிதாகப் பொருட்படுத்தியதில்லை. சளிக்கென்று வீட்டு மருத்துவம் செய்து கொண்டு சளியை சரி பண்ணிக் கொண்டாலும், ‘மண்டை உள்ள வரை சளி போகாது’, ‘சளிக்கு மருந்து சாப்பிட்டால் ஏழு நாட்களில் குணமாகும், மருந்து சாப்பிடாவிட்டால் ஒரு வாரத்தில் குணமாகிவிடும்’ போன்ற பழமொழிகளை எல்லாம் அள்ளித் தெளித்து சளி எல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்று இருந்தார்கள் – அதாவது, கொரோனா காலகட்டத்திற்கு முன்னால். ஆனால், இன்றைய நிலையில் பத்து தெரு தள்ளி யாருக்காவது சளி என்றாலும் கவலை வந்து விடுவது காலத்தின் கோலம் அல்லது கொரோனாவின் காலம் என்றுதான் சொல்ல வேண்டும்.

சளி, இருமலுக்கான முத்திரை பயிற்சிகள்

இன்றைய தேவை கருதி நாம் சளி மற்றும் இருமலுக்கான முத்திரைகளை பார்க்கலாம்.

1) சூரிய முத்திரை

பஞ்ச பூத முத்திரைகளில் வலிமையான முத்திரையான சூரிய முத்திரை உடலின் வெப்பத்தை சீராக்குகிறது.

உடலில் நெருப்பு எனும் மூலகம் அதிகமாகும்போது காய்ச்சல், அதிக இரத்த அழுத்தம், இருதய நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்நெருப்பாகிய மூலகம் உடலில் குறையும் போது சளி, மூச்சுத் திணறல், தைராய்டு குறைப்பாடுகள், சீரண கோளாறுகள், இதய கோளாறுகள் ஆகியவை ஏற்பட வாய்ப்பு உண்டு. சூரிய முத்திரை செய்வதன் மூலம் உடலின் வெப்பம் சீராக்கப்படுவதால் உடல் நலம் பாதுகாக்கப்படுகிறது.

சூரிய முத்திரையை செய்வது எப்படி?

சூரிய முத்திரையை காலை, மாலை என இரு வேளை, வேளைக்கு 15 நிமிடம் வரை பயிலலாம். இம்முத்திரையை நடந்து கொண்டும் செய்யலாம். படத்தில் ஒரு கையால் செய்வது போல் காட்டியிருந்தாலும் இரண்டு கைகளாலும் இம்முத்திரையைப் பயில வேண்டும்.

(நடைப்பயிற்சியின் பலன்களைப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்).

(நடைப்பயிற்சியை சுவாரசியமாக்குவதற்கான வழிகளைப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்).

  • கை விரல்களை நீட்டிக் கொள்ளவும்.
  • மோதிர விரலை மடித்து அதன் நுனிப்பகுதியை பெருவிரலின் கீழ் உள்ள மேட்டின் மீது வைக்கவும்.
  • பெருவிரலை மடித்து, மடித்து வைத்திருக்கும் மோதிர விரலின் மீது மெதுவான அழுத்தத்தில் வைக்கவும்.
  • மற்ற மூன்று விரல்களையும் நீட்டியவாறே வைக்கவும்.
  • முத்திரை மீது கவனம் வைக்கவும். சீரான மூச்சில் இருக்கவும்.

குறிப்பு: சுரம், அதிகக் களைப்பு உள்ள நேரங்களில் சூரிய முத்திரையைப் பயில்வதைத் தவிர்ப்பது நல்லது. கோடையின் தாக்கம் அதிகமாக இருக்கும் காலங்களில் சூரிய முத்திரையைத் தவிர்ப்பது நல்லது.

சூரிய முத்திரையின் பலன்கள்
  • உடலின் வெப்ப அளவை சீராக்குகிறது.
  • சளியைக் கரைக்கிறது.
  • இருமலைப் போக்குகிறது.
  • குறைவான தைராய்டு சுரப்பு கோளாறுகளை நீக்க உதவுகிறது.
  • சீரண மண்டலத்தின் செயல்பாடுகளை சீராக்குகிறது.
  • இதயத்தைப் பலப்படுத்துகிறது.
  • மூச்சுத் திணறல், ஆஸ்துமா, சைனஸ் உள்ளிட்ட சுவாசக் கோளாறுகளைப் போக்க உதவுகிறது.
  • வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது
  • அதிகக் கொழுப்பைக் கரைக்கிறது.
  • தொப்பையைக் குறைக்க உதவுகிறது.
  • மன இறுக்கத்தைப் போக்குகிறது.
2) ஆகாய முத்திரை

பஞ்ச பூத முத்திரைகளில் ஒன்றான ஆகாய முத்திரை அற்புதமான பலன்களைத் தரக் கூடியதாகும். தியானத்துக்கு மிகவும் உகந்த முத்திரைகளில் ஆகாய முத்திரை குறிப்பிடத்தக்கதாகும்.

உடலில் ஆகாயம் என்னும் மூலகம் அதிகமாகும் போது ‘தான்’ என்ற அகங்காரம் அதிகமாதல், மன உறுதி குன்றுதல், நிலையற்ற மனம் மற்றும் அமைதியின்மை ஆகியவற்றால் பாதிக்கப்படலாம். ஆகாயம் என்னும் மூலகம் உடலில் குறைவாக இருக்கும் போது இதய நோய், காது கோளாறுகள், எதிலும் ஈடுபாடின்மை போன்றவற்றை அனுபவிக்க நேரலாம். ஆகாய முத்திரையை பயில்வதன் மூலம் உடலில் ஆகாய மூலகத்தை சமநிலையில் வைத்து உடல், மன நலத்தை மேம்படுத்தலாம்.

ஆகாய முத்திரையைச் செய்வது எப்படி?

ஆகாய முத்திரையை ஒரு நாளில் 30 முதல் 45 நிமிடங்கள் வரை செய்யலாம். வேளைக்கு 15 நிமிடமாக செய்யலாம்.

  • பத்மாசனம், வஜ்ஜிராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும்.
  • நடு விரலின் நுனியையும் பெருவிரலின் நுனியையும் ஒன்றாக சேர்க்கவும். லேசாகத் தொட்டுக் கொண்டிருந்தால் போதுமானது.
  • மீதி விரல்களை நீட்டியவாறு வைக்கவும்.
  • கண்களை மூடிக் கொண்டு முத்திரையில் கவனம் செலுத்தவும்.
  • சீராக மூச்சு விடவும்.
ஆகாய முத்திரையின் பலன்கள்
  • சளியைப் போக்குகிறது.
  • இருதய நலனைப் பாதுகாக்கிறது.
  • அதிக இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
  • ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட தலைவலிகளைப் போக்குகிறது .
  • உடலில் உள்ள நச்சுக் கழிவுகளைப் போக்குகிறது.
  • எலும்புகளைப் பலப்படுத்துகிறது.
  • பற்களின் நலனைப் பாதுகாக்கிறது.
  • காது கேட்கும் திறனை வளர்க்கிறது. காது வலி, காது இரைச்சல் போன்ற காது உபாதைகளை நீக்குகிறது.
  • வெறுமையான மனதை சரி செய்து வாழ்வில் நாட்டத்தை ஏற்படுத்துகிறது.
  • உள்ளுணரும் ஆற்றலை அதிகரிக்கிறது.
  • மன அமைதியை வளர்க்கிறது.
3) லிங்க முத்திரை

சளி மற்றும் இருமலைப் போக்க உதவும் முத்திரைகளில் லிங்க முத்திரைக்கு சிறப்பு இடம் உண்டு.

லிங்க முத்திரையைச் செய்வது எப்படி?

 

துவக்கத்தில் லிங்க முத்திரையை ஒரு நாளில் 15 நிமிடங்கள் மட்டுமே செய்தால் போதுமானது. சிறிது காலப் பயிற்சிக்குப் பின் வேளைக்கு 15 நிமிடம் வீதம் 45 நிமிடங்கள் வரை பயிலலாம்.

  • இரு உள்ளங்கைகளையும் ஒன்று சேர்க்கவும். இடது கை பெருவிரல் அனைத்து விரல்களுக்கும் மேலே இருக்குமாறு கைவிரல்களை ஒன்றோடு ஒன்று பிணைத்துக் கொள்ளவும்.
  • இடது கை பெருவிரலை நேராக உயர்த்தவும்.
  • வலது கை பெருவிரலும் சுட்டும் விரலும் இடது கை பெருவிரலைச் சுற்றி வளைக்க வேண்டும்.
  • கண்களை மூடிக் கொண்டு முத்திரையில் மனதை வைக்கவும்.
  • மூச்சை சீராக வைக்கவும்.
லிங்க முத்திரையின் பலன்கள்
  • சளி, இருமலைப் போக்குகிறது.
  • சைனஸ் மற்றும் ஆஸ்துமாவை சரி செய்ய உதவுகிறது.
  • குளிரினால் உடலில் ஏற்படும் சில்லிப்பு மற்றும் நடுக்கம் ஆகியவற்றைப் போக்குகிறது.
  • பிட்யூட்டரி சுரப்பின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
  • தைராய்டு சுரப்பின் சீரான இயக்கத்திற்கு உதவுகிறது.
  • மலச்சிக்கலைப் போக்குகிறது.
  • சீரணத்தை மேம்படுத்துகிறது.
  • அதிகக் கொழுப்பைக் கரைக்கிறது.
குறிப்பு

லிங்க முத்திரை உடலில் வெப்பத்தை அதிகரிப்பதால், இம்முத்திரையைப் பயிலும் காலங்களில் திரவ உணவுகள் எடுப்பதை அதிகப்படுத்த வேண்டும்.

அதிக வெப்பம் உள்ள பருவங்களில் இம்முத்திரையைப் பயில்வது தவிர்க்கப்பட வேண்டும்.

சுரம் இருக்கும் போது லிங்க முத்திரையைப் பயிலக் கூடாது.

மைக்ரேன் உள்ளிட்ட தலைவலிகளைப் போக்கும் முத்திரைகள்

பொதுவாக, ஹார்மோன் பிரச்சினைகள், அசீரணம், மத்திய நரம்பு மண்டல பிரச்சினை என தலைவலி ஏற்படுவதற்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும் முத்திரை பயிற்சிகள் மூலமாகத் தலைவலியிலிருந்து நிவாரணம் பெற முடியும்.  முந்தைய பதிவு ஒன்றில் அய்ந்து

Read More »

பிராண முத்திரை

முத்திரைப் பயிற்சிகளில் மிக முக்கியமானவற்றில் ஒன்று பிராண முத்திரை. பிராண முத்திரையைப் பயில்வதன் மூலம் உடல், மன நலத்திற்கு இன்றியமையாத பிராண சக்தி, உடலில் சீரான அளவில் இருப்பதை உறுதி செய்ய முடியும். பிராண

Read More »

தூய்மைப்படுத்தும் முத்திரை

முத்திரைப் பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் செய்ய வேண்டிய முதல் முத்திரை தூய்மைப்படுத்தும் முத்திரையாகும். இம்முத்திரையை ஒரு வாரத்திலிருந்து 10 நாட்கள் வரை தினமும் 15 முதல் 45 நிமிடங்களுக்கு பழகி வர வேண்டும். ஒரு

Read More »
  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்