இதற்கு முன்னர் நாம் வீரபத்ராசனம் 1 மற்றும் வீரபத்ராசனம் 2 ஆகிய ஆசனங்களைப் பார்த்தோம். இன்று நாம் பார்க்கவிருப்பது விபரீத வீரபத்ராசனம். வடமொழியில் ‘விபரீத’ என்பதற்கு ‘மாற்று’, ‘மறுபக்கம்’ என்று பொருள். இவ்வாசனம் வீரபத்ராசனம் 2-ன் மாறுபட்ட ஆசனமாகவும் கருதப்படுகிறது. விபரீத வீரபத்ராசனம் ஆங்கிலத்தில் Reverse Warrior Pose என்று அழைக்கப்படுகிறது.

விபரீத வீரபத்ராசனம் உடல் முழுவதற்கும் ஆற்றலைத் தருகிறது. இவ்வாசனத்தில் சுவாதிட்டானம் மற்றும் மணிப்பூரக சக்கரங்கள் தூண்டப்படுவதால் தன்னம்பிக்கை வளர்கிறது, பிரபஞ்ச ஆற்றலைக் கவரும் தன்மை வளர்கிறது, மன உறுதி கூடுகிறது மற்றும் படைப்பாற்றல் பெருகுகிறது.

விபரீத வீரபத்ராசனத்தின் மேலும் சில பலன்கள்
  • நுரையீரலைப் பலப்படுத்துகிறது
  • முதுகுத்தண்டின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது
  • முதுகுத் தசைகளை உறுதியாக்குகிறது
  • தோள் மற்றும் கழுத்துப் பகுதியை பலப்படுத்துகிறது
  • நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது
  • உடல் முழுவதிலும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது
  • இடுப்புப் பகுதியின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது
  • உடல் சோர்வைப் போக்குகிறது
  • பதட்டத்தைப் போக்குகிறது
  • மன அமைதியை வளர்க்கிறது
செய்முறை
  • தாடாசனத்தில் நிற்கவும்.
  • மூச்சை வெளியேற்றியவாறு கால்களை சுமார் 3 முதல் நான்கு அடி விலக்கி வைக்கவும்.
  • வலது பாதத்தை வலது புறம் நோக்கித் திருப்பவும், இரண்டு குதிகால்களும் நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்.
  • இப்பொழுது மூச்சை உள்ளிழுத்தவாறு கைகளைத் தோள் உயரத்திற்கு பக்கவாட்டில் உயர்த்தவும்.
  • பின் மூச்சை வெளியேற்றியவாறு வலது கால் முட்டியை மடக்கவும். வலது முட்டியும் கணுக்காலும் நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். மூச்சை உள்ளிழுக்கவும்.
  • மீண்டும் மூச்சை வெளியேற்றியவாறு இடது கையை இடது முட்டிக்குக் கீழ் வைக்கவும்.
  • மூச்சை உள்ளிழுத்தவாறு, வலது கையை தலைக்கு மேல் உயர்த்தவும்.
  • உடலைச் சற்று பின்னால் வளைத்து வலது கையையும் பின் நோக்கி சாய்க்கவும்.
  • தலையை மேல் நோக்கி உயர்த்தவும்.
  • 20 வினாடிகள் இந்நிலையில் இருக்கவும்.
  • ஆரம்ப நிலைக்கு வந்து கால் மாற்றிச் செய்யவும்.
குறிப்பு

தீவிர கழுத்து வலி உள்ளவர்கள் தலையை சாய்க்காமல் நேராக வைத்து ஆசனத்தைப் பழகலாம்.

கையை மேல் நோக்கி உயர்த்துவதில் சிரமம் இருந்தால் கைகளை இடுப்பில் வைத்துப் பழகவும்.

ஆசன நிலையில் நீடிப்பது கடினமாக இருந்தால் கால்களுக்கு இடையில் உள்ள இடைவெளியைக் குறைத்துப் பழகவும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

தமிழ்