மூலிகை என்றாலே ஏதோ நாட்டு மருந்து கடையில் தொங்கவிடப்படும் பொருளாகவும், உடலில் பிரச்சினை ஏற்பட்டால் மட்டுமே பயன்படுத்தக் கூடியது என்றும் இருந்த கருத்தில் சமீப காலமாக மாற்றம் ஏற்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலின் போது நிலவேம்பு அதிகமாகப் பயன்பட்டது போல், கொரோனாவின் போது கபசுர குடிநீர் பயன்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக, கொரோனா அவதாரம் எடுத்த பின், மூலிகைகளை எப்படி எல்லாம் உணவில் சேர்க்கலாம் என்று ஒரு பட்டியலே உருவாகியிருக்கிறது.
மூலிகைகளில் உள்ள compounds நோய் தீர்க்கும், நோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் மிக்கவை. தொடர்ந்து மூலிகைகளை பயன்படுத்தும் போது சளி, காய்ச்சல் தொடங்கி இருதய நோய் மற்றும் பல தீவிர நோய்கள் வரை ஏற்படாமல் தவிர்க்கலாம்.
நம் முன்னோர்களின் உணவு முறை பழக்கத்தில் மூலிகைக்கு என்று தனி இடம் கிடையாது; மூலிகையே உணவின் ஒரு பகுதியாக இருந்தது. மூலிகையின் பெருமைகளை உணர்ந்த நம் முன்னோர்கள் இயல்பாகவே அவற்றை உணவாக எடுத்தனர். ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்று ஆரோக்கியமான உணவின் மகத்துவத்தையும், சரியான உணவை உண்ணும்போது மருந்தே தேவைப்படாது என்பதையும் சித்தர்கள் வெகு எளிமையாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இப்பகுதியில், தொடர்ந்து வரும் நாட்களில் நாம் மூலிகைகள் பற்றியும், அவற்றின் பயன்பாடு, அவற்றை எவ்வாறு உணவில் சேர்ப்பது மற்றும் மூலிகைக் குடிநீர் பற்றியும் பார்க்கலாம்.