உடல் மன ஆரோக்கியம்

யோகா குறித்த கேள்வி பதில் – பகுதி 2

நேற்றைய தினம் யோகா குறித்த சில கேள்விகளைப் பார்த்தோம். இன்று மேலும் சில கேள்விகள் மற்றும் அவற்றிற்கான விடைகளை பார்ப்போம்.

11) மெத்தையில் ஆசனம் பயிலலாமா?

சம தரையில் விரிப்பு அல்லது yoga mat போட்டு அதன் மேல் ஆசனம் செய்வதே சிறந்தது. உடல் நிலை பிரச்சினையால் தரையில் உட்கார முடியாத சூழலில் அவசியமான மற்றும் சாத்தியமுள்ள ஆசனங்களை மெத்தையில் பயிலலாம்.

12) முதலில் செய்ய வேண்டியது யோகாவா பிராணாயாமமா?

முதலில் யோகாசனங்கள் செய்து முடித்து, பின் ஓய்வாசனத்தில் ஓய்வெடுக்க வேண்டும். அதைத் தொடர்ந்தே பிராணாயாமம் செய்வது நல்லது.

13) யோகா பயிற்சி செய்த அடுத்த நாள் காலை  அடி வயிறு, தொடை, இடுப்பு மற்றும் அடி முதுகில் ஒருவிதமான வலி ஏற்படுகிறது. இவ்வாறான சூழலில் அடுத்த நாள் ஆசனம் பயிலலாமா?

ஆசனம் பயிலத் தொடங்குபவர்களுக்கு இப்படிப்பட்ட வலி தோன்றுவது இயல்பானதுதான். பின் வளைதல், பக்கவாட்டில் வளைதல், படுத்து கால் உயர்த்துதல் போன்ற பல செயல்பாடுகளை நாம் பொதுவாக செய்வதில்லை. அதனால், இப்பகுதிகளில் ஆசனம் செய்த மறு நாள் வலி ஏற்படுவது இயல்புதான். ஆனால், தொடர்ந்து பழகும் போது இவ்வலி மறைந்து விடும். அதனால், தீவிர வலி அல்லது கடுமையான அசவுகரியம் இருந்தால் மட்டுமே மறு நாள் ஓய்வெடுக்கவும்.

14) மாதவிடாய் காலத்தில் பிராணாயாமம் செய்யலாமா?

சில வகை பிராணாயாமங்களை மாதவிடாயின் போதும் செய்யலாம். பொதுவாக மூச்சை வெளியே அல்லது உள்ளே நிறுத்தும் பிராணாயாமம் மற்றும் வேகமாகச் செய்யும் கபாலபாதி போன்ற பிராணாயாம வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

15) உண்ணா நோன்பு இருக்கும் தினங்களில் யோகா செய்யலாமா?

கண்டிப்பாக செய்யலாம். உண்ணா நோன்பு இருந்தாலும் உங்களின் அன்றாட பணிகளில் ஈடுபடுவது போல் யோகப்பயிற்சியிலும் ஈடுபடலாம். ஒரு வேளை மட்டுமே உணவு எடுப்பதாக இருந்தால் உணவருந்துவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் ஆசனம் செய்யலாம். கடுமையான யோகாசனங்களைத் தவிர்த்து மிதமான பயிற்சி செய்யலாம்.

16) தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் யோகா செய்யலாமா?

தாய்ப்பால் கொடுப்பவர்கள் யோகா செய்வதால் தாய்ப்பால் அதிக அளவு சுரக்கும்; ஆகையால், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் கண்டிப்பாக ஆசனப் பயிற்சியில் ஈடுபடலாம்.

17) சளி இருக்கும் போது யோகா செய்யலாமா?

சளி இருக்கும் போது உடலை வருத்தாத அளவில் யோகா பயிலலாம். நின்று செய்யும் ஆசனங்கள் மற்றும் ஓய்வு ஆசனம் செய்வது நல்லது.

18) குழந்தை பெற்றுக் கொள்ளும் முயற்சியில் உள்ள பெண்கள் ஆசனம் செய்யலாமா?

ஆசனம் செய்வதால் குழந்தை பேறு உண்டாக சாத்தியம் உண்டு. ஆகையால் குழந்தை பெற்றுக் கொள்ளும் திட்டம் உள்ளவர்கள் ஆசனம் பயில்வதால் நன்மைகள் ஏராளம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்