உடல் மன ஆரோக்கியம்

போற்றி உணின்

Share on facebook
Share on twitter

வனப்பு என்பது வெறும் உடல் சார்ந்தது அல்ல; வெளித்தோற்றத்தைச் சார்ந்ததும் அல்ல என்பதை நாம் அறிவோம். வனப்பு என்பது நம் உடல் மற்றும் மன நலன்.  சத்தான உணவு, உறக்கம், பயிற்சி, ஓய்வு, மன நிலை என இவை யாவுமே நம் உடல், மன வனப்பைச் செழுமைப்படுத்துகின்றன.

மண்ணுக்கேற்ற உணவு முறையைப் பின்பற்றி வாழும் போது உடல் நலம் சிறப்பது மட்டுமல்லாமல் மரபணுக்கள் வழியாகக் காலம் காலமாக கடத்தப்பட்டு வரும் அறிவும், பண்பும், வாழ்க்கை முறையும் நம்மில் இயல்பாகவே நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

‘போற்றி உணின்’ என்ற இப்பகுதியில் தமிழரின் பாரம்பரிய உணவுகள் இடம் பெறும். மேலும், காலை, மதியம், மாலை என மூன்று வேளை உணவுத் தயாரிப்பிற்க்கான சில உதவிக் குறிப்புகளும் இடம் பெறும். இப்பகுதியில் தொகுக்கப்படும் உணவு வகைகளைப் பல்வேறு இனங்கள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்களும் தங்களின் பாரம்பரிய முறைகளில் தயாரித்துக் கொண்டிருக்கக் கூடும். அவ்வாறான உணவு வகைகளைப் பற்றிய தகவல்களையும் அனைவரும் பகிரலாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

திருவள்ளுவரின் திருக்குறளைக் குறிப்பிடாமல் இப்பகுதியை நிறைவு செய்ய முடியாது.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்.

                                                                          – திருக்குறள் 942

இத் திருக்குறளின் பொருள், “முன் உண்ட உணவு செரித்துள்ளதை உறுதி செய்து கொண்டு அடுத்த வேளை உணவு உண்ணும் பழக்கத்தை மேற்கொண்டால் உடலுக்கு மருந்து என்று எதுவும் தேவைப்படாது.”

இதை விட, நோயற்ற வாழ்வுக்காகக் கடைப்பிடிக்க வேண்டிய உணவுப் பழக்கத்தைச், சுருக்கமாக, ஆனால் தெளிவாகவும் சிறப்பாகவும் யாரும் கூறியிருக்கிறார்களா என்று தெரியவில்லை.

திருவள்ளுவர் கூறுவது போல், அருந்தியது அற்ற பின், அதாவது, சீரணித்தப் பின் அடுத்த வேளை  உணவை உண்டால்தான் உடலில் உயிராற்றல் உண்டாகும். அப்படி சீரணம் செழிப்பாக அமைய வேண்டுமானால் நம் உடல் அணுக்களில் ஆண்டாண்டு காலமாய் கலந்திருக்கும் நமது பாரம்பரிய உணவு மற்றும் சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும் என்பதே போற்றி உண்பதாகும்.

‘போற்றி உணின்’ என்னும் இப்பகுதியில் கொடுக்கப்படும் உணவு வகைகளையும் திருவள்ளுவரின் கூற்றுப்படியே போற்றி உண்டால், மருந்தில்லாத பெருவாழ்வு வாழலாம்.

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • Herbal Facial Glow

  • Deal of the Day

  • தமிழ்