உடல் மன ஆரோக்கியம்

வெறும் கால்களில் மணலில் நடப்பதால் ஏற்படும் நன்மைகள்

நடைப்பயிற்சி தரும் நன்மைகள் மற்றும் பின்னோக்கி நடைப்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இதற்கு முன்னர் பார்த்திருக்கிறோம். இன்று வெறும் கால்களில் மணலில் நடப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம். அதற்கும் முன்னர் வெறும் கால்களில் நடப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

காலணி அணியாமல் வெறும் கால்களில் நடப்பதால் ஏற்படும் நன்மைகள்

காலணி அணியாமல் வெறும் கால்களால் நடக்கும் போது ஏற்படும் நன்மைகள் பல. அவற்றில் முக்கியமான சில நன்மைகள்:

 • காலணி போடுவதால் பெருமளவில் பயன்படுத்தப்படாத பாத தசைகள் வெறும் கால்களில் நடக்கும் போது நன்கு இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக பாதம், கணுக்கால் மற்றும் ஆடுசதைகளும் பலம் பெறுகின்றன.
 • வெறும் கால்களால் நடக்கும் போது தூக்கம் சார்ந்த பிரச்சினைகள் நீங்குவதாக ஆய்வு முடிவுகள் அறிவிக்கின்றன.
 • மேலே குறிப்பிட்டிருக்கும் ஆய்வின் மூலம் வெறும் கால்களில் நடக்கும் போது மூட்டு வலி குறைவதாகவும் தெரிய வந்துள்ளது.
 • காலணி அணியாமல் வெறும் கால்களில் நடக்கும் போது இரத்த அழுத்த அளவு சீராகிறது.
 • வெறும் கால்களில் நடக்கும் போது நோய் எதிர்க்கும் திறன் அதிகரிக்கிறது.

வெறும் கால்களில் நடப்பதாலும், பூமியோடு நேரடி தொடர்பில் ஈடுபடும் பிற நடவடிக்கைகளாலும் உண்டாகும் நன்மைகள் குறித்து விரிவாக வேறு ஒரு பதிவில் பார்க்கலாம்.

வெறும் கால்களில் மணலில் நடப்பதால் ஏற்படும் நன்மைகள்

பொதுவாகவே நடைப்பயிற்சி பல்வேறு பலன்களைத் தரும் என்றாலும் குறிப்பிட்ட வகை மேற்பரப்புகளில் நடப்பது சில சிறப்பு நன்மைகளைத் தரும். வெற்றுக் கால்களில் மணலில் நடப்பதும் அத்தகைய சிறப்புப் பலன்களைத் தருகிறது.

1) கால் தசைகள் வலுவாகின்றன

காலணிகளைப் போட்டு நடப்பதை விட வெறும் கால்களில் மணலில் நடக்க கூடுதலான ஆற்றல் தேவை. மண்ணில் கால் பதிக்கும் போது பாதங்கள் புதைவதால், கால் தசைகளின் கூடுதல் முயற்சி தேவைப்படுகிறது. இவ்வாறு நடக்கும் போது கணுக்கால்களும் பாதங்களும் அதிக பலம் பெறுகின்றன.

2) உடல் எடை குறைகிறது

சாதாரண தரையில் நடப்பதை விட மணலில் நடக்கும் போது, குறிப்பாக, வெற்றுக் கால்களில் மணலில் நடக்கும் போது, அதிக அளவு கலோரிக்கள் எரிகின்றன. இதனால் கூடுதலான திறனுடன் உடல் பருமனைக் குறைக்க உதவுகிறது.

3) பாதங்களின் நலன் மேம்படுகிறது

மணல், பாதங்களில் உள்ள இறந்த சரும அணுக்களை நீக்க உதவுகிறது. பாதங்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, பாதங்களில் உள்ள சொரசொரப்பைப் போக்கவும் உதவுகிறது.

4) பாதங்களில் உள்ள அக்குபங்க்சர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன

வெறும் கால்களில் மணலில் நடப்பதால், பாதங்களில் உள்ள அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. இதன் விளைவாக, உடலில் உள்ள சுரப்புகள் மற்றும் உறுப்புகளின் செயல்பாடுகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

5) இடுப்புப் பகுதியின் பலம் அதிகரிக்கிறது

நாம் நடக்கும், ஓடும் முறையில் இருக்கும் தவறு (wrong posture) வெறும் கால்களில் மணலில் நடக்கும் போது சரி செய்யப்படுகிறது. இதன் காரணமாக இடுப்புத் தசைகள் பலம் பெறுகின்றன.

6) மன அழுத்தம் நீங்குகிறது

மணலில் வெறும் கால்களில் நடக்கும் போது மன அழுத்தம் நீங்கி மனம் அமைதி பெறுகிறது. வெறும் கால்களில் நடக்கும் போது பூமியோடு நமக்குள்ள தொடர்பு பலமாகிறது. அது நம் உடல், மன நலத்தில் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

கடற்கரையில் நடக்கும் போது கடல் அலைகளின் ஆர்ப்பரிப்போ அமைதியான கடல் அலையின் ஓசையோ நம் மனதை கொள்ளை கொள்ளும். அத்தகைய சூழலே மன அழுத்தத்தைப் போக்கவும் மன அமைதியை உண்டாக்கவும் உதவும். 

மணலில் வெறும் கால்களில் நடக்கும் போது சவால்களை அதிகப்படுத்திக் கொள்ள சில குறிப்புகள்:

 • வேக நடைப் பந்தயம் வைத்துக் கொள்ளலாம்.
 • பின்னோக்கி நடந்து செல்லலாம்.
 • பக்கவாட்டில் சிறிது தொலைவு நடக்கலாம்

இவை எல்லாவற்றையும் விட, உங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒரு செல்லப் பிராணி இருந்தால், அவளை / அவனை உடன் அழைத்து வந்து மணலில் நடப்பது சவாலைப் பல மடங்கு அதிகப்படுத்தும்; சுவாரசியத்தையும்தான்.

கைப்பேசியை எடுத்து க்ளிக் செய்ய நிமிர்ந்தால், அதற்குள் எங்கோ தொலைவில்…

“அலையில் நடப்பதால் ஏற்படும் நன்மைகள் என்று எதுவும் எழுதி விடாதே அம்மா” என்று செழியின் மனக்குரல் கேட்கிறது.

Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் http://www.youtube.com/@PetsDiaryandMomsToo என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

 • Subscribe

  * indicates required
 • தேடல்
 • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
 • தமிழ்