வஜ்ஜிராசனம் பற்றி முன்பே பார்த்திருப்போம். வஜ்ஜிராசனம் என்பது உடலை வைரம் போல் உறுதியாக்கும் ஆசனம் என்றும் பார்த்திருப்போம். சுப்த வஜ்ஜிராசனம் என்பது படுத்த நிலையில் வீராசனத்தில் இருப்பதாகும். வட மொழியில் ‘சுப்த’ என்றால் ‘படுத்திருத்தல்’ என்று அர்த்தம். ஆக, இது படுத்த நிலையில் வஜ்ஜிராசனம் செய்வதாகும்.

வஜ்ஜிராசனம் பற்றி படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

வஜ்ஜிராசனம் போலவே சுப்த வஜ்ஜிராசனமும் சீரணக் கோளாறுகளை சீர் செய்து சீரண உறுப்புகளை சரியாக இயங்க வைக்கிறது. வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை செம்மையாக்குகிறது. இந்த ஆசனத்தில் கால்கள் வீராசன நிலையில் இருப்பதால், இது சுப்த வீராசனம் என்றும் அழைக்கப்படுவது உண்டு. இந்த ஆசனத்தை பயிலும் முன் வஜ்ஜிராசனம், வீராசனம் ஆகிய இரண்டிலும் நல்ல பயிற்சி பெற்றிருப்பது அவசியம்.

வீராசனம் பற்றி படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

Supine Thunderbolt Pose

சுப்த வஜ்ஜிராசனத்தின் மேலும் சில பலன்கள்
  • நுரையீரலைப் பலப்படுத்துகிறது.
  • வாயுக் கோளாறைப் போக்குகிறது.
  • தொடை முதல் பாதம் வரை கால்கள் முழுவதையும் பலப்படுத்துகிறது.
  • மூட்டுகளை பலப்படுத்துகிறது.
  • தொடர் பயிற்சியில் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலிகளைப் போக்குகிறது.
  • சையாடிக் பிரச்சினையை ப்போக்குகிறது.
  • வெரிகோஸ் வெயின் (Varicose vein) எனப்படும் நரம்பு சுருண்டு வீங்கிய நிலையை சரி செய்கிறது.
  • தூக்கமின்மையை போக்குகிறது.
செய்முறை
  • வஜ்ஜிராசனத்தில் அமரவும். பின், கால்களை விரித்து வீராசன நிலைக்கு வரவும்.
  • கால் பாதங்களை கைகளால் பிடித்து கொள்ளவும்.
  • உங்கள் முன்கைகளை தரையில் வைத்து பின்னால் மெதுவாக சாயவும்.
  • மேலும் நன்றாக சாய்ந்து தரையில் படுக்கவும்.
  • இப்பொழுது உங்கள் கைகளை தலைக்கு பின்னால் கொண்டு வந்து வலது தோளை இடது கையாலும் இடது தோளை வலது கையாலும் பற்றி முன்கைகளை தரையில் வைக்கவும்.
  • 30 வினாடிகள் முதல் ஒரு நிமிடம் வரை இந்த நிலையில் இருக்கவும்.
  • குறிப்பிட்ட நேரம் இந்த நிலையில் இருந்த பின் பாதங்களைப் பற்றி எழுந்து பின் கால்களை சேர்த்து வஜ்ஜிராசன நிலைக்கு வரவும்.
குறிப்பு

பின்னால் சாய்ந்து தரையில் படுக்க முடியாதவர்கள், ஒரு தலையணை அல்லது yoga block ஒன்றை முதுகுக்கு பின்னால் வைத்து அதன் மேல் படுக்கலாம்.

வஜ்ஜிராசனம் அல்லது வீராசன நிலையில் கால்களை வைக்க கடினமாக இருந்தால் கணுக்கால்களின் கீழ் தலையணை, தடித்த விரிப்பு அல்லது yoga block வைத்து அமரவும்.

கால் முட்டியிலும், இடுப்பிலும் தீவிர பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனம் பயில்வதைத் தவிர்க்கவும்.

துளசியின் மருத்துவ பலன்களைப் பற்றி படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

தமிழ்