உடல் மன ஆரோக்கியம்

அனாகத சக்கரத்தின் பலன்கள்

Table of Contents

மனித உடலின் முக்கிய எட்டு சக்கரங்களில் (சக்கரங்கள் ஏழு அல்ல எட்டு பதிவைப் படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்) நான்காவதாக உள்ளது அனாகத சக்கரம். வடமொழியில் ‘அனாகத’ என்றால் ‘ஒலிக்கப்படாத’, என்று பொருள்; அதாவது, ஒலிக்கப்படாத ஓசையைக் குறிப்பிடுவதாக அமைகிறது. அனாகத சக்கரம் ஆங்கிலத்தில் Heart Chakra என்று அழைக்கப்படுகிறது.

இருப்பிடம்:  மார்பு மத்தி

நிறம்:  பச்சை

ஒலி:  யம்

தொடர்புடைய மூலகம்:  காற்று

தொடர்புடைய புலன்:  பார்வை

அனாகதம் கீழுள்ள சக்கரங்களான மூலாதாரம், சுவாதிட்டானம் மற்றும் மணிப்பூரகம் ஆகியவற்றையும் மேலுள்ள சக்கரங்களான விசுத்தி, ஆக்ஞா, குரு மற்றும் சகஸ்ராரம் ஆகியவற்றையும் இணைக்கிறது; பொருட்களின் மீது பற்றுள்ள வாழ்க்கையையும், அப்பற்றினைக் கடந்த உன்னதமான மனநிலையையும் இணைக்கும் பாலமாக அனாகத சக்கரம் விளங்குகிறது. அனாகத சக்கரத்தின் சீரான இயக்கத்தால் சமூகத்தோடு அன்பான பிணைப்பு ஏற்படுகிறது; வாழ்வை இரசனையோடு வாழ முடிகிறது.

இப்பதிவில் நாம் பார்க்கவிருப்பது:

  • அனாகத சக்கரத்தின் தன்மைகள் மற்றும் அனாகதத்தோடு தொடர்புடைய உறுப்புகள்
  • அனாகதம் சீராக இயங்குவதால் ஏற்படும் நன்மைகள்
  • அனாகதம் சீராக இயங்காததற்கான உடல், மன அறிகுறிகள்
  • அனாகதத்தைச் சீராக இயங்க வைக்கும் வழிகள்

அனாகத சக்கரத்தின் தன்மைகள் மற்றும் அனாகதத்தோடு தொடர்புடைய உறுப்புகள்

தன் மீதும் பிறர் மீதும் நேசம் கொள்ளுதல், பிறரின் உணர்வுகளைப் புரிந்துணர்தல், மன்னிக்கும் தன்மை கொண்டிருத்தல் ஆகிய குணங்களை நிர்வகிப்பது அனாகத சக்கரமாகும். சக உயிர்களிடத்து பரிவு, அக்கறை, இரக்கம் காட்டுதல் ஆகிய மேன்மையான குணங்களை நிர்வகிப்பதும் அனாகத சக்கரமாகும்.

எதிர்பார்ப்பற்ற அன்பைக் காட்ட வல்ல மனதை அடைய அனாகத சக்கரம் சீராக இயங்க வேண்டும். பிறரிடம் ஆழ்ந்த உறவைப் பேணுவது, நிலவும் சூழல்களை ஏற்கும் பண்பு, மாற்றங்களை ஏற்கும் பக்குவம் இவையாவும் அனாகத சக்கரத்தின் சீரான செயல்பாட்டால் சாத்தியப்படுகிறது.

உங்களின் தவறுகளையும் பிறரின் தவறுகளையும் மன்னித்து அவற்றைக் கடந்து போதல், அன்பால் சூழப்பட்டு வாழ்தல், மகிழ்வோடிருத்தல், சுற்றியுள்ள உலகோடு அய்க்கியப்படுதல் இவையாவும் உங்களின் வாழ்க்கையை உன்னத நிலைக்குக் கொண்டு செல்லும். அனாகத சக்கரத்தின் சீரான இயக்கம் இவற்றை சாத்தியமாக்கும்.

இருதயம், நுரையீரல், இரத்த ஓட்டம் மற்றும் தைமஸ் சுரப்பி ஆகியவற்றை நிர்வகிப்பது அனாகத சக்கரமாகும்.

அனாகத சக்கரம் சீராக இயங்குவதால் ஏற்படும் நன்மைகள்

கீழ்க்கண்ட அறிகுறிகள் மூலம் அனாகத சக்கரம் சீராக இயங்குவதைத் தெரிந்து கொள்ளலாம்:

  • தன்னலமற்ற அன்பு பாராட்டுதல்
  • நட்பான அணுகுமுறை கொண்டிருத்தல்
  • பரிவுடன் இருத்தல்
  • இரக்கம் காட்டுதல்
  • மன்னித்தல்
  • மென்மையான அணுகுமுறை கொண்டிருத்தல்
  • இயற்கையோடு இணக்கத்துடன் இருத்தல்
  • அமைதியான மனநிலை கொண்டிருத்தல்
  • பிறரிடமும் வாழ்க்கை மீதும் நம்பிக்கை வைத்தல்

அனாகத சக்கரம் சீராக இயங்கும் போது சக உயிர்களிடத்து நேசம் கொள்வதால் உங்களைச் சுற்றியுள்ள உலகம் அன்புமயமாகிறது. பரஸ்பர அன்பும், நம்பிக்கையும் உலகை மேலும் அழகானதாக ஆக்குவதோடு வாழ்க்கையை இரசனையோடு வாழச் செய்கிறது. தன்னலமற்ற அன்பு மேன்மையான குணத்தைச் செழுமைப்படுத்துவதால் உன்னதமான மனநிலை பிறக்கிறது; வாழ்க்கையில் அன்பும், கருணையும், மகிழ்ச்சியும், நிறைவும் நிறைகிறது.

அனாகதம் சீராக இயங்காததற்கான உடல், மன அறிகுறிகள்

கீழே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகள் மூலம் அனாகத சக்கரத்தின் இயக்கம் அளவுக்கு அதிகமாக அல்லது குறைவாக இருப்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

உடல் அறிகுறிகள்
  • இருதய கோளாறு
  • நுரையீரல் பிரச்சினைகள்
  • மார்பு வலி
  • சீரற்ற இரத்த அழுத்த அளவு
  • இரத்த ஓட்டம் சீரற்று இருத்தல்
  • மேல் முதுகு பிரச்சினைகள்
  • தோள் சார்ந்த பிரச்சினைகள்
  • குறைந்த நோய் எதிர்ப்புத் திறன்
  • தூக்கமின்மை
மன அறிகுறிகள்
  • விரோத மனப்பாங்கு
  • பொறாமை
  • கோபம்
  • அவநம்பிக்கை
  • அன்பு செலுத்தவும் அன்பை ஏற்கவும் இயலாமை
  • சோகம்
  • பழி வாங்கும் உணர்வு
  • பிறரை குற்றம் காணல்
  • பாதுகாப்பாற்ற உணர்வு
  • மன்னிக்க முடியாத தன்மை
  • மன அழுத்தம்
  • தனிமைப்படுத்தப்பட்ட உணர்வு
  • உடனிருப்பவர்களை அதீத அதிகாரம் செய்தல்
  • உணர்ச்சி சமநிலையற்ற தன்மை

அனாகத சக்கரத்தைச் சீராக இயங்க வைப்பது எப்படி?

  • அனாகத சக்கரத்தைத் தூண்டும் யோகாசனங்கள்
  • எசன்சியல் எண்ணெய்
  • சுய ஊக்கம்
  • உணவு
  • பொது விதிகள்

அனாகத சக்கரத்தைத் தூண்டும் யோகாசனங்கள்

அனாகத சக்கரத்தின் இயக்கத்தைச் சீராக்க, கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆசனங்களைத் தொடர்ந்து செய்து வரவும்:

1) ஆஞ்சநேயாசனம்

2) அர்த்த பிண்ச மயூராசனம்

3) ஊர்த்துவ தனுராசனம்

4) சக்ராசனம்

5) பரத்வாஜாசனம்

6) அதோ முக கபோடாசனம்

7) ஏக பாத இராஜகபோடாசனம்

8) இராஜ கபோடாசனம்

9) உஸ்ட்ராசனம்

10) புஜங்காசனம்

11) இராஜ புஜங்காசனம்

12) சலபாசனம்

13) சேதுபந்தாசனம்

14) ஏக பாத சேதுபந்தாசனம்

15) சதுஷ் பாதாசனம்

16) ஹலாசனம்

17) மத்ஸ்யாசனம்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆசனங்களைத் தொடர்ந்து செய்து வர உங்களின் அனாகத சக்கரத்தின் இயக்கம் செழுமையடையும்.

அனாகத சக்கரத்தைச் சீராக இயங்க வைக்கும் எசன்சியல் எண்ணெய்கள்

அனாகத சக்கரத்தின் இயக்கத்தை மேம்படுத்த பின்வரும் எசன்சியல் எண்ணெய்களில் ஒன்றைப் பயன்படுத்தவும்:

  • Bergamot
  • Cedarwood
  • Cypress
  • Geranium
  • Jasmine
  • Lavender
  • Neroli
  • Palmarossa
  • Rosemary
  • Sandalwood
  • Spikenard
  • Sweet marjoram
  • Sweet orange
  • Ylang Ylang

எசன்சியல் எண்ணெயை carrier எண்ணெயோடு கலந்து diffuser-ல் ஊற்றி அதன் வாசனையை நீங்கள் இருக்கும் அறையில் பரவச் செய்யவும். எசன்சியல் எண்ணெய்யை carrier எண்ணெயோடு கலந்து அனாகத சக்கரத்தின் இருப்பிடத்தில் தடவலாம் அல்லது பாதங்களில் தடவி மசாஜ் செய்யலாம்.

சுய ஊக்கம்

பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் சுய ஊக்கம் அற்புத பலன்களைத் தரும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. சுய ஊக்க வாக்கியங்களை நம்பிக்கையோடு தொடர்ந்து சொல்வதால் உங்களின் நேர்மறையான விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

அனாகத சக்கரத்திற்கான சுய ஊக்க வாக்கியங்கள்
  • நான் என்னை நேசிக்கிறேன்
  • நான் அனைவரிடமும் அன்புடன் இருக்கிறேன்
  • அனைத்து உயிர்களிடமும் நான் பரிவு காட்டுகிறேன்
  • நான் நேசிக்கப்படுகிறேன்.
  • என் தவறுகளையும் பிறர் தவறுகளையும் நான் மன்னிக்கிறேன்
  • நான் அனைத்து உயிர்களிடமும் நல்ல இணக்கத்தோடு இருக்கிறேன்
  • எப்பொழுதும் நான் அன்பையே தேர்ந்தெடுக்கிறேன்
  • என் மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கிறது
  • நான் அமைதியாக வாழ்கிறேன்

சுய ஊக்க எண்ணங்களை நீங்களாகவே உருவாக்கலாம். பிறிதொரு நாளில் இதை விரிவாகப் பார்க்கலாம்.

அனாகத சக்கரத்திற்கான உணவு

அனாகத சக்கரத்தின் சீரான இயக்கத்திற்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளில் ஒன்றையேனும் உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளவும்:

  • கீரை வகைகள்
  • வெள்ளரிக்காய்
  • பச்சை பட்டாணி
  • பச்சை எலுமிச்சை
  • குடைமிளகாய்
  • முட்டைகோஸு
  • காலிஃபிளவர்
  • கொத்துமல்லி
  • புதினா
  • துளசி
  • பச்சை பூக்கோசு (Broccoli)
  • பச்சை ஆப்பிள்
  • கொய்யா
  • பசலிப்பழம் (Kiwi fruit)
  • ஸ்பைருலினா
  • பச்சை தேயிலை தேநீர் (Green tea)

அனாகத சக்கரத்தின் சீரான இயக்கத்திற்கான பொது விதிகள்

கீழே குறிப்பிடப்பட்டுள்ள பொது விதிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் அனாகத சக்கரத்தின் இயக்கத்தை மேம்படுத்தலாம்.

  • மனம் விட்டு சிரியுங்கள். மகிழ்ச்சியான உணர்வுகளைப் பிறருடன் பரிமாறிக் கொள்ளுங்கள். அடுத்தவரின் மகிழ்ச்சியையும் அது போல மகிழ்வுடன் இரசியுங்கள்.
  • மனதார அன்பு செலுத்துங்கள். அவ்வாறே பிறரின் அன்பை ஏற்றுக் கொள்ளுங்கள்.
  • பிறரின் தவறுகளை மன்னியுங்கள்; உங்களின் தவறுகளுக்கு மன்னிப்புக் கோருங்கள்.
  • தினமும் ஒரு கனிவான, பரிவான உரையாடல் அல்லது செயலில் ஈடுபடுங்கள்.
  • பிறரை உங்கள் தேவைக்காகப் பயன்படுத்தாதீர்கள். அடுத்தவர் செய்யும் சிறு உதவிக்கும் மனதார நன்றி செலுத்துங்கள்.
  • பசுமையான சூழலில் தினமும் சிறிது நேரம் செலவிடுங்கள். வீட்டுத் தோட்டமாக இருந்தாலும், அருகில் உள்ள பூங்காவாக இருந்தாலும், சிறிது நேரத்தை தினசரி அங்கு செலவிடுங்கள். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பசுமையான பகுதிக்குச் சுற்றுலா செல்லுஙள்.
  • உங்கள் வீட்டில் கண்ணில் படும் இடங்களில் பச்சை நிறப் பொருட்களை வைக்கவும். வீட்டிற்குள் செடிகள் வளர்க்க வாய்ப்பிருந்தால் சிறப்பு.
  • அனாகத சக்கரத்தை மனதில் வைத்து தியானம் செய்யுங்கள்.

மூலாதார சக்கரத்தின் பலன்கள் மற்றும் மூலாதார சக்கரத்தைத் தூண்டும் முறைகள் பற்றிப் படிக்க, இந்தப் பக்கத்துக்குச் செல்லவும்.

சுவாதிட்டான சக்கரத்தின் பலன்கள் மற்றும் சுவாதிட்டான சக்கரத்தைத் தூண்டும் முறைகள் பற்றிப் படிக்க, இந்தப் பக்கத்துக்குச் செல்லவும்.

மணிப்பூரக சக்கரத்தின் பலன்கள் மற்றும் மணிப்பூரக சக்கரத்தைத் தூண்டும் முறைகள் பற்றிப் படிக்க, இந்தப் பக்கத்துக்குச் செல்லவும்.

Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் http://www.youtube.com/@PetsDiaryandMomsToo என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்